பாம் சினிமா விமர்சனம்

மனம் கெட்டவர்களால் தீர்க்கமுடியாத சாதிப் பாகுபாட்டை ஒரு பிணம் தீர்த்து வைக்கிற கதை.

அந்த கிராமம் சாதியால் இரண்டாக பிளவுபட்டுக் கிடக்கிறது. அதனால் பாலம் கட்டித்தருவது உட்பட ஊருக்கு அரசாங்கம் செய்து தர முன்வருகிற நலத்திட்டங்கள் தடைபடுகிறது. கதிரவன் என்ற இளைஞர் அந்த நிலைமையை மாற்ற, இரு தரப்பு மக்களையும் இணைத்து வைக்கும் முயற்சிகளில் இறங்குகிறார். அந்த முயற்சிகளுக்கு பலன் கிடைப்பதற்குள் திடீரென இறந்துபோகிறார். இறந்தவரின் உடல் குலுங்கிக் குலுங்கி ஆசனவாய் வழியாக வாயு பிரிகிறது, பிரிகிறது, பிரிந்துகொண்டே இருக்கிறது. இறந்தவரை அந்த ஊர் பூசாரி சாமியாகி விட்டார் என்று சொல்ல, இரு தரப்பு மக்களும் சடலத்தை கடவுளாக கருதி அலங்கரித்து வழிபட தொடங்குகிறார்கள்.

மக்களின் அந்த நம்பிக்கையைப் பயன்படுத்தி, கதிரவன் செய்ய நினைத்ததை கதிரவனின் நெருங்கிய நண்பரான மணி செய்து முடிக்க நினைக்கிறார்.

நினைத்தை அவர் எப்படி செய்கிறார், செய்யும்போது என்னென்ன பிரச்சனைகளைச் சந்திக்கிறார் என்பது கதையின் மீதி… கதை, திரைக்கதை: மணிகண்டன் இயக்கம்: விஷால் வெங்கட்

உயர்சாதிக்காரர் என்றாலும் முற்போக்கு சிந்தனையுடன் செயல்படுகிற, தான் சொல்லும் கருத்தை மக்கள் காதுகொடுத்து கேட்கத் தயாராக இல்லாதபோது குடிபோதையில் மாடுகளிடம் பேசி ஆறுதலடைகிற மனிதராக ஆரம்பக் காட்சியிலேயே மனதில் நுழைகிறார் கதிரவனாக வருகிற காளி வெங்கட். ஊரின் நன்மைக்காக கலெக்டரை பார்த்துப் பேசுவது, கீழ்சாதிக்காரரான மணியுடன் நட்போடிருப்பது என சில காட்சிகள் கடந்துபோக சட்டென மரணமடைகிறார். மக்கள் வழிபடும் சாமியாகிறார். மாலை மரியாதையுடன் அமர்ந்திருந்து, ‘டர்…புர்’ என ‘பாம்’ போடுகிற கடமையை செய்கிறார்.

கீழ்சாதிக்காரராக அர்ஜுன்தாஸ். ஒரு பேச்சு வார்த்தையின்போது மேல்சாதிக்காரரின் மகன் கன்னத்தில் அறைய, லேசாக முறைக்கக்கூட செய்யாமல் வலியையும் மன வேதனையையும் முகபாவங்களில் காட்டுகிறபோதே அடடே என்றிருக்கிறது. இறந்து சாமியாகிவிட்ட நண்பனை தூக்குகிற சக்தி ஊரில் அவருக்கு மட்டுமே கிடைக்க, அவரை மேல் சாதிக்காரர்களும் மதித்தாக வேண்டிய கட்டாயம். அப்படி மதிப்பதால் அலட்டிக் கொள்கிறாரா என்றால் அதுவும் இல்லை. மாஸ்டரில் விஜய்க்கு, குட் பேட் அக்லியில் அஜித்துக்கு வில்லனாக வந்து மிரட்டியவரா இவர் என ஆச்சரியப்படுத்தும்படி இருக்கிறது சாமானிய மனிதனுக்காக உடல்மொழியுடன் அவர் தந்திருக்கும் நடிப்பு. நண்பனின் தங்கையுடன் காதல், கொஞ்சல் என உற்சாகமூட்டும் காட்சிகளில் அதற்கேற்ப எளிமையாக பங்களித்திருக்கிறார்.

சற்றே பூசினாற்போலிருக்கும் ஷிவாத்மிகா ராஜசேகர் கிராமத்துப் பெண் கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். தங்கையாக காளி வெங்கட் மீது காட்டும் பாசம், காதலியாக அர்ஜுன்தாஸ் மீது பொழியும் நேசம் என நடிப்பில் சரியான உணர்வுகளை பிரதிபலித்திருக்கிறார்.

கீழ் சாதிக்காரர்களை ஏளனமாகப் பார்ப்பதும் பேசுவதுமாக சிங்கம்புலி கெத்து காட்ட, அவரது மகனாக வருகிற ராட்சசன் சரவணன் அதே சாதிவெறியை கொடூரமான செய்கையால் காட்டி அதிர வைக்கிறார்.

மேல்சாதிக் காரர்களின் கெளரவ அடையாளமான நாற்காலியில் கால் வைத்ததற்காக பாதங்களில் சூடு வைக்கப்பட்டு துடித்துப் போகிற பூவையாருடையது கவனம் ஈர்க்கிற கனமான கதாபாத்திரம்.

999 சப்ஸ்கிரைபர்களை கொண்ட யூ டியூப் சேனலுக்கு சொந்தக்காரராக வருகிற பாலசரவணன் கலகலப்பூட்டுகிறார்.

கலெக்டராக வருகிற அபிராமி, மக்களிடம் இருக்கிற சாதிப் பாகுபாட்டை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள திட்டமிடுகிற எம் எல் ஏ வாக நாசர் இருவரும் தனித்து தெரிய,

குலப்புளி லீலா, கிச்சா ரவி, டி எஸ் கே என இன்னபிற நடிகர் நடிகைகள் கிராமத்து மக்களோடு மக்களாக கலந்திருக்கிறார்கள்.

பி எம் ராஜ்குமாரின் தரமான ஒளிப்பதிவும், டி இமானின் நேர்த்தியான பின்னணி இசையும் கலந்துகட்ட காட்சிகள் அத்தனையும் தரம் உயர்த்திருக்கின்றன.

சாதிப் பிரிவினையை மையப்படுத்திய படங்களின் வரிசையில் இடம்பெறுகிற படைப்புகளில் ஒன்றாக இருந்தாலும், இதுவரை காணாத கதைக்களம் என்பது தனித்துவம். அந்த தனித்துவமான படைப்புக்கு திரைவடிவம் தந்த இயக்குநர் விஷால் வெங்கட், படத்தை தயாரித்துள்ள ஜெம்ரியோ பிக்சர்ஸ் சுதா சுகுமார், சுகுமார் பாலகிருஷ்ணன் உள்ளிட்டோருக்கு பாராட்டுக்களை பாரபட்சமின்றி வழங்கலாம்!

-சு.கணேஷ்குமார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here