சந்தானத்தின் மாறுபட்ட நடிப்பில், மனோஜ் பீதா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘ஏஜென்ட் கண்ணாயிரம்.’
படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக ரியா சுமந்த் நடிக்க, முனிஷ் காந்த், குக் வித் கோமாளி புகழ், குரு சோமசுந்தரம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
Labyrinth film productions நிறுவனம் தயாரித்துள்ள இந்த படம் வரும் 25-ம் தேதி வெளியாகவுள்ளது. அதையொட்டி படத்தின் இயக்குநர் மனோஜ் பீதா பத்திரிகையாளர்களிடம் படம் பற்றி பகிர்ந்து கொண்ட தகவல்கள்…
தெலுங்கு முன்னணி இயக்குனரான அனுதீப் இயக்கத்தில், நடிகர் நவீன் பொலிஷெட்டி நடிப்பில் வெளியாகி பிளாக்பாஸ்டர் வெற்றி பெற்ற ‘ஏஜென்ட் சாய் ஸ்ரீனிவாச ஆத்ரேயா’ படத்தின் தமிழ் ரீமேக்தான் இந்த படம்.
அந்த தெலுங்கு படத்தின் உரிமை என்னிடம் இருந்ததை கேள்விப்பட்ட சந்தானம் சார் என்னை அணுகினார். தெலுங்கில் இருப்பது போலவே தமிழில் இந்த கதையை நான் சொல்ல விரும்பவில்லை. காமெடி மற்றும் பஞ்ச் இரண்டையும் தான் உங்கள் ரசிகர்கள் உங்களிடமிருந்து எதிர்பார்ப்பார்கள். அதை தவிர்த்து வேறு ஒரு பரிமாணத்தில் சந்தானத்தை இந்த படத்தில் பார்க்க நான் விரும்புகிறேன் என்று அவரிடம் சொன்னேன். அவரும் ஒத்துக் கொண்டு இந்த கதைக்குள் வந்தார்.
இதில் வழக்கமான சந்தானத்தை பார்க்க முடியாது. அதிகம் பேசாமல், அதேசமயம் அதிக அளவில் எமோஷன்களை காட்டி நடித்துள்ளார்.
தாய்க்கும், மகனுக்குமான பாசப் போராட்டம். மகனின் கதாபாத்திரம் ஒரு டிடெக்டிவ் ஏஜென்ட். அப்படித்தான் இந்த கதையை நான் கட்டமைத்துள்ளேன். அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர்.
யுவன் சங்கர் ராஜாவின் இசை படத்திற்கு பெரிய பலமாக அமைந்துள்ளது. குறிப்பாக ஒப்பாரி பாடல் ரசிகர்களை பெருமளவில் கவர்ந்துள்ளது.
என்னுடைய முதல் படம் ‘வஞ்சகர் உலகம்.’ அதற்கு நீங்கள் கொடுத்த ஆதரவைப்போல இந்த படத்திற்கும் தர வேண்டும்!


