தமிழக அரசின் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு இரண்டு பாடல்கள் எழுதியுள்ள படம் ‘பியூட்டி.’
ரிஷி, கரீனா ஷா, சிங்கமுத்து, ஆதேஷ் பாலா, மனநல மருத்துவர் ஆனந்தன், சண்முகம் ஆகியோர் நடித்துள்ள இந்த படத்தை பத்திரிகை துறையிலிருந்து சினிமாவுக்கு வந்திருக்கும் கோ.ஆனந்த சிவா இயக்கியுள்ளார்.
‘பியூட்டி’ என்ற பெயருக்குப் பொருத்தமாக தஞ்சாவூரின் அழகான இயற்கை எழில் கொஞ்சும் இடங்கள், வயல்வெளிகள், ஆறுகளில் படப்பிடிப்பு நடந்துள்ளது. சென்னையிலும், ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியிலுள்ள இரயில்வே நிலையம், விதவிதமான கள்ளிச் செடிகள் மட்டுமே உள்ள இடங்கள் என தேர்வு செய்து படப்பிடிப்பு நடந்து முடிந்திருக்கிறது.
படத்தில் இலக்கியன் இசையில், வெ.இறையன்புவின் வரிகளில் ‘இத்தனை அழகை அத்தனை நாட்கள் எங்கே பதுக்கி வைத்தாய்?’ என்ற பாடல் இடம்பெறுகிறது. ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் அழகு கொட்டிக்கிடக்கும் பூந்தோட்டங்களில் பாடல் மிக பிரமாண்டமாக படமாக்கப்பட்டுள்ளது. ‘அந்த பாடல் வெளியானபிறகு அது காதலர்களின் காலர் ட்யூனாக இருக்கும் என்று உறுதியாகச் சொல்லலாம்’ என்கிறார்கள் படக்குழுவினர்.
படம் பற்றி இயக்குநரிடம் கேட்டோம். ”தான் நினைப்பது மட்டுமே சரி என்று, எதிர்மறை எண்ணத்துடன் தவறாகவே வாழும் ஒரு மனிதனைச் சந்தித்தபோது அதிர்ந்து, அந்த பாதிப்பில் இருந்து மீள முடியாமல், அவர் கதையையே சைக்கலாஜிகல் லவ் த்ரில்லர் சப்ஜெக்டில் கார், பைக் சேஸிங் மற்றும் சண்டைக் காட்சிகளுடன், பரபரப்பான திரைக்கதையுடன் படமாக்கியிருக்கிறோம்” என்றார்.
விரைவில் வெளியாகவிருக்கும் இந்த படத்தை, ஆர்.தீபக்குமாரின் ‘ஓம் ஜெயம் தியேட்டர்’ நிறுவனம் தயாரித்துள்ளது.

