ஆடியன்ஸுக்கு பிடிக்குமா பிடிக்காதா? படம் ஓடுமா ஓடாதா? ஓடிடி’யில் வரவேற்பு பெறுமா பெறாதா?
இப்படி எதைப் பற்றியும் யோசிக்காமல், ‘என் மனதில் தோன்றுவதை எடுப்பேன்’, ‘எனக்கு தெரிந்த மாதிரி எடுப்பேன்’ என களமிறங்கும் இயக்குநர்கள், அவர்களுக்காக செலவிடும் தயாரிப்பாளர்கள் நம்மிடையே உண்டு. அப்படிப்பட்டவர்களால் கருவாகி உருவாகும் படங்கள் எப்படியிருக்குமோ அப்படியொரு படம்.
மார்க்கெட்டிங் வேலையிலிருக்கிற அந்த நான்கு இளைஞர்களைப் பார்த்தால் ‘வேலையில் சீரியஸாக இருக்க மாட்டோம்’ என குலதெய்வம் மீது சத்தியம் செய்திருப்பதாக தோன்றும். அந்தளவுக்கு ஜாலியாக நாட்களைக் கடத்திக் கொண்டிருக்கிறார்கள். உருப்படியாக எதையாவது செய்து விட மாட்டார்களா என நாம் எதிர்பார்த்துக் காத்திருக்க, ஒரு கட்டத்தில் நான்கு பேரையும் போலீஸ் தேடுகிற அளவுக்கு ஓரு சம்பவம் செய்கிறார்கள்.
அப்படி என்னதான் செய்தார்கள் என்பதை ஜென்ஸி தலைமுறையின் ரசனைக்கேற்ற திரைமொழியில் தொகுத்திருக்கிறார் இயக்குநர் தம்பிதுரை.
சித்து மூலிமணி, ஸ்ரீ வைஷ்ணவ், சந்தோஷ் எஸ் ஏ, கிருஷ்ணா விஜய் சந்திரன் என நான்கு பேர் கூட்டணி ‘கோல்ட் கால்’ என்கிற மார்க்கெட்டிங் பயிற்சியை எந்த கவலையுமில்லாமல் ஜாலி கேலியாக எதிர்கொள்வது ரசிக்கும்படியிருக்கிறது. ஒரு உயிரைக் காப்பாற்றுகிற வாய்ப்பு கிடைக்கிறபோது அதை தவற விடாமல் ரிஸ்க் எடுப்பது அவர்களின் கேரக்டர்கள் மீதான மதிப்பை உயர்த்துகிறது.
நாயகி அமிதா ரங்கநாத், நிஷா ஹெக்டே இருவரின் நடிப்பில் இளமைத் துள்ளலும் எனர்ஜியும் நிரம்பியிருக்கிறது.
பாலாஜி, ஸ்ரீகாந்த், மேரி லிட்டி, கீர்த்தனா புல்கி என இன்னபிற கேரக்டர்களும் கவனம் பெறுகிற அளவில் பங்களித்திருக்க,
பாலாஜி ராஜசேகர், தம்பிதுரை, நுதன், நிதின் சாம் ரெஜினோல்ட் என நான்குபேர் கூட்டணியின் வசனங்கள் கலகலப்புக்கும் கதையின் சொல்லிக்கொள்ளும்படியான பகுதிகளுக்கும் நல்ல மைலேஜ் தருகிறது.


