Home விமர்சனம் படவா சினிமா விமர்சனம்

படவா சினிமா விமர்சனம்

கனமான கருத்து சொல்கிற கலகலப்பான படம்.

மழையென்பதே இல்லாமல், நிலத்தடி நீர் வற்றிப்போய், விளைநிலங்கள் விவசாயம் செய்யத் தகுதியற்ற நிலைக்கு ஆளான கிராமம் அது. அந்த கிராமத்துக்கு வருகிற கலெக்டர், மக்களிடம் உங்களுக்கு என்னென்ன தேவை?’ என்று கேட்கிறார். ஒவ்வொருவரும் ஒவ்வொன்றை கேட்க, வேலைவெட்டியில்லாமல் சுற்றிக் கொண்டிருக்கும் வேலன் ‘மதுக்கடை வேண்டும்’ என்கிறான்.

கலெக்டர் ‘இந்த மாதிரியான ஆளுங்க இருந்தா ஊரு உருப்பட்ட மாதிரிதான்’ என்கிற ரேஞ்சில் முறைத்துவிட்டுக் கிளம்பிப் போகிறார். அதே கலெக்டர் சில வருடங்கள் கழித்து அந்த ஊருக்கு வருகிறார். ஊர் முழுக்க விவசாயம் நடந்து கிராமமே பசுமையாகியிருக்கிறது. சாலைகள் போடப்பட்டிருக்கிறது. இன்னும் எத்தனையோ நலத்திட்டங்கள் நிறைவேறியிருக்கிறது. அத்தனைக்கும் காரணம், அன்று மதுக்கடை வேண்டும் என கேட்ட வேலன்தான் என்பது கலெக்டருக்கு தெரியவருகிறது. ஆச்சரியப்படுகிறார்.

பொறுப்பற்று திரிந்த வேலன் ஒரு கிராமத்தையே புரட்டிப்போட முடிந்தது எப்படி என்பதே திரைக்கதை.

கதைநாயகன் வேலனாக விமல். இரண்டாம் கதாநாயகனாக சூரி. சேர்ந்து குடிப்பது, குடிப்பதற்காக பொது சொத்துக்களை திருடி விற்பது, பட்டாசு வெடித்து ஊர் மக்களின் தூக்கத்தை கெடுப்பது என கதையின் நாயகர்களான விமல் _ சூரி கூட்டணி செய்கிற அட்டகாச அட்டூழியங்களும், விமலை நாடு கடத்த ஊரே திரண்டு நகை, பணம் என கொட்டிக் கொடுப்பதும் வெடித்துச் சிரிப்பதற்கு உத்தரவாதம் தருபவை.

ஊர் மக்களை தன் செங்கல் உற்பத்திக் கூடத்தில் தொழிலாளியாகப் பயன்படுத்துவதற்காக, ஊர் முழுக்க கருவேல மரங்களை வளர்த்து மழைப்பொலிவை தடுத்து விவசாயத்தை அழித்தவனை எதிர்க்கும்போது மாஸ் ஹீரோவாக ஆக்சன் அதகளம் செய்கிற விமல், காதல் காட்சிகளில் பூவாய் மலர்ந்து உற்சாக மூடுக்கு போய் திரும்புகிறார்.

கால்நடை மருத்துவராக வருகிற ஸ்ரிதா ராவின் விமலுடனான காதல் டிரீட்மென்ட் கவர்கிறது.

ஊரின் வளங்களை அழித்து தன் தொழிலைச் சிறப்பாக செய்கிற ராமச்சந்திர ராஜுவின் வில்லத்தனம் மிரட்டல் ரகம்.

விவசாயத்தை நம்பியிருந்து சதிச்செயலைச் சந்திக்கும் சூப்பர் குட் சுப்ரமணியின் நடிப்பு கலங்க வைக்கிறது.

ஜான் பீட்டர் இசையில் பாடல்களுக்குப் பஞ்சமில்லை. ஒன்றிரண்டு ரசிக்க வைக்கின்றன.

ஒளிப்பதிவாளர் ராமலிங்கத்தின் கேமரா பரந்து விரிந்த கிராமம், விவசாய நிலங்கள், திரும்பிய பக்கமெல்லாம் கருவேல மரங்கள், பிரமாண்டமான செங்கல் தொழிற்சாலை என கதைக்களத்தில் சுறுசுறுப்பாய் சுற்றிச் சுழன்றிருக்கிறது.

கொஞ்சமாய் கருத்து, அதிகமாய் சிரிப்பு என்ற டெம்ப்ளேட்டில் மசாலா படங்கள் வந்து வெகு நாட்களாகிவிட்ட குறையைப் போக்கியிருக்கிற ‘படவா’ பாராட்டத்தக்க ராஸ்கல்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தயவு செய்து அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டாதீர்கள்.. முடிந்தால் சுயமாக எழுத கற்றுக் கொள்ளுங்கள்