‘முடி’யை வைத்து என்ன செய்ய முடியும்?
மில்லியன் கணக்கில், டிரில்லியன் கணக்கில் உலகளவில் பிஸினஸ் செய்ய முடியும்.
அந்த பிஸினஸை மையப்படுத்தி என்ன செய்ய முடியும்?
‘பிளாக் கோல்டு’ என விறுவிறுப்பான ஆக்சன் திரில்லர், கிரைம் திரில்லர் எடுக்க முடியும்.
எடுத்திருக்கிறார் இயக்குநர் தீரன் அருண்குமார்
ஹீரோவுடைய அப்பா ஒரு பெரிய நிறுவனத்தின் நம்பிக்கைக்குரிய லாரி டிரைவர்; அவர் பல கோடி மதிப்புள்ள சரக்கை ஆந்திராவிலிருந்து ஏற்றிக்கொண்டு புறப்படுகிறார். ஆனால், வர வேண்டிய இடத்துக்கு வந்து சேரவில்லை. சரக்கை அவரே கடத்தியிருக்கலாம் என்று அவரின் முதலாளி சந்தேகப்பட, ஹீரோ அப்பாவுக்கும் சரக்குக்கும் என்னவானது என்பதை கண்டுபிடிக்க களமிறங்குகிறார். என்னவெல்லாம் கண்டுபிடிக்கிறார் என்பது கதையின் மீதி…
அப்பாவை அடித்த போலீஸ் அதிகாரியை வளைத்துப் பிடித்து தாக்குவது, சரக்கை கடத்தி அப்பாவுக்கு பரிதாப முடிவைக் கொடுத்தவர்கள் மீது வெறித்தனமாகப் பாய்வது என சுறுசுறுப்பாக களமாடியிருக்கிறார் வெற்றி. காதல் உணர்வுகளைப் பிரதிபலிப்பதில் வழக்கம்போல் பாஸ்மார்க் லெவலைத் தாண்டவில்லை.
வில்லன்கள் ஏரியாவில் அருள் டி சங்கர் ஓரளவு மிரட்ட அவருடைய தொழில் போட்டியாளராக இயக்குநர் ஏ வெங்கடேஷ் கேரக்டருக்கு போதுமான அளவில் கெத்து காட்டுகிறார்.
பணத்துக்காக கொலை செய்கிற கும்பலை வழிநடத்துபவராக ‘பரியேறும் பெருமாள்’ கராத்தே வெங்கடேஷ். பார்வையே பயம் கூட்டுகிறது. அந்த கும்பலில் உள்ள இளைஞனுக்கு ஹீரோ முகம்; காட்டியிருக்கும் வில்லத்தனம் வீரியம்.
காவல்துறை அதிகாரியாக (இந்த படத்தின் தயாரிப்பாளர்) மூர்த்தி அளவான திமிர் தெனாவட்டு காட்ட , காவல்துறை உயரதிகாரியாக அபிராமி வெங்கடாசலம் கம்பீரமாக வந்து போகிறார்.
வெற்றியின் அப்பாவாக லிவிங்ஸ்டன். பாசமான குடும்பத் தலைவன், விசுவாசமான வேலைக்காரன் என தேர்ந்த நடிப்பைக் கொடுத்திருக்க, ஹீரோவுக்கு ஒரு ஹீரோயின் தேவை என்கிற அளவில் மட்டும் இணைக்கப்பட்டது போலிருக்கிறது பிரியலயாவுக்கான காட்சிகள். காதல், கோபம், கனிவு, அக்கறை என உணர்வுகளைப் பிரதிபலிப்பதில் குறையில்லை.
துளசி, சபீதா ராய், சித்து குமரேசன், கே பி ஒய் ராமர், ஜப்பான் குமார் என மற்றவர்கள் கொடுக்கப்பட்ட வேலையை சரியாகச் செய்திருக்கிறார்கள்.
பின்னணி இசையில் தேவைக்கேற்ப அதிரடியைக் கொண்டு வந்திருக்கும் கவாஸ்கர் அவினாஷ் பாடல்களுக்கான இசையில் இதம் பரப்புகிறார். சந்தோஷ்குமார் வீராசாமியின் ஒளிப்பதிவு நேர்த்தி.
படு பயங்கரமான போதைப் பொருட்கள் கடத்துகிற இரு தாதாக்களுக்கு இடையிலான கோல்டுவார் போல் பரபரப்பாக துவங்கும் படம், மனிதர்களின் முடியை ஏற்றுமதி செய்கிற தொழில், அதில் போட்டி பொறாமை என சுறுசுறுப்பு காட்டி பின்னர் சிறு வட்டத்துக்குள் சுற்றிச் சுழலும்போது லேசாக சோர்வு எட்டிப் பார்க்கிறது.
வெறும் மயிறு என ஒதுக்கிப் போடும் மனிதர்களின் தலைமுடியை வைத்து உலகளவில் எந்தளவுக்கு வர்த்தகம் நடக்கிறது என்பதை, முடி எதற்கெல்லாம் பயன்படுகிறது என்பதை போகிற போக்கில் எடுத்துச் சொல்லியிருப்பதைப் பார்த்தால் பிரமிப்பாக இருக்கிறது. அதையெல்லாம் வைத்து சர்வதேச சந்தை, கடத்தல் என வேறுவிதமாக அடித்து ஆடியிருக்கலாம். கிடைத்த பட்ஜெட்டில் சிம்பிள் ஸ்டோரியோடு ஒதுங்கியிருக்கிறார் இயக்குநர் தீரன் அருண்குமார்.
பிளாக் கோல்டு – கவரிங் தரம்!
-சு.கணேஷ்குமார்

