ஜெயம் ரவி நடிப்பில், எம் . ராஜேஷ் இயக்கத்தில், ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெய்ன்மென்ட்’ தயாரித்துள்ள ‘பிரதர்’ திரைப்படம் அக்டோபர் 31 தீபாவளின்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.
முன்னதாக சென்னையில் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இயக்குநர் எம். ராஜேஷ், நடிகர்கள் ஜெயம் ரவி, நட்டி என்கிற நட்ராஜ், விடிவி கணேஷ், நடிகை பூமிகா சாவ்லா, ஒளிப்பதிவாளர் விவேகானந்த் சந்தோஷம், படத்தொகுப்பாளர் ஆசிஷ் ஜோசப், கலை இயக்குநர் ஆர் .கிஷோர், சண்டை பயிற்சி இயக்குநர் ஸ்டன்னர் சாம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் ஜெயம் ரவி பேசுகையில், ”பிரதர் திரைப்படம் நல்லதொரு டீசன்டான மூவி. லீனியர் நரேஷனில் அழகான படமாகவும் குடும்பம் முழுவதும் மகிழ்ச்சி அடையும் வகையிலும் பிரதர் உருவாகி இருக்கிறது. ஒரு தீபாவளி படத்திற்கு என்னென்ன டிக் மார்க் வேண்டுமோ, அவை எல்லாம் ஒன்றாக சேர்ந்திருக்கும் படம் தான் பிரதர். இந்தப் படத்தை உருவாக்கும் போதும் நாங்கள் அனைவரும் சந்தோஷமாகவே பணியாற்றினோம்.
இந்தப் படத்தில் படப்பிடிப்பு நடைபெறும் தருணங்களில் நாங்கள் அனைவரும் ஒரு குடும்பமாகத்தான் இருந்தோம். தயாரிப்பாளர் சுந்தர் எங்கள் அனைவருக்கும் அனைத்து வசதிகளையும் அளித்தார். படப்பிடிப்பு நடைபெற்ற தருணத்தில் பூமிகாவின் பிறந்தநாள் வந்தது, அதற்காக படப்பிடிப்பு தளத்தில் கேக் வெட்டி கொண்டாடினோம். படப்பிடிப்பு நடைபெற்ற நாட்கள் முழுவதும் அனைவரிடமும் அன்பும், அக்கறையும் இருந்தது. இந்தப் படத்தை நடித்த நடிகர்களையும் பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்களையும் மறக்க முடியாது. கடுமையாக உழைப்பில் உருவான திரைப்படம் இது.
சண்டை பயிற்சி இயக்குநர் ஸ்டன்னர் சாமை சிறுவயதில் இருந்தே தெரியும். பேராண்மை படத்தில் மரத்தின் மீது ஓடும் காட்சி ஒன்று இருக்கும். அந்த காட்சியில் நான் நடிக்க தயங்கிய போது.. அவர் அவர் அந்த மரத்தின் மீது ஓடி காண்பித்து நம்பிக்கையை உண்டாக்கினார். இந்த படத்தில் அவருடன் இணைந்து பணியாற்றியது மகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது.
கலை இயக்குநர் கிஷோர் எந்த ஒரு சிக்கலான தருணத்தையும் எளிதாக கையாளக்கூடிய திறமை மிக்கவர்.
ஃபேமிலி டிராமா ஜானர் திரைப்படங்களை எடிட் செய்வது கஷ்டமான விஷயம். என் அப்பா எடிட்டர் மோகன் நிறைய ஃபேமிலி டிராமா ஜானரிலான படங்களை எடிட் செய்திருக்கிறார். அப்போது நான் அருகில் இருந்து பார்த்திருக்கிறேன். அது எவ்வளவு கடினம் என எனக்குத் தெரியும். அதனால் இந்த மாதிரி படங்களை எடிட் செய்வதற்கு ஒரு திறமையான எடிட்டர் தேவை. இந்த மாதிரி படங்களை எடிட் செய்வதற்கு பயிற்சி வேண்டும் அனுபவம் வேண்டும். அது எல்லாம் இப்படத்தை தொகுத்த ஆசிஷுக்கு இருக்கிறது. அவருக்கும் சிறந்த எதிர்காலம் உண்டு.
நட்டி சார் ஒரு யூனிக்கான ஆக்டர். இவரை புரிந்து கொள்ளவே முடியாது ஹீரோவா..? வில்லனா ..? கேரக்டர் ஆர்டிஸ்டா..? இல்ல காமெடி பண்ண போறாரா..? என புரிந்து கொள்ள முடியாது . ஆனால் எந்த கதாபாத்திரத்தில் நடித்தாலும் அதில் ஒரு அவருடைய தனித்துவமான நடிப்பு திறமை இருக்கும். அவருடைய ஒளிப்பதிவுக்கு நான் மிகப்பெரிய ரசிகன். அவர் ஒரு சிறந்த நடிகர் என்பது அவருடன் இணைந்து பணியாற்றும் போது தான் தெரிய வருகிறது.
பூமிகா- அவர் நிறைய படங்களில் நடித்திருக்கிறார் . அவரை திரையில் எப்போது பார்த்தாலும் சலிப்பே வராத ஒரு முகம். என்னுடைய குடும்பத்தினருக்கு அவரை மிகவும் பிடிக்கும். குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் அவருடைய ரசிகர்கள். இந்தப் படத்தில் பூமிகாவிற்கு தம்பியாக நடிக்கிறேன் என்று சொன்னவுடன் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். இந்தப் படத்தில் அவர் நடிக்க ஒப்புக் கொண்டது இந்தப் படத்திற்கு கூடுதல் பலம். அது படம் வெளியான பிறகு அனைவருக்கும் தெரியும். அவருடைய நடிப்பு திறமை இப்படம் வெளியான பிறகு பேசப்படும்.
படப்பிடிப்பு தளத்தில் நடிகர் வி டி வி கணேஷ் எப்போதும் ஜாலியாக இருப்பார். சில நேரத்தில்.. என்னிடத்தில் சில கோணங்களை சுட்டிக்காட்டி இதில் இப்படி நடித்துப் பார் என ஆலோசனை வழங்குவார். அது ஒரு புது விஷயமாக இருக்கும். அதனால் இந்த படத்தில் சில புதிய விஷயங்களை முயற்சி செய்து இருக்கிறேன்.. இதற்காக அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
ஹாரிஸ் ஜெயராஜ் என்னுடைய படங்களுக்கு ஹிட் கொடுக்கும் இசையமைப்பாளர். ‘எங்கேயும் காதல் ‘ ‘தாம் தூம்’ ஆகிய படங்களில் எல்லா பாடல்களையும் ஆல்பமாக ஹிட் கொடுத்தவர். அதேபோல் இந்தப் படத்தையும் ஹிட்டாக்கிருக்கிறார்.
என்னுடைய ரசிகர்கள் நான் நடனம் ஆட வில்லை என வருத்தப்பட்டார்கள். மேலும் நான் ஏ சர்டிபிகேட் படங்களில் மட்டும் தான் நடிக்கிறேன் என்றும் வருத்தப்பட்டார்கள். அவர்களுக்காகவும் இந்த படத்தில் நடனமாடி இருக்கிறேன். யூ சான்றிதழ் பெற்ற படம். இது. எதிர்காலத்தில் டான்ஸ் இருக்கிற படத்தில் நடிக்க ஆசைப்படுகிறேன். இந்தப் படத்தில் இடம்பெற்ற ‘மக்கா மிஷி’ பாடல் ஹிட் ஆகியிருக்கிறது. ஆனால் இந்த படத்தில் அக்காவுக்கும் தம்பிக்கும் இடையே ஒரு எமோஷனலான பாட்டு இருக்கிறது. இந்தப் பாட்டு .. படம் வெளியான பிறகு ஹிட் ஆகும்.
இயக்குநர் ராஜேஷ் அவர்களுடைய திறமைக்கு அவர் இன்னும் கூடுதல் உயரத்தை அடைய வேண்டும். அவர் எமோஷனை அழகாக சொல்வார். அவர் எஸ் எம் எஸ் படத்தில் சொன்ன விஷயங்கள் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அவருடைய திரைக்கதையில் இடம்பெறும் அனைத்து கதாபாத்திரங்களுக்கும் ஒரு தனித்துவம் இருக்கும். இரண்டொரு காட்சிகள் நடிக்கும் நடிகர்களுக்கு கூட நல்லதொரு வாய்ப்பை வழங்கி இருப்பார்.
இந்தப் படத்தில் நானும் நன்றாக நடித்திருக்கிறேன். ஹீரோயின் பிரியங்கா அழகான க்யூட்டான பெண். படப்பிடிப்பு தளத்தில் அவர் ஒரு காட்சியில் இருக்கிறார் என்றாலே அனைவரது கவனத்தையும் கவர்ந்து விடுவார். டயலாக் சொல்லும்போதும் சிறப்பாக பேசுவார்.
இந்தப் படம் அனைவரும் குடும்பத்துடன் திரையரங்கத்திற்கு சென்று ஜாலியாக ரசிக்கக் கூடிய படம். அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்” என்றார்.
இயக்குநர் எம். ராஜேஷ் பேசியபோது, ”மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. தீபாவளி திருநாளில் என்னுடைய திரைப்படம் வெளியாகிறது. என்னுடைய இயக்கத்தில் உருவான படம் திரையரங்கத்தில் வெளியாகி மூன்று ஆண்டுகள் ஆகிறது. ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு என்னுடைய படம் திரையரங்கில் வெளியாகிறது. கொண்டாட்டத்திற்குரிய திரைப்படம் திருவிழா நாளில் வெளியாகிறது. இது எனக்கு மகிழ்ச்சியை தருகிறது. இதற்காக ஜெயம் ரவிக்கு நன்றி சொல்கிறேன்.
இதற்கு முன் நாங்கள் இணைந்து பணியாற்ற வேண்டும் என பேசினோம். ஆனால் எதுவும் சாத்தியமாகவில்லை. இந்தப் படத்தின் திரைக்கதையை நான் அவரிடம் சொன்னபோது அவர் முழுவதும் கேட்டுவிட்டு ஓகே சொன்னார். அப்போதிலிருந்து இப்போது வரை நடிகர் என்பதை கடந்து உதவி செய்வதுடன் முழுமையான ஒத்துழைப்பையும் அளித்து வருகிறார். இந்தப் படத்திற்காக நடிகராக மட்டுமில்லாமல் அவருக்குத் தோன்றும் எண்ணங்களையும் என்னுடன் பகிர்ந்து கொண்டார். படத்தை விளம்பரப்படுத்துவதற்கும் நிறைய ஆலோசனைகளை வழங்கினார். அவர் இல்லாமல் இந்த திரைப்படம் இல்லை. இதற்காக அவருக்கு மீண்டும் ஒருமுறை நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஸ்கிரீன் சீன் மீடியா நிறுவனத்தின் தயாரிப்பாளர் சுந்தர் டைனமிக்கான தயாரிப்பாளர் . அவர் ஒரு விஷயத்தை நம்பி விட்டால் அதற்காக கடுமையாக உழைப்பவர். இவரைப் போன்ற அர்ப்பணிப்புடன் கூடிய தயாரிப்பாளர் திரையுலகத்திற்கு தேவை. இந்த நிறுவனம் தொடர்ந்து திரைப்படங்களை தயாரிக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை. தமிழ் சினிமாவிற்கு கிடைத்த சிறந்த தயாரிப்பாளர் இவர்.
இப்படத்தின் நாயகி பிரியங்கா மிகவும் க்யூட். படப்பிடிப்பு தளத்தில் காட்சிகளை படமாக்கும் போது நான் கட் சொன்ன பிறகும் அவரின் சின்ன சின்ன ரியாக்ஷன்களை வைத்து படமாக்கி அதனை படம் வெளியான பிறகு இணையத்தில் வெளியிட திட்டமிட்டு இருக்கிறேன். அது மிகவும் சுவாரசியமானதாக இருக்கும். படப்பிடிப்பு தளத்தில் ஜாலியாகவும் உற்சாகமாகவும் உலா வருவார்.
அடுத்து பூமிகா சாவ்லா, அவரை மும்பையில் சந்தித்து இப்படத்தின் கதையை சொன்னேன். உடனே நடிக்க ஒப்புக்கொண்டார். தற்போது வரை படத்தின் ப்ரோமோஷனுக்காக மும்பையில் இருந்து வருகை தந்து ஒத்துழைப்பு வழங்கி வருகிறார். அவரும் இந்த படத்தை பெரிதாக நம்புகிறார். அவருக்கு படத்தில் நடித்த கேரக்டர் மிகவும் பிடித்திருந்தது என சொன்னார்.
ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு அவர் மீண்டும் தமிழில் நடிக்கிறார். படப்பிடிப்பு தளத்தில் அவருக்கு மொழி விஷயத்தில் தடை இருந்தது. இருந்தாலும் காட்சியை விளக்கிய பிறகு நடித்துக் கொடுத்தார். படத்தில் ஒரு அக்கா எப்படி இருப்பார் என்பதற்கு முன்னூதாரணமாக அவரது கதாபாத்திரம் இருக்கும். படத்தைப் பார்த்த பிறகு அக்கா இல்லாதவர்களுக்கு இது போன்றதொரு அக்கா இருக்கக் கூடாதா என்ற எண்ணம் ஏற்படும்.
படத்தில் வி டி வி கணேஷ் என்டர்டெய்ன்மென்ட்டான கேரக்டரில் நடித்திருக்கிறார். அவர் நகைச்சுவையாக நடிப்பார். அவருடைய வசன உச்சரிப்பு வித்தியாசமானதாக இருக்கும். அவர் பேசும் வார்த்தைகள் புதிதாக இருக்கும். இந்த படத்தில் அவர் ஒரு காட்சியில் உணர்வுப்பூர்வமாகவும் நடித்திருக்கிறார். அது எனக்கு சந்தோஷமான விசயம். இந்தக் காட்சியை படமாக்கும் போது அவரது நடிப்பை பார்த்து படபிடிப்பு தளத்தில் நாங்கள் அனைவரும் கைத்தட்டி மகிழ்ச்சியை தெரிவித்தோம்.
நட்டி என்னுடைய நீண்ட நாள் நண்பர். அவரை தொடர்பு கொண்ட உடன் நடிக்கிறேன் என்று ஒப்புக் கொண்டார். இந்த கேரக்டரை எழுதியவுடன் என்னுடைய முதல் தேர்வு அவராகத்தான் இருந்தது. அவரும் இந்த படத்தில் நன்றாக நடித்திருக்கிறார்.
என்னுடைய படத்தில் பைட் சீன்ஸ் இருக்கும். ஆனால் எடிட்டிங்கில் சென்றுவிடும். ஆனால் இந்த படத்தில் பைட் இருக்கிறது. பைட் மாஸ்டரும் ஜெயம் ரவியும் நெருங்கிய நண்பர்கள். அதனால் இந்த படத்தில் சண்டை காட்சிகள் கூடுதலாகவே இருக்கிறது. சண்டைக் காட்சிகள் அனைத்தும் விரைவாகவும், நேர்த்தியாகவும் நிறைவடைந்தது.
இந்த படத்தின் எடிட்டர் ஆஷிஷ். இந்தப் படம் மொத்தம் மூணு மணி நேரம் 40 நிமிஷம். ஆஷிஷ் வேகமாக எடிட் செய்வார். படப்பிடிப்பு தளத்திலேயே அன்றைய காட்சிகளை எடிட் செய்து காண்பிப்பார். அதிலேயே அவருடைய கிரியேட்டிவ் தெரியும். பெர்ஃபெக்ஷன் ஆகவும் இருக்கும். இந்தப் படத்தை அனைவரும் ரசிக்கும் படி தொகுத்திருக்கிறார்.
ஒளிப்பதிவாளர் விவேக் பணியாற்றிய படங்கள் அனைத்தும் எனக்கு மிகவும் பிடிக்கும். இதற்கு முன் சில படங்களில் இணைந்து பணியாற்ற நினைத்திருந்தோம். ஆனால் இந்த படத்தில் தான் அது சாத்தியமானது. அவருடன் இணைந்து பணியாற்றியது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.
ஊட்டியை திரில்லர் திரைப்படங்களில் பார்த்திருப்போம். ஹாரர் திரைப்படங்களின் பார்த்திருப்போம். ஆனால் ஊட்டியை வண்ணமயமாக பார்க்க வேண்டும் என விரும்பினோம். இந்தப் படத்தில் ஊட்டியை அவர் அழகாகவும், வண்ணமயமாகவும் காட்சிப்படுத்தியிருக்கிறார்.
இந்தப் படத்தில் தெலுங்கு நடிகர் ராவ் ரமேஷ் நடித்திருக்கிறார். நான் எழுதிய அந்த கதாபாத்திரத்திற்கு புதிதாக ஒரு நடிகர் வேண்டும். அந்த கதாபாத்திரம் அற்புதமானது. ஜெயம் ரவி தான் ராவ் ரமேஷை பரிந்துரை செய்தார். அவரை சென்று பார்த்தவுடன் தமிழ் நன்றாக பேசுகிறார். தமிழ் படங்களில் நடிக்கவும் ஆர்வம் காட்டினார். இந்தப் படத்தில் அவர் நடித்த கதாபாத்திரத்திற்கு அவரே டப்பிங்கும் பேசியிருக்கிறார்.
என்னுடைய எல்லா படத்திலும் சீரியஸான அப்பாவியான அம்மா கதாபாத்திரத்தில் சரண்யா மேடம் நடித்திருப்பார்கள். இந்தப் படத்தில் சரண்யா இங்கிலீஷில் பேசுவது போல் நடித்திருக்கிறார்கள்.
இதில் நடித்திருக்கும் அனைவரும் தங்களுடைய திறமையான நடிப்பை வழங்கி இருக்கிறார்கள்.
இது ஒரு கிளீன் ஃபேமிலி எண்டர்டெய்னர். இந்த படத்தை சென்சார் குழுவினர் பார்த்தபோது ஒரு கட் கூட கொடுக்காமல் கிளீன் யூ சர்டிபிகேட்டை கொடுத்தார்கள். இதுவே எங்களுக்கு மகிழ்ச்சியை அளித்தது.
பாஸ் என்கிற பாஸ்கரன் – சந்தோஷ் சுப்பிரமணியம் இந்த இரண்டு திரைப்படத்தையும் இன்றைய டிரெண்டிற்கு ஏற்ற அளவில் அப்டேட் செய்தால் எப்படி இருக்கும் என்பதை நினைத்து தான் இந்த படத்தை உருவாக்கி இருக்கிறோம். இதனை ரசிகர்களாகிய நீங்கள் திரையரங்கத்திற்கு வருகை தந்து பார்த்துவிட்டு சொல்லுங்கள். குடும்பத்துடன் பார்க்க வேண்டிய ஜாலியான படமாக இது இருக்கும்.
இந்தப் படத்தில் நடித்த அனைத்து கதாபாத்திரங்களுக்கும் நான் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறேன்.
இந்தப் படத்தில் மிகப் பெரிய பலம் ஹாரிஸ் ஜெயராஜ் படத்திற்கான பின்னணி இசைக்கு நிறைய நேரம் எடுத்துக்கொண்டு நேர்த்தியாக உருவாக்கி இருக்கிறார். பாடல்கள் ஏற்கனவே வெளியாகி பெரிய வெற்றியை பெற்றிருக்கிறது. இந்தப் படம் வெளியான பிறகு இன்னும் இரண்டு பாடல்கள் வெற்றி பெறும். அவருக்கு நான் ரசிகன். அவருடன் இணைந்து பணியாற்றியது மிகவும் மகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது.
தீபாவளியன்று குடும்பத்துடன் திரையரங்கத்திற்கு சென்று பார்த்து ரசித்து கொண்டாடும் திரைப்படமாக ‘பிரதர்’ இருக்கும்,’ என்றார்.
நடிகர் விடிவி கணேஷ் பேசியபோது, ”பொதுவாக வீட்டைப் பற்றிய நினைப்பே தற்போது இல்லாது இருப்பவர்களுக்கு இந்த திரைப்படம் குடும்பத்தை பற்றிய எண்ணத்தை ஏற்படுத்தும். அந்த அளவிற்கு இயக்குநர் ராஜேஷ் இந்த படத்தை இயக்கியிருக்கிறார்” ” என்றார்.
நடிகர் நட்டி நட்ராஜ், நடிகை பூமிகா, படத் தொகுப்பாளர் ஆசிஷ் ஜோசப், கலை இயக்குநர் ஆர். கிஷோர், சண்டை பயிற்சி இயக்குநர் ஸ்டன்னர் சாம், ஒளிப்பதிவாளர் விவேகானந்த் சந்தோஷம் உள்ளிட்டோரும் நிகழ்வில் படம் பற்றி பகிர்ந்து கொண்டார்கள்.