கேரள மாநில லாட்டரியை மையமாகக் கொண்ட ‘பம்பர்‘ படத்தில் ‘8 தோட்டாக்கள்’ மற்றும் ‘ஜீவி’ படங்களில் நடித்து கவனம் ஈர்த்த வெற்றி கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக ஷிவானி நாராயணன் நடிக்கிறார்.
இப்படத்தில் துப்பாக்கி பாண்டியன் என்ற முற்றிலும் வித்தியாசமான வேடத்தில் சமூக வலைதளங்களில் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கும் ஜி பி முத்து நடிக்கிறார். சுவாரசியமான கதாபாத்திரம் ஒன்றை தங்கதுரை ஏற்றுள்ளார்.
வேதா பிக்சர்ஸ் பேனரில் சு. தியாகராஜா தயாரிக்கும் இப்படத்தை இயக்குநர்கள் மீரா கதிரவன் மற்றும் ‘கொம்பன்’ முத்தையா உள்ளிட்டவர்களிடம் பணியாற்றிய அனுபவமுள்ள எம். செல்வக்குமார் இயக்குகிறார்.
இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு எருமேலியில் இருந்து சபரிமலைக்கு செல்லும் பெருவழிப்பாதை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கேரள அரசின் உரிய அனுமதியுடன் நடந்து நிறைவடைந்தது. பின்னர் தூத்துக்குடி, திருவனந்தபுரம், புனலூர் உள்ளிட்ட பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெற்றது.
படத்தை பற்றி பேசிய இயக்குநர் செல்வக்குமார், “கேரள பம்பர் லாட்டரி தான் கதைக்களம். கதாநாயகனுக்கு இணையான கதாபாத்திரத்தில் ஹரீஷ் பேரடி நடிக்கிறார். ஜி.பி. முத்து வரும் காட்சிகள் ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஊட்டும். படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்த நிலையில் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளன. விரைவில் படம் ரிலீசுக்கு தயாராகிவிடும்” என்றார்.
படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைக்க கார்த்திக் நேத்தா பாடல்களை இயற்றுகிறார். ஒளிப்பதிவை நெடுநல்வாடை, எம்ஜிஆர் மகன், ஆலம்பனா மற்றும் கடமையை செய் உள்ளிட்ட திரைப்படங்களின் ஒளிப்பதிவாளர் வினோத் ரத்தினசாமி கையாள்கிறார். படத்தொகுப்புக்கு மு.காசிவிஸ்வநாதன் பொறுப்பேற்றுள்ளார்.