‘தன் வினை தன்னைச் சுடும்’ என்ற ஒன்லைனில் காதல், மோதல், டைம் டிராவல் என பரபரப்பு பற்ற வைக்கும் ‘பனாரஸ்.’ கன்னட தேசத்திலிருந்து கன்டென்ட் கனமான திரைவிருந்து!
தன் நண்பர்களிடம் விட்ட சவாலுக்காக கதாநாயகன், கதாநாயகியிடம் ‘நான் உண் கணவன், டைம் டிராவல் மூலம் எதிர்காலத்திலிருந்து நிகழ்காலத்துக்கு வந்திருக்கிறேன்’ என்று நம்பும்படி கதைவிட்டுக் கவிழ்க்கிறான். அவளிடம் நெருங்கி அவளுக்குத் தெரியாமல் போட்டோ எடுத்து நண்பர்களிடம் கெத்து காட்டுவது திட்டம். அப்படி திட்டம் போட்டு எடுத்த படம் எதிர்பாராதவிதமாக சோஷியல் மீடியாவில் வட்டம்போட்டு வைரலாகிறது. அவமானத்தால் கட்டம்கட்டப்படும் அவள் பனாரஸு(காசி)க்கு பயணமாகிறாள். நாயகன், தான் செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்க பலரும் பாவத்தை தொலைக்க தேடிப்போகும் காசியை நாடிப் போகிறான்.
டைம் டிராவல் என அது இதுவென நாயகியின் காதில் பூ சுற்றிய அந்த நாயகன் நிஜமாகவே டைம் லூப் எனும் சுழலுக்குள் சிக்குகிறான். அதன் பிறகு என்னவானது என்பதே கதையோட்டம்… காதல் அறிவியல் ஆன்மிகம் என கலந்துகட்டி சுவாரஸ்யமாக திரைக்கதை அமைத்ததோடு காசியை கதைக்களமாக்கி வெகுவாக கவனம் ஈர்க்கிறார் இயக்குநர் ஜெயதீர்த்தா!
நாயகியிடம் இதமாகப் பேசி ஏமாற்றுவது, தான் விரித்த வலையில் தானே விழும்போது அதிர்வது, தான் செய்த தவறை உணர்ந்து குற்றவுணர்ச்சியில் உழல்வது, காதல் காட்சிகளில் உணர்வுகளை அழகாய் வெளிப்படுத்துவது, சண்டைக் காட்சிகளில் அளவாய் ஆக்ரோஷம் காட்டுவது என முதல் படம் என்று தெரியாத அளவுக்கு நாயகன் ஜயீத்கான் நடிப்பில் துடிப்பு காட்டியிருக்கிறார்!
நாயகி சோனல் வேலைப்பாடுமிக்க பனாரஸ் பட்டுபோல் அத்தனை பளபளப்பாக இருக்கிறார். யாரோ ஒருவன் வந்து எதையோ சொல்லப்போக அதைக்கேட்டு ஏமாறுவதில் காட்டும் அப்பாவித்தனம் ரசிக்க வைக்கிறது. பாடல் காட்சியில் அவரது இளமையின் அபாயகரமான வளைவு நெளிவுகளை கேமரா கண்கள் வஞ்சனையின்றி மேய்ந்திருக்கிறது!
மகளை ஏமாற்றியவனை தன் ஆராய்ச்சிக்கு பயன்படுத்தி பழிதீர்க்கும் விஞ்ஞானியாக அச்யுத் குமாரும் அசத்துகிறார்.
காசியில் சடலங்களை மட்டுமே போட்டோ எடுப்பது, ஏற்கும்படி அதற்கு காரணம் சொல்வது என சுஜய் சாஸ்திரிக்கு படத்தில் தனித்துத் தெரிகிற கலகலப்புக்குப் பேர்வழி கேரக்டர். கிளைமாக்ஸில் அவர் கண்கலங்குவதும் தனித்துவம்!
காசியின் நீள அகலங்களை, பலரது பாவங்களைக் கழித்தபடி சுழித்தோடும் கங்கையின் அழகை ரசிக்கும்படி ஒளிப்பதிவு செய்துள்ள அத்வைதா குருமூர்த்திக்கு அழுத்தமான கை குலுக்கல்!
காசியை அகோரிக் கூட்டங்கள், சரம்சரமாக சடலங்கள் சாம்பலாவது என்றே பார்த்துப் பழகிய கண்களுக்கு கண்டிப்பாக வித்தியாசமான அனுபவம்!
அஜனீஷ் லோக்நாத் இசையில் ‘மாயகங்கா’ , ‘இலக்கண கவிதை எழுதிய அழகே’ பாடல்கள் மனம் வருடுவதில் போட்டி போடுகின்றன. பின்னணி இசை திரைக்கதையோட்டத்துக்கு ஏற்றபடி ஏறி இறங்குகிறது!
‘டைம் லூப்’ சார்ந்த காட்சிகளின் நகர்வுகள் சற்றே யூகிக்க முடிந்தவையாக இருப்பது மைனஸ். மற்றபடி, பனாரஸ் காதல் ரேஸில் முந்துகிற குதிரை!

