ஏழை எளிய மக்கள் பணபலமும் அதிகார பலமும் கொண்டவர்களால் பாதிக்கப்படும்போது சட்டம் எந்த லட்சணத்தில் கடமையாற்றும் என்பது தெரிந்த கதை.
அந்த வழக்கமான கதையில் சாதியால் தாழ்த்தப்பட்டவர்களை உயர்சாதிக்காரர்கள் நடத்தும் விதம், சமீபமாக அதிகரித்து வருகிற பெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை என கலந்துகட்டியதில் உருவாகியிருக்கிறது ‘பொம்மை நாயகி.’
டீ கடையில் வேலை, எளிமையான வாழ்க்கையிலும் மனைவி, மகளோடு உற்சாகம் என நாட்களை நகர்த்திக் கொண்டிருப்பவர் யோகிபாபு. அவருடைய 9 வயது மகளிடம் சிலர் தவறாக நடக்க முயற்சிக்க அவர்கள் மீது காவல்துறையில் புகார் கொடுக்கிறார் யோகிபாபு. குற்றவாளிகள் அதிகார பலத்தாலும் பண பலத்தாலும் காவல்துறையை விலைக்கு வாங்கிவிட, அடுத்ததாக நீதிமன்றத்தை நம்புகிறார். அவரது நம்பிக்கைக்கு கிடைத்த பலன் என்ன என்பது கதையோட்டம். இயக்கம் ஷான்
சாதியில் தாழ்ந்த, எளிமையான குடும்பத் தலைவன் பாத்திரத்தில் (முற்றிலுமாக காமெடி தவிர்த்த) யோகிபாபுவின் நடிப்பு நேர்த்தி!
தனக்கு நடந்தது என்னவென்று புரியாத, ஆனால் நடந்ததை சொல்லத் தெரிகிற கதாபாத்திரத்தை ஏற்றிருக்கிற சிறுமி ஸ்ரீமதிக்கு, கதைப்படியும் நிஜத்திலும் கிட்டத்தட்ட ஒரே வயது என்பதால் அந்த கதாபாத்திரத்தில் இயல்பாக பொருந்திப் போயிருக்கிறார். நடிப்புப் பங்களிப்பும் கவர்கிறது.
யோகிபாபுவின் மனைவியாக சுபத்ரா, அப்பாவாக ஜி.எம். குமார், அண்ணனாக அருள்தாஸ், வழக்கு விசாரணையை துணிச்சலாக எதிர்கொள்ள யோகிபாபுவுக்கு துணைநிற்கிற தோழராக ஹரி, சிங்கம் ஜெயவேல், ‘ராக்ஸ்டார்’ ரமணியம்மாள், நீதிபதிகளாக வருகிற மைபா நாராயணன், இயக்குநர் எஸ் எஸ் ஸ்டேன்லி என அத்தனைப் பேரின் நடிப்பும் கதையோட்டத்துக்கு பலம்!
தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளர் சுமையா, பள்ளி ஆசிரியராக வந்து கவனம் ஈர்க்கிறார். அவருக்கு இது முதல் படமென்பதும், அவர் இந்த படத்தின் இயக்குநரின் வாழ்க்கைத் துணை என்பதும் குறிப்பிடத்தக்க செய்தி!
‘அடியே அடியே’, ‘வானம் தாயாக’ பாடல்கள் மனம் வருட, அந்த திருவிழா பாடலில் உற்சாகத் தீ மூட்டியிருக்கிறார் சுந்தரமூர்த்தி.
இந்த கதையின் வழி… பணபலத்தை, அதிகார பலத்தையெல்லாம் தாண்டியும்கூட குற்றவாளிகள் சட்டத்தால் தண்டிக்கப்பட வாய்ப்பிருக்கிறது என்பதையும், பாதிக்கப்பட்டோரிடம் துணிச்சல் இருந்தால் அது சாத்தியம் என்பதையும் எடுத்துச் சொல்லி நம்பிக்கையூட்டியிருப்பதற்காக இயக்குநரை பாராட்டலாம்!