தனுஷ் நடிக்கும் புதிய படம்… அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் 1930 – 40 களில் நடக்கும் கதையாக ‘கேப்டன் மில்லர்.’

தனுஷ் நடிப்பில், ‘ராக்கி’, ‘சாணி காயிதம்’ படங்களைத் தந்த அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகும் புதிய படம் ‘கேப்டன் மில்லர்.’ இந்த படத்தை சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்த படம் 1930கள்-40களின் பின்னணியை கதைக்களமாகக் கொண்டு பீரியட் ஃபிலிமாக பிரம்மாண்டமாக உருவாகவுள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் இப்படம் வெளியாகவுள்ளது.

படம் பற்றி சத்யஜோதி பிலிம்ஸ் தியாகராஜன் கூறும்போது, “எங்கள் தயாரிப்பு நிறுவனத்தில், பிரமாண்டமான அளவில் உருவாகும் நம்பிக்கைக்குரிய திரைப்படங்களில் ஒன்றாக இப்படம் இருக்கும். தனுஷுடன் பணிபுரிவது மிகுந்த மகிழ்ச்சி. காரணம் எங்களின் கூட்டணியில் வெளியான முந்தைய திரைப்படங்கள் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளன. இயக்குநர் அருண் மாதேஸ்வரன் எனக்கும், தனுஷுக்கும் ஸ்கிரிப்டை விவரித்தபோது, நாங்கள் இருவரும் உற்சாகமானோம். பெரிய அளவில் இதனை உருவாக்க விரும்பினோம்.

இயக்குநர் அருணின் வழக்கத்திற்கு மாறான சிந்தனை மற்றும் விதிவிலக்கான படைப்புகளை வழங்கும் முயற்சி, மாறுபட்ட அவரது திரைப்படத் தயாரிப்பு முறைகள் என அனைத்தும் எனக்கும் மிகவும் பிடிக்கும், அவர் ஸ்கிரிப்டை விவரித்தபோது, அவரது சிந்தனை மற்றும் அவரது திரைக்கதையால் நான் மிகவும் ஈர்க்கப்பட்டேன். இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷின் தனித்துவமான இசை இந்தப் படத்தின் தரத்தை மேலும் உயர்த்தும். இந்தப் படத்தில் நடிக்கும் ஒவ்வொரு நடிகரும், தொழில்நுட்பக் கலைஞர்களும் ஏற்கனவே தங்களுக்கென சிறப்பான ஒரு இடத்தைச் செதுக்கியிருக்கிறார்கள். மேலும் அவர்களின் பங்களிப்பு ‘கேப்டன் மில்லரை’ பெரிய அளவில் கொண்டு செல்லும்” என்றார்.

இந்த திரைப்படத்திற்கு நட்சத்திர நடிகர்கள் மற்றொரு ஈர்க்கும் அம்சமாக இருப்பார்கள். தொழில்நுட்பக் குழுவினர் அந்தந்த துறையில் சாதனை புரிந்த, சிறந்த திறமைகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில் நடிக்கும் மற்ற நடிகர்கள் குறித்த விவரங்கள் விரைவில் வெளியாகும்.

இந்த படத்திற்கு மதன் கார்க்கி வசனம் எழுதுகிறார். பாகுபலி படங்கள், ஆர்ஆர்ஆர், புஷ்பா போன்ற மிகப்பெரும் பிளாக்பஸ்டர் படங்களுக்கு அவரது சிறப்பான வசனங்கள் பலமாக இருந்தது போல் கேப்டன் மில்லருக்கும் கூடுதல் ஈர்ப்பாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மற்ற தொழில்நுட்ப வல்லுநர்களில் ஸ்ரேயாஸ் கிருஷ்ணா (ஒளிப்பதிவு), நாகூரன் (எடிட்டர்), த.ராமலிங்கம் (கலை), பூர்ணிமா ராமசாமி & காவ்யா ஸ்ரீராம் (ஆடை வடிவமைப்பு), திலீப் சுப்பராயன் (சண்டை காட்சி இயக்கம்), Tuney John 24am(பப்ளிசிட்டி டிசைனிங்) ஆகியோர் பணிபுரிகின்றனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here