‘குடிச்சுக் குடிச்சு குடல் வெந்து சாகாதீங்க; குடும்பத்த நடுத்தெருவுல நிறுத்தாதீங்க’ன்னு அறிவுரை சொன்ன படங்கள் நிறைய உண்டு. ‘குடிக்கு அடிமையானவங்க மறுவாழ்வு மையத்துக்கு போங்க; ஆல்கஹாலுக்கு குட்பை சொல்லி புது மனுசனா மாறுங்க’ன்னு புத்திமதி சொல்லியிருக்கிற படம் இது.
ராதாமணி பலராலும் ‘பாட்டல் ராதா’ என்று அழைக்கப்படுகிற முரட்டுக் குடிகாரர். அப்படிப்பட்டவர்கள் என்னென்ன அடாவாடியி செய்வார்களோ அதில் எதையும் மிச்சம் வைக்காமல் செய்கிறார். அவரது தொல்லை பொறுக்க முடியாத அவரது மனைவி குடிநோயாளிகளை மீட்டெடுக்கும் மையத்தில் அவரை சேர்த்து விடுகிறார்.
அந்த மையம் அவரை திருத்தும் என்று பார்த்தால் வருத்துகிறது. அங்கிருந்து வெளியேற அவர் ஒரு வில்லங்கமான முடிவெடுக்கிறார். அதன் விளைவுகள் என்ன என்பதும், குடிப் பழக்கத்திலிருந்து அவர் மீண்டாரா இல்லையா என்பதும் கதையின் மீதி… இயக்கம் தினகரன் சிவலிங்கம்
ராதாமணியாக குரு சோமசுந்தரம். தோற்றத்திலும் நடவடிக்கைகளிலும் நிஜமான குடிநோயாளியாகவே மாறியிருக்கும் அவர் குடித்துவிட்டுச் செய்யும் அலப்பரைகள் ரசிக்கவும், குடிகாரர்கள் மீது கோபத்தை தூண்டவும் செய்கிறது. மறுவாழ்வு மையத்தின் கெடுபிடிகள் அடிதடிகள் தாங்காமல் தப்பிக்க முயற்சிப்பது, தவறுகளை உணர்ந்து மனைவி குழந்தைகளிடம் பாசம் காட்டுவது என நீளும் காட்சிகளை அலட்டலில்லாத யதார்த்தமான நடிப்பால் நிரப்பியிருக்கிறார்.
கணவனின் கொடுமைகளைத் தாங்கிக் கொண்டு, அவனை திருத்துவதற்காக தன்னாலான முயற்சிகளை செய்பவராக சஞ்சனா நடராஜன். கழுத்தெலும்புகள் எட்டிப் பார்க்கும் ஒல்லிப்பிச்சான் உடம்பும் ஒடுங்கிய கன்னங்களும் அவரது கேரக்டருக்கு பொருத்தமாய் அமைந்துவிட, எளிமையான நடிப்பால் ஏற்ற பாத்திரத்தை தாங்கிப் பிடித்திருக்கிறார்.
மறு வாழ்வு மையத்தின் முதன்மை நிர்வாகியாக வருகிற ஜான் விஜய், தனது வழக்கமான நக்கல் நையாண்டி, திமிர் தெனாவட்டு என எல்லாவற்றையும் தூக்கிப் போட்டுவிட்டு வேறொரு பரிமாணத்துக்கு தாவியிருக்கிறார். குடிநோயாளிகள் அத்துமீறும்போது அதிரடியாய் அடக்குவது, நல்வழிப்படுத்தும் ஆசானாக மாறி அன்பைப் பொழிவது என அவரிடமிருந்து வெளிப்பட்டிருக்கும் பக்குவ நடிப்பு இதுவரை பார்க்காதது.
கொடுக்கப்பட்ட வசனங்களை தன் பாணியில் குசும்பு குறும்புமாக டெலிவரி செய்து கலகலப்பூட்டுகிறார் மாறன்.
ஆண்டனி, ‘ஜமா’ பாரி இளவழகன், ஆறுமுகவேல், அபி ராமையா என ஏகப்பட்ட நடிகர் நடிகைகள் திரையை குறையில்லாத நடிப்பால் ஆக்கிரமித்திருக்க, குரு சோமசுந்தரத்தின் வாரிசுகளாக வருகிற சிறுவனும் சிறுமியும் மனதில் நிறைகிறார்கள்.
‘யோவ் பாட்டிலு’ பாடலுக்கு ஆட்டம் போடத் தூண்டும் விதத்தில் இசையமைத்திருக்கும் ஷான் ரோல்டன், பின்னணி இசையால் காட்சிகளைப் பலப்படுத்தியிருக்கிறார். இடைவேளை காட்சியில் கடந்துபோகும் பி ஜி எம் பீதி கிளப்புகிறது.
ரூபேஷ் ஷாஜியின் ஒளிப்பதிவு நேர்த்தி.
குடி நோயாளிகளை திருத்துகிற மையத்தில் நடக்கும் கட்டுப்பாடுகளைக் காண்பித்திருப்பதோடு அங்கெல்லாம் நடக்கும் அடக்குமுறை அராஜகங்களையும் தொட்டுக் காட்டியிருப்பது குடி நோயாளிகளுக்கும், குடி நோயாளிகளை அப்படியான மையத்தில் சேர்க்க நினைப்போருக்கும் ஒருவித பயத்தை உருவாக்கலாம்.
பார்த்துக் கொண்டிருப்பது டாகுமென்ட்ரியோ என்ற சந்தேகப்பட வைக்கும் காட்சிகள் படத்தின் பலவீனம்.
அதையெல்லாம் தாண்டி, குடிபோதையால் சீரழிந்துவரும் நம் ஊர் உலகத்தை மனதில் வைத்து ‘சிலரையாவது திருத்திவிடலாம்’ என்ற நம்பிக்கையில் நீலம் புரொடக்சன்ஸ் உருவாக்கியிருக்கும் இந்த பாட்டல் ராதா சமூக அக்கறையுள்ள தாதா!
-சு.கணேஷ்குமார்