கணவனும் மனைவியும் பிரிவதென்பது சுலபமாக இருக்கிறது; அவர்களின் முடிவால் அவர்களுக்கு பிறக்கும் பிள்ளைகளின் நிலைமை பரிதாபமாக இருக்கிறது. அதனால், பிரிவதற்கு முன் ஒரு முறைக்கு இருமுறையல்ல, பலமுறை யோசியுங்கள்.
இப்படியொரு கருத்தை சொல்ல முயற்சி செய்திருக்கிற படம்.
பல்லாயிரம் கோடிக்கு அதிபதியான ஹீரோயினுக்கு குப்பை அள்ளுகிற இளைஞன் மீது காதல் உருவாகிறது. ஹீரோயினின் அப்பா காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்க, அதை மீறி காதலர்கள், கணவன் மனைவியாகிறார்கள். ஒரு கட்டத்தில் பிரிகிறார்கள்.
இப்படியான கதையில், பிரிந்தவர்கள் சேர்கிறார்களா இல்லையா என்பதுதானே கிளைமாக்ஸாக இருக்க வேண்டும்? அதுதான் இல்லை. அவர்களின் பிரிவு, டைவர்ஸுக்கு தயாராகியிருக்கிற ஒரு கணவன் மனைவியை மீண்டும் சேர்த்து வைக்க உதவுகிறது. அது எப்படி என்பதே திரைக்கதை… இயக்கம் ஏ ஆர் காந்தி கிருஷ்ணா
தன் தகுதிக்கு மீறிய பெண்ணைக் காதலித்து உற்சாகத்தில் மிதப்பது, காதல் மயக்கத்தில் அவள் கொடுக்கிற வசதியான வாழ்க்கையை அனுபவிப்பது, அப்படி அனுபவித்தது தவறென உணர்வது என தனக்கு வழங்கப்பட்டிருக்கும் கனமான கதாபாத்திரத்திற்கு பொருத்தமாக நடித்திருக்கிறார் ஹீரோவாக வருகிற பிக்பாஸ் ராணவ்.
ஹீரோயினாக வருகிற ரோஸ்மினுக்கு பணக்காரத் திமிரை இதுவரை யாரும் காட்டாத அளவில் காட்டுகிற வேலை. மிரட்டலாக காட்டியிருக்கிறார். அந்த, தாய்ப்பாலை தாறுமாறாக பீய்ச்சியடிக்கும் காட்சி அதிர்ச்சி தராமல் விடாது.
அந்தஸ்தை காரணம் காட்டி மகளின் காதலை எதிர்க்கும் அப்பாவாக சம்பத் தந்திருக்கும் நடிப்பு கெத்து.
சுவாரஸ்யமான சில காட்சிகளால் கிரித்திக் மோகன் – அமிதா ரங்கநாத் ஜோடியின் நடிப்பு கவனம் பெறுகிறது. முக்கியத்துவமுள்ள கதாபாத்திரத்தில் வந்துபோகிறார் கஸ்தூரி. ரவி மரியா ஏற்ற கடமையை சரியாக செய்திருக்கிறார்.
பாடல்களிலும் பின்னணி இசையிலும் உயிரோட்டம் தந்திருக்கிறார் ஜி வி பிரகாஷ். நேர்த்தியான ஒளிப்பதிவால் காட்சிகளைத் தரமாக்கியிருக்கிறார் எம் வி பன்னீர்செல்வம்.
எதை வேண்டுமானாலும் எடுக்கலாம்; எல்லாவற்றையும் ஆடியன்ஸ் ரசிப்பார்கள் என்ற நினைப்பில், இன்றைய தலைமுறையின் விருப்பங்களைப் புரிந்துகொள்ளாமல் எடுத்துக் குவிக்கப்பட்ட காட்சிகளால் படத்தின் நீளம் 142 நிமிடங்களாகி அலுப்பு சலிப்பு தருகிறது. ‘இது 40, 50 வருடங்கள் முன் வந்திருக்க வேண்டிய படம்’ என்ற உணர்வைத் தருகிறது.
பிரேக்ஃபாஸ்ட் – சரியில்லை டேஸ்ட்!
-சு.கணேஷ்குமார்
–

