அப்பாவின் ஈடுபாடு காரணமாகவே ‘கோப்ரா’ மிகப்பெரிய வெற்றி பெறும்! ‘கோப்ரா’ படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழாவில் நடிகர் துருவ் விக்ரம் உறுதி

 

‘கோப்ரா’ படத்தின் பாடல்கள் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கும் நிலையில், படத்தின் முன்னோட்ட (Trailer) வெளியீட்டு விழா சென்னை அண்ணாநகர் பி.வி.ஆர். திரையரங்கத்தில் ‘கோப்ரா’ நடைபெற்றது. படத்தின் நாயகன் சீயான் விக்ரம், நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி, படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் நடிகைகளான மீனாட்சி கோவிந்தராஜன் மற்றும் மிருணாளினி ரவி, நடிகர் துருவ் விக்ரம், குழந்தை நட்சத்திரம் ரனீஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
விழாவில் சீயான் விக்ரம், ” இயக்குநர் அஜய் ஞானமுத்து, ‘டிமான்டி காலனி’, ‘இமைக்கா நொடிகள்’ என ஒவ்வொரு படமும் வித்தியாசமான ஜானரில் இயக்கியிருந்தார். ‘கோப்ரா’ படத்தையும் அவர் வழக்கமானதைக் காட்டிலும் புதிதாக இயக்கியிருக்கிறார். அவரால் இன்று இந்த நிகழ்விற்கு வர இயலவில்லை. படத்தின் இறுதி கட்டப் பணிகளில் கவனம் செலுத்தி வருகிறார். இந்தப்படம் அவருடைய கற்பனை படைப்பு. நாங்கள் எல்லாம் அதற்கு ஒத்துழைப்பை வழங்கி இருக்கிறோம்.
நான் நடித்த படம் திரையரங்குகளில் வெளியாகி மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டது. இந்த படத்திற்காக திருச்சி, மதுரை, கோயம்புத்தூர் என ஒவ்வொரு இடத்திற்கு செல்லும்போதெல்லாம் ரசிகர்களின் வரவேற்பும், அவர்கள் காட்டும் அன்பும் பிரமிக்க வைத்தது. அவர்கள் என் மீது காட்டும் அன்பை அளவிட முடியாது. தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய இடங்களுக்கும் சென்று ரசிகர்களை சந்திக்கலாம் என்ற திட்டமும் இருக்கிறது.

‘கோப்ரா’ படத்திற்கு படக்குழுவினர் கடுமையாக உழைத்திருக்கிறார்கள். ஆகஸ்ட் 31ஆம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. ஆதரவு தாருங்கள்” என்றார்.

நடிகை மீனாட்சி கோவிந்தராஜன், ” கோப்ரா படம் வெளியாகும் முதல் நாள் முதல் காட்சி பார்க்க வேண்டும் என்ற ஆவல் மற்றவர்களைப் போல் எனக்கும் இருக்கிறது” என்றார்.

நடிகை மிருணாளினி ரவி, ” 2019 ஆம் ஆண்டில் சின்ன சின்ன வீடியோக்கள் மூலம் கவனத்தை கவர்ந்து வந்த என்னை, இயக்குநர் அஜய் சார் தொடர்பு கொண்டு, ‘கோப்ரா’ படத்தில் நடிக்கும் வாய்ப்பை வழங்கினார். சீயான் விக்ரம் சாருடன் நடிக்க வேண்டும் என்பது என்னுடைய கனவாக இருந்தது. அந்த கனவையும் இயக்குநர் அஜய் நனவாக்கினார். அவர் நடித்த ‘சாமி’, ‘அந்நியன்’ ஆகிய படங்களை பார்த்து, தீவிர ரசிகையாக இருந்த எனக்கு, அவருடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்ததை இப்போது வரை நம்பமுடியவில்லை; நடந்தது கனவு போலவே இருக்கிறது. ஆகஸ்ட் 31-ம் தேதி ‘கோப்ரா’ படத்தை ரசிகையாக பார்க்க ஆவலாக இருக்கிறேன்” என்றார்.

நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி, ” சீயான் விக்ரம் சாருடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்பது என்னுடைய கனவுகளில் ஒன்று. அது இந்த ‘கோப்ரா’ படத்தின் மூலம் நிறைவேறி இருக்கிறது. இதற்காக இயக்குநர் அஜய் ஞானமுத்து, தயாரிப்பாளர் லலித் குமார் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். படப்பிடிப்பு தளத்தில் என்னை இயல்பாக இருக்க வைத்து, படப்பிடிப்பு முழுவதையும் உற்சாகமாக பணியாற்ற வைத்ததில் விக்ரம் சாரின் ஒத்துழைப்பு மறக்க இயலாது. தமிழில் முதன் முதலாக அறிமுகமாகும் இந்த படத்தில் உடன் பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும், நடிகர் நடிகைகளுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ஆகஸ்ட் 31ம் தேதி வெளியாகும் கோப்ரா திரைப்படத்தை திரையரங்குகளுக்கு சென்று பார்த்து ஆதரவளிக்க வேண்டும்” என்றார்.

நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட நடிகர் துருவ் விக்ரம், ”என்னுடைய அப்பா கடின உழைப்பாளி என்று அனைவருக்கும் தெரியும். அவருடன் ‘மகான்’ படத்தில் பணியாற்றும்போது ஒரு விசயத்தை உன்னிப்பாக கவனித்தேன். நீளமான காட்சி ஒன்றில் மும்முரமாக நடித்துக் கொண்டிருந்தோம். ஒரு கட்டத்தில் எனக்கு சோர்வு ஏற்பட்டது. ஆனால் அப்பா சோர்வே இல்லாமல், உற்சாகத்துடன் படப்பிடிப்பு தளத்தில் நடித்துக் கொண்டிருந்தார். அப்போது அவரிடம், ‘எனக்கு எனர்ஜி போய்விட்டது. ஆனால், நீங்கள் உற்சாகத்துடன் இருக்கிறீர்களே, எப்படி?’ என்று கேட்டேன். அதற்கு அவர், ‘இந்த இடத்திற்கு வர கடுமையான போராட்டத்தை சந்தித்திருக்கிறேன். அதனால், இந்த உற்சாகம் தொடர்கிறது என நினைக்கிறேன்’ என்றார். கலைத்துறை ஈடுபாட்டில் அந்தளவுக்கு அவர் ஒரு சிறப்பு மிக்க மனிதர். அதன் காரணமாகவே அவர் நடித்திருக்கும் ‘கோப்ரா’ மிகப்பெரிய வெற்றியைப் பெறும்” என்றார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here