எட்டு நாள் கால்ஷீட் கொடுத்து நடிக்கப் போய், ஆடிஷனாக உணர்ந்தேன்! -‘விடுதலை’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில் இயக்குநர் வெற்றிமாறனை புகழ்ந்த விஜய் சேதுபதி

சூரி, விஜய்சேதுபதி, பவானிஸ்ரீ உள்ளிட்ட பலரது நடிப்பில், இசைஞானி இளையராஜா இசையில் உருவாகியிருக்கும் படம் ‘விடுதலை.’

வெற்றிமாறன் இயக்கத்தில், ஆர்.எஸ். இன்ஃபோடெயின்மெண்ட் பிரைவேட் லிமிடெட் எல்ரெட் குமார் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் கடந்த மார்ச் 8-ம் தேதி நடந்தது.விழா நாயகன் இளையராஜா பேசும்போது, “இந்த படம் திரையுலகம் இதுவரை சந்திக்காத களத்தில் நடக்கும் கதை. வெற்றிமாறனின் ஒவ்வொரு கதையும் வெவ்வேறு திரைக்கதை. 1500 படங்களுக்கு இசையமைத்த பிறகு சொல்கிறேன் வெற்றிமாறன் திரையுலகிற்கு முக்கியமான இயக்குநர். இந்தப் படத்தில் இதுவரை நீங்கள் கேட்காத இசையை கேட்பீர்கள்” என்றார்.

நடிகர் சூரி பேசியதாவது, “எத்தனையோ முறை காமெடியனாக மேடை ஏறி உள்ளேன். ஆனால் முதல் முறையாக கதை நாயகனாக மேடை ஏறும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இளையராஜாவை இசை கடவுள் என்றே சொல்வேன். அவரது இசையில் பாடலில் நான் ஒரு உருவமாக இருப்பது மகிழ்ச்சி. கதாநாயகர்களுக்கு இணையாக அதிக அளவு ரசிகர்களை கொண்ட இயக்குநர்களில் வெற்றிமாறனும் ஒருவர். அவர் படத்தில் நான்கு காட்சிகளாவது நடிக்க மாட்டோமா என்று பல சமயங்களில் ஏங்கி இருக்கிறேன். அவரை நேரில் சந்தித்து பேசிய பொழுது இந்த கதை குறித்து சொன்னார். ஒவ்வொரு கதாபாத்திரம் பற்றி சொல்லி வரும் பொழுது எல்லாவற்றிற்கும் நடிகர்களை கமிட் செய்து விட்டார். அப்போது லீட் ரோல் யார் என்று யோசித்துக் கொண்டிருக்கும் பொழுது நீங்கள் தான் அதை செய்கிறீர்கள் என்று சொன்னார். நான் சந்தோஷத்தில் எழுந்த போது அந்த வானத்தில் முட்டி இருப்பேன். பிறகு ‘வடசென்னை’, ‘அசுரன்’ படங்கள் வெளியாகி வெற்றி பெற்ற பிறகு வாய்ப்பு வருமா என்று எதிர்பார்த்து இருந்தேன். என் நம்பிக்கை வீண் போகாமல் வெற்றிமாறன் அழைத்து வாய்ப்பு கொடுத்தார். எனக்குக் இருக்கும் வேறொரு நடிகனை தட்டி எழுப்பினார். அவருக்கு நன்றி” என்றார்.நடிகர் விஜய்சேதுபதி பேசும்போது, “இப்போது சூரி பேசியது எப்படி உங்களை ஆட்கொண்டுள்ளதோ அதுபோலவே படம் முழுக்க அவரது கதாபாத்திரமும் நடிப்பும் உங்களை ஆட்கொள்ளும். வெற்றிமாறனின் ‘வடசென்னை’யில் நடிப்பதை நான் மிஸ் செய்து விட்டேன். அதனால் ‘விடுதலை’ படத்தின் வாய்ப்பை தவற விரும்பவில்லை. எட்டு நாள் தான் கால்ஷீட் என சொல்லி வெற்றிமாறன் என அழைத்து சென்றார். ஆனால் போன பின்பு தான் தெரிந்தது அது எனக்கான ஆடிஷன் என்று. வெற்றி சாருடன் வேலை பார்த்தது மிகவும் அறிவு சார்ந்தது முக்கியமானதாக பார்க்கிறேன். ராஜா சாரோட இசையை போலவே அவருடைய பேச்சும் மிகவும் ஆழமானது அதை கூர்ந்து கவனியுங்கள்” என்றார்.இயக்குநர் வெற்றிமாறன் பேசும்போது, “‘விடுதலை’ படத்தின் தொடக்கம் ராஜா சார்தான். 45 நிமிடங்கள் படம் எடுத்து விட்டுதான் அவரிடம் காண்பித்தேன். அந்த காட்சிகளைப் பார்த்துவிட்டு ராஜா சார் இசையமைத்த பாடல்தான் வழி நெடுக காட்டுமல்லி பாடல். இந்த பாடலுக்கு இசைமைக்கும்போதே, இந்த பாடலை நான் எழுதுகிறேன் என்று சொல்லிதான் எழுதினார். பின்னணி இசையும் கேட்டேன். என் மனதில் ஒரு உணர்வு இருக்கிறது என்று அதை அவரிடம் விவரித்தேன். அதை அவர் உள்வாங்கி பாடலாக்கி ஒலியாக அதை எனக்கு கொடுத்த போது மீண்டும் அந்த உணர்வு எனக்கு கிடைத்தது. அது மிகப்பெரிய அனுபவமாக இருந்தது.

ராஜா சாரின் மியூசிக்கல் மைண்ட் எப்படி வேலை செய்கிறது என்பதை அருகில் இருந்து பார்ப்பது எனக்கு மிகப்பெரிய பரிசு என்று சொல்வேன். அவர் பகிர்ந்து கொண்ட அனுபவங்கள் எனக்கு மிகப்பெரிய கற்றல். நாங்கள் எல்லோருமே உங்கள் பாடல்களை கேட்டு வளர்ந்தவர்கள் தான். அதே சந்தோஷத்தோடு உங்கள் இசையை நாங்கள் வாங்கிக் கொள்கிறோம்.
இந்த படம் எல்லா வகையிலும் எல்லாருக்கும் சவாலானதாக இருந்தது. இந்தப் படத்தில் வேலை பார்த்த என்னுடைய அணி, தொழில்நுட்ப கலைஞர்கள், நடிகர்கள் என அனைவருக்குமே நன்றி. அனைவரும் மிக கடினமான உழைப்பை கொடுத்துள்ளனர். இந்த கதையை கொடுத்த ஜெயமோகன் சாருக்கு நன்றி. எந்த ஏரியாவில் கேட்டாலும் அவரிடம் ஏற்கனவே ஒரு கதை இருக்கும். அந்த அளவுக்கு எழுதிக் குவித்திருக்கிறார்.

ராஜா சாரிடம் வேலை பார்த்தது முன்பே சொன்னது போல மிகப்பெரிய அனுபவம். நான் அடிக்கடி கோபப்படுவேன். கோபம் என்பது என்னுடைய இயலாமை தான். அந்த நேரத்தில் அந்த கோபம் எல்லாம் என்னுடைய உதவி இயக்குநர்கள் மேல்தான் திரும்பும். இந்த சமயத்தில் அவர்களுக்கு நன்றியோடு சேர்த்து மன்னிப்பும் கேட்டுக்கொள்கிறேன். இந்த படத்துக்கு முதலில் நான்கு கோடி ரூபாய் தான் தயாரிப்பாளர் எல்ரெட் குமாரிடம் சொன்னேன். ஆனால், அதையும் தாண்டி மூன்று மடங்கு வரை போய்விட்டது. அதை எல்லாம் கேட்காது இந்த படத்தின் மீது அவர் ஒரு பார்வையும் நம்பிக்கையும் வைத்திருந்தார். அது முக்கியமானது.

சூரியை வைத்து ஒரு எளிய படம் எடுக்கலாம் என்றுதான் நினைத்தேன். ஆனால் அவர் உள்ளே வந்த பிறகு இன்னும் படம் பெரிதானது. சேதுவை வைத்து கிட்டத்தட்ட 65 நாட்கள் படம் பிடித்தோம். முதல் பாகத்தில் அவருடைய காட்சிகள் குறைவாக இருந்தாலும், அவரைப் பற்றி தான் பேசி இருப்போம். இரண்டாம் பாகத்தில் படம் முழுக்க வருகிறார்.
சில அரசியல் சிந்தனைகளை எல்லாம் படமாக்குவதற்கு விஜய் சேதுபதி போன்ற நடிகர்கள் இருப்பது மிகவும் நம்பிக்கை கொடுத்தது. 25 பக்க காட்சிகளை எல்லாம் இரண்டு மணி நேரத்தில் எடுத்து இருக்கிறோம். வசதியாக இருந்து பழகிய நடிகர்களுக்கு ‘விடுதலை’ போன்ற படத்தில் நடிப்பது மிகவும் சிரமமானது.

கௌதம் மேனன் நடிக்க உள்ளே வந்ததை விட ராஜீவ் நடிக்க ஒத்துக் கொண்டதுதான் ஆச்சரியமாக இருந்தது. அவரும் எளிதாக இந்த கதையில் ஒன்றிப் போனார். இந்த கதை என்னுடைய விருப்பம் தான். அதற்கு ஒத்துழைத்து வந்த அனைவருக்கும் நன்றி. என்னுடைய உழைப்பையும் வெற்றியையும் என்னுடைய குரு பாலு மகேந்திராவுக்கும் என்னுடைய உதவியாளர்களுக்கும் சமர்ப்பிக்கிறேன்” என்றார்.

பாடலாசிரியர் சுகா பேசும்போது, “தமிழ் திரையுலகில் நீங்கா இடம் பிடித்திருக்கும் ஒரு பாடலில் என் பெயரை இணைத்த ஆசான் இளையராஜாவுக்கு நன்றி. இந்த மேடையில் இருப்பவர்கள் அனைவரும் எனக்கு நெருக்கமானவர்கள் என்றாலும் ஒளிப்பதிவாளர் ராஜீவ் மேனனை நான் விசேஷமாக பார்க்கிறேன். பலர் நடிக்க அழைத்தும் மறுத்தவர் இந்த படத்தில் நடித்துள்ளார்.

இந்த படத்தின் பாடல் எழுத என அழைத்த போது பாடல் எனக்கு எழுதத் தெரியாது என்று மறுத்தேன் ஆனால் என் மீது நம்பிக்கை வைத்து இளையராஜா நான் எழுதிக் கொடுத்த சொற்றொடர்களை பாடலாக மாற்றினார். ராஜா சார் சொன்னது போல இயக்குனர் வெற்றிமாறன் இந்திய திரையுலகின் பொக்கிஷமாக இருப்பது எனக்கு பெருமை” என்றார்.

தயாரிப்பாளர் எல்ரெட் குமார் பேசும்போது, “‘விடுதலை’ படம் தொடங்கியது மிகப்பெரிய கதை. கிட்டதட்ட 10 ஆண்டுகளான பயணம் அது. ‘விடுதலை’ டைட்டில் கிடைத்ததற்கு சுரேஷ் பாலாஜிக்கு நன்றி. ரஜினி சார் பட டைட்டில் இது. கேட்டதும் எந்த ஒரு பிரதிபலனும் எதிர்பாராமல் தந்தார்கள். இந்த கதைக்கு அப்படி ஒரு வலுவான டைட்டில் தேவைப்பட்டது. வெற்றி சார் தமிழ் சினிமாவின் பொக்கிஷம். அவரிடம் உள்ள ஸ்கிரிப்ட் எண்ணிக்கை, அவர் இதுவரை செய்த படங்களின் எண்ணிக்கையை விட அதிகம். அவருடைய சிறந்த படம் இனிமேல்தான் வர இருக்கிறது.

45 வருடங்களாக இளையராஜா அவர்களின் இசையை கேட்டு வளர்ந்து இருக்கிறோம். பல தலைமுறைகள் கடந்தாலும் இப்போது வரைக்கும் அவருடைய பாடல்கள் நின்று பேசுகிறது. இது போன்ற இசையை கொடுத்ததற்கு ஒரு ரசிகனாக அவருக்கு நன்றி. அடுத்து சேது சார்! சினிமா என்பது பெரும்பாலும் ஹீரோக்களின் ஆளுமையில் உள்ள விஷயம். ஒரு ஹிட் கொடுத்து விட்டார்கள் என்றால் அடுத்து அவர்களுக்கு என்று பட்ஜெட், இமேஜ் போன்ற விஷயங்களில் பொறுப்புள்ளது. ஆனால், இந்த விஷயங்கள் எதுவும் இல்லாமல் எந்த கதாபாத்திரம் ஆனாலும் எந்த மொழியிலும் சேது சார் கலக்கிக் கொண்டிருக்கிறார். படப்பிடிப்பு தளத்தில் அவருடைய கதாபாத்திரத்திற்காக அவ்வளவு மெனக்கெட்டு இருக்கிறார்.

சூரி அண்ணனை கதையின் நாயகனாக அறிமுகப்படுத்துவதில் எங்கள் கம்பெனிக்கு பெருமை, சந்தோஷம். அவர் இந்த கதாபாத்திரத்திற்காக நிறைய படத்தை இழந்து பொருளாதார ரீதியாகவும் கஷ்டப்பட்டு இருக்கிறார். அதற்கெல்லாம் நிச்சயம் பலன் உண்டு. பவானிஸ்ரீ மிக அழகாக நடித்துள்ளார். ஒளிப்பாதிவாளர் ராஜீவ் மேனன், கெளதம் மேனன் என படத்தில் நடித்துள்ள நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here