ஒரு சிலரது மனதிலிருக்கும் ‘அழகானவள் ஆபத்தானவள்’ என்கிற எண்ணத்தை மையப்படுத்தி, சற்றே வித்தியாசமான திரைக்கதையில் உருவாகியிருக்கிறது ‘பியூட்டி.’
கிராமத்தில் மக்கள் செல்வாக்குள்ள அந்த பண்ணையார், அவருடைய இரண்டாவது மனைவி அழகானவளாக அமைந்ததால் நிம்மதியைத் தொலைக்கிறார். அதனால், ‘அழகான பெண்ணை கல்யாணம் செய்துகொள்வது ஆபத்து’ தன் மகனிடம் சொல்லிக் கொண்டேயிருக்கிறார்.
மகன், அப்பா சொல்வதிலுள்ள உண்மையை தானும் உணர்ந்த காரணத்தால், சற்றே அவலட்சணமான பெண்ணை வாழ்க்கைத் துணையாக்கிக் கொள்ள தேர்ந்தெடுக்கிறான். அவள் மீதான காதலோடு நாட்கள் இனிமையாக நகர்கிறது.
ஒருகட்டத்தில் அவள் தன் முகத்தை சிகிச்சை மூலம் அழகுபடுத்திக் கொள்கிறாள். மனதுக்கு பிடித்தவளின் அந்த தோற்ற மாற்றத்தை விரும்பாத அவன் அவளை பழையபடி மாற்ற சதிச் செயல்களில் இறங்குகிறான். அந்த விபரீத முயற்சிகளின் விளைவுகளே பியூட்டியின் மிச்சசொச்ச கதை.
கம்பீரமான பண்ணையார், அவருடைய மகன் என இரண்டு வேடங்களில் வருகிற ரிஷி கெட்டப்பில் மட்டுமல்லாமல் நடிப்பிலும் வயதுக்கேற்ற வித்தியாசம் காட்டியிருக்கிறார்.
நாயகி கரீனா ஷா தனது கனமான கதாபாத்தித்தின் தன்மை உணர்ந்து நடித்துள்ளார்.
சிங்கமுத்து, காயா கபூர், மனநல மருத்துவர் ஆனந்தன், ஹீரோவின் நண்பனாக ஆதேஷ் பாலா… அனைவரின் நடிப்பும் நேர்த்தி.
வெ.இறையன்பு ஐ.ஏ.எஸ்., தமிழ்முருகன் இருவரது பாடல்வரிகள் இலக்கியன் இசையில் மனதைக் கவர்கின்றன.
ஹீரோவின் வீட்டை அவரது சைக்கோ மனநிலைக்கேற்ப உருவாக்கியிருப்பதில் கலை இயக்குநரின் புத்திசாலித்தனம் தெரிகிறது.
கதையின் கருவாக்கத்தில் இருக்கிற பலம் உருவாக்கத்திலும் இருந்திருக்கலாம். ஆனாலும், ‘அனுபவம் என்பது ஆளாளுக்கு மாறுபடும். ஒருவர் குறிப்பிட்ட ஒரு விஷயத்தால் பாதிக்கப்பட்டால் அதே விஷயத்தால் நாமும் பாதிக்கப்படுவோம் என நினைப்பது, பயப்படுவது சரியான அணுகுமுறையல்ல’ என்ற கருத்தை வலியுறுத்தியிருப்பதற்காக இயக்குநர் கோ.ஆனந்த் சிவாவை பாராட்டலாம்.


