பள்ளிப் பருவத்தில் காதலிப்பவர்கள் பற்றிய கதையில் உருவாகும் படங்கள் அவ்வப்போது வெளிவந்தாலும், எப்போதாவது ஒருசில படங்கள் மட்டுமே கவனிக்கப்படுகின்றன; கணிசமான வெற்றியைப் பெறுகின்றன. ‘செல்ல குட்டி’யின் கதையும் பள்ளிப் பருவத்தில் காதலிப்பவர்களையே சுற்றிச் சுழல்கிறது.
சிவா, சூர்யா, செந்தாமரை மூவரும் பள்ளிப் படிப்பைத் தொடர்கிற 1998 காலகட்டம். தாமரைப் பூவைப் போல அழகாக இருக்கிற செந்தாமரையை, சிவா காதலிக்கிறான். செந்தாமரை, தன்னுடன் சிறுவயதிலிருந்து பழகுகிற உறவினர் வீட்டு வாரிசான சூர்யாவை காதலிக்கிறாள். சிவா, செந்தாமரையிடம் தன் காதலை சொல்ல அவள் ஏற்க மறுக்கிறாள்.
செந்தாமரை தன் காதலை சூர்யாவிடம் சொல்கிறாள். சூர்யாவுக்கு, சிவா செந்தாமரையைக் காதலிப்பது தெரியுமென்பதால், அவளது காதலை ஏற்க மறுக்கிறான். அப்படி ஏற்றால் அது உடன் படிக்கும் நண்பன் சிவாவுக்கு செய்யும் துரோகம் என நினைக்கிறான்.
கதை இப்படியாக நகர, செந்தாமரைக்கு கல்யாணம் நடக்கிறது. கல்யாணத்துக்குப் பிறகு அவள் வாழ்க்கையில் ஒரு நல்ல விஷயமும், மனதைக் கலங்கடிக்கும் சில விஷயங்களும் நடக்கின்றன…
செந்தாமரை யாருக்கு மனைவியானாள், மனைவியானபின் அவளுக்கு என்னவெல்லாம் நடந்தது என்பதெல்லாம் திரைக்கதையின் பரபரப்பான அத்தியாயங்கள். இயக்கம் சகாயநாதன்
பிரதான பாத்திரங்களிலும், இன்னபிற பாத்திரங்களிலும் வலம்வருபவர்கள் கதையின் தேவையறிந்து தங்கள் கதாபாத்திரத்தை பலப்படுத்தும்படி நடித்திருக்க, டி எஸ் முரளிதரன் இசையில் ‘புன்னகையில் பூ பறிக்கும்’ என தொடங்கும் அசத்தலான டூயட் பாடல் மனதுக்கு இதம் தருகிறது. மஸ்காரா அஸ்மிதா ஸ்லிம்மாக இருந்தபோது ரசிக்கும்படி ஆட்டம் போட்டிருக்கும் ‘கட்டு கட்டு கமர்கட்டு’ என்ற பாடலும் படத்திலிருக்கிறது. பாடல்கள் படமாக்கப்பட்டிருக்கும் லொகோசன்களின் அழகு கண்களுக்கு விருந்து படைத்திருக்கிறது.
நட்பு, காதல் என பல காலமாக பார்த்து பழகிய கதைக்களத்தில் அமைந்த மற்றொரு படம்தான் என்றாலும், இந்தக்கால ரசிகர்கள் மனதைக் கவர்வது சிரமம்தான் என்றாலும்,
பெண்ணின் மனதைப் புரிந்து கொள்ளாதவர்களால், அந்த பெண் எப்படியெல்லாம் பாதிக்கப்படுகிறாள் என்பதை எடுத்துக்காட்டிய விதத்தில், செல்ல குட்டி செம கெட்டி!