பெற்றோருக்கு தங்கள் பள்ளிப் பருவத்தை நினைவூட்டுகிற, பள்ளியில் கல்லூரியில் படிப்பைத் தொடர்கிறவர்களுக்கு தங்களைத் தாங்களே கண்ணாடியில் பார்ப்பது போன்ற உணர்வைத் தருகிற கதைக்களம் ‘பாபா ப்ளாக் ஷீப்’பின் திரைக்களம்.
பள்ளிக்கூடத்தை மையமாக கொண்ட கதையில் என்னென்ன காட்சிகள், சம்பவங்கள் இடம்பெறுமோ அத்தனையும் இடம்பெற்ற மற்றுமொரு திரைப்படம்.
படிப்பில் பெரிதாய் ஈடுபாடு காட்டாத, ஒரே வகுப்பில் படிக்கும் மாணவர்கள் சிலர் இரண்டு குழுக்களாகப் பிரிந்து, வகுப்பறையின் கடைசி பெஞ்சை கைப்பற்றுவதற்காக ஆட்சியைப் பிடிக்கத் துடிக்கும் அரசியல்வாதிகளைப் போல மல்லுக் கட்டுகிறார்கள்.
கிட்டத்தட்ட, அதில் எந்த குழு ஜெயித்தது என்பதுதான் படத்தின் கதை.
இந்த மிகமிக எளிமையான கதையை அஸ்திவாரமாக வைத்துக் கொண்டு பிள்ளைகளுக்கு யார் யாரால் மன உளைச்சல் ஏற்படுகிறது என்பதை அலசி, பெற்றோருக்கும் மற்றோருக்கும் அறிவுரை சொல்லும் விதத்தில் திரைக்கதையை நகர்த்தியிருக்கிறார் அறிமுக இயக்குநர் ராஜ்மோகன் ஆறுமுகம்.
மாணவர்கள் கடைசி பெஞ்சுக்காக சண்டையிடுவது, ஸ்கூல் லீடர் தேர்தலில் மோதுவது என கடந்தோடும் கதையின் முன்பாதியில் ரசித்துச் சிரிக்க பல காட்சிகள் அட்டனன்ஸ் போடுகின்றன.
பள்ளியில் மாணவியொருவர் பலியான சம்பவத்தின் பின்னணியை மாணவர்கள் தோண்டித் துருவுகிற படத்தின் பின்பாதி காட்சிகளில் இன்னும் கொஞ்சம் விறுவிறுப்பு கூட்டியிருக்கலாம்.
கதாநாயகன் அப்துல் அயாஸின் தோற்ற முதிர்ச்சி பள்ளி மாணவன் பாத்திரத்துக்கு அவ்வளவாய் பொருந்தாவிட்டாலும் நடிப்புப் பங்களிப்பு கச்சிதம்!
இமைகளில் படபடப்பு, இதழ்களில் காயாத ஈர மினுமினுப்பு, ‘ஐயோ கொல்றாளே’ எனும்படியான புன்னகைப்பு… அம்சமான அம்மு அபிராமியின் கதாபாத்திரப் பெயர் நிலா. அதற்கேற்ப ஜொலித்திருக்கிறார்; அளவாய் நடித்திருக்கிறார்.
ஒரு வேண்டுதல்… அண்ணனுக்கும் அண்ணன் போலிருப்பவரை அம்முவுக்கு ஜோடியாக்கியிருக்கிற இயக்குநருக்கு எதிராக மாணவச் சமுதாயம் கொதித்துக் கொந்தளிக்காமலிருக்க வேண்டும்.
ஆரம்பத்தில் வில்லன்போல் கெத்து காட்டி பின்னர் ‘நண்பேன்டா’ என்ற வட்டத்துக்குள் வருகிற நரேந்திர பிரசாத்தின் துடிப்பான நடிப்பு கவர்கிறது.
நீண்ட நெடிய இடைவெளிக்குப் பிறகு ‘விருமாண்டி’ அபிராமியை திரையில் பார்க்கிற வாய்ப்பு. அவருக்கானது ஒன்றிரண்டு காட்சிகள்தான் என்றாலும் அனுபவ நடிப்பால் தன் பாத்திரத்துக்கு உயிரோட்டம் தர முயற்சித்திருக்கிறார்!
ஆர் ஜே விக்னேஷ் காந்த் கடைசி பெஞ்ச் மாணவர்களின் தில்லுமுல்லுகளை, அருமை பெருமைகளை எடுத்துரைத்து விரிவுரையாற்றுவதும், சீதா பழத்தை சின்னமாக வைத்து பள்ளியின் மாணவர் தலைவர் தேர்தலில் போட்டியிடுவதும் கலகலப்பு!
ஜி.பி.முத்துவை காமெடிக்கு பயன்படுத்தாமல், பொருத்தமான காட்சியில் அவரது சொந்தக்கதையை சொல்ல வைத்திருப்பது உண்மையிலேயே கவனம் ஈர்க்கும் சங்கதி!
பள்ளியின் முதல்வராக சுப்பு பஞ்சு, ஆசிரியராக வினோதினி, உடற்கல்வி பயிற்சியாளராக போஸ் வெங்கட் உள்ளிட்டோரின் தேர்ந்த நடிப்பை உள்வாங்கியிருக்கிறது கதையின் போக்கு!
சந்தோஷ் தயாநிதியின் இசையில் ‘நாங்க கெத்து’ பாடலில் உற்சாகம் கரைபுரள, ‘என்னடி கண்ணம்மா’ பாடல் தாலாட்டுகிறது. சுதர்சன் சீனிவாசனின் ஒளிப்பதிவு நேர்த்தி!
கதையின் மையப்புள்ளியாக வருகிற மாணவி தற்கொலை சம்பவம், கடந்தாண்டு தமிழகத்தின் ஒரு பள்ளியில் நடந்த உண்மைச் சம்பவத்தை நினைவு படுத்தலாம்.
இயக்குநருக்கு இது முதல் படம் என்பது ஆங்காங்கே தெரிந்தாலும் ‘மனம் விட்டுப் பேசுங்கள்‘ என சமூகத்திற்கு அர்த்தமுள்ள அறிவுரை வழங்கியிருப்பதற்காகவும்,
தன் திறமைக்கு வாய்ப்பு தந்து முன்னேற்றிய காட்சி ஊடகத்துறையில் தன்னோடு கலந்து பழகியவர்களுக்கு, பல்வேறு யூ டியூபர்களுக்கு நடிக்கும் வாய்ப்பு தந்து புகழ் வெளிச்சப் பாதைக்கு அடித்தளமிட்டிருப்பதற்காகவும் இயக்குநர் ராஜ்மோகனை இறுக அணைத்துப் பாராட்டலாம்!