வருடத்திற்கு ‘யூ சர்டிஃபிகேட்’டில் பத்து படங்கள் வந்தால் அதிகம். அப்படியாகிவிட்ட சூழ்நிலையில் ‘யூ’வோடும் நகைச்சுவையோடும் திரைக்கு வந்திருக்கிறாள் இந்த ‘சண்டக்காரி.’
‘தி ப்ரொபோசல்’ என்ற ஹாலிவுட் படத்தின் தழுவலாக, மலையாளத்தில் வெளியாகி வெற்றி பெற்ற ‘மை பாஸ்‘ படத்தின் தமிழ் மேக்கிங்.
ஹீரோ விமல் லண்டனில் சாப்ட்வேர் நிறுவனமொன்றி பணிபரிகிறார்; அவரது உயரதிகாரி ஸ்ரேயா பெரிய சண்டக்காரி; வேலையில் அத்தனை கண்டிப்பானவர். யாராவது சின்னதாக தப்பு செய்தாலும் அவரது ரியாக்சன் கடுமையாக இருக்கும். மொத்தத்தில் செம டெரர் பார்ட்டி.
அவர் ஒரு பெரிய சிக்கலிலிருந்து தப்பிக்க, தனக்கு கீழ் வேலை செய்யும் விமலை காதலிப்பதாகவும், விரைவில் கல்யாணம் என்று அடித்து விடுகிறார். அதன் விளைவாக ஸ்ரேயா விமலுடன் அவரது கிராமத்துக்கு சென்று அங்கேயே சிலபல நாட்கள் வசிக்க வேண்டியதாகிறது.
ஸ்ரேயா விமலை காதலிப்பதாக சொன்னது வேண்டுமானால் பொய்யாக இருக்கலாம்; ஆனால், விமலுக்கு ஸ்ரேயா மீது அம்புட்டு காதல். அவர், கிடைத்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி ஸ்ரேயாவுக்கு பிராக்கெட் போட, அல்ட்ரா மாடர்ன் அழகி ஸ்ரேயா பிடிகொடுக்காமல் நாட்களை கடத்த அந்த தருணங்கள் அத்தனையும் சுவாரஸ்யம்.
போலி காதலர்கள் நிஜ காதலர்களாக மாறினார்களா? மண வாழ்க்கையில் இணைந்தார்களா?
இந்த கேள்விகளுக்கான பதில்களாய் கடைசி அரை மணி நேரம் பரபரப்பு, விறுவிறுப்பு. இயக்கம் ஆர். மாதேஷ்
விமலை ‘கலகலப்பு’க்கு பஞ்சமில்லாத கதையில் இறக்கினால் என்னவெல்லாம் ‘களவாணி’த்தனம் செய்வாரோ அதையெல்லாம் ஒன்று விடாமல் செய்திருக்கிறார். அவரது ‘தர்ம யுத்தத்துக்கு’ அத்தனையும் தேவைப்படுகிறது. காட்சிக்கு காட்சி ரசிக்க முடிகிறது.
உயர் பதவிக்கான அலட்டல், கறாராக இருப்பதை குறைத்துக் கொள்ளாத குணம், தன்னை நெருங்கி நெருங்கி வரும் விமலிடம் லெப்ஃட் ஹேண்ட் டீலிங் என ஸ்ரேயாவின் பங்களிப்பு அதிரி புதிரி அட்டகாசம்.
நம்ம மூஞ்சிக்கெல்லாம் இங்லீஷ் செட்டாகாது சார், சிரிச்சிடுவானுங்க’ என்று கலாய்ப்பதில் தொடங்கி விமலுடன் சேர்ந்து சத்யன் அடிக்கும் லூட்டிகள் எக்கச்சக்கம். அப்படி வந்து இப்படி போகிற கிரேன் மனோகர் கூட ஸ்ரேயா – விமல் ஜோடிப் பொருத்தத்தை ‘பீஸாவுல பாயா ஊத்துனது மாதிரி இருக்குது’ என இழுத்துப் போட்டு குத்துகிறார். அந்தளவுக்கு எல்லா கேரக்டர்களுக்கும் முக்கியத்துவம் இருக்கிறது. கே.ஆர். விஜயா, இளைய திலகம் பிரபு என சீனியர்களையும் பார்க்க முடிகிறது.
வடிவேல் பாலாஜியெல்லாம் நடித்திருப்பதைப் பார்த்தால் படம் எடுக்கப்பட்டு வருடக்கணக்கில் ஆகிறது என்பதை தெரிந்து கொள்ள முடிகிறது.
விமலும் ஸ்ரேயாவும் உற்சாக ஆட்டம் போடும் பாடல்களுக்கு துள்ளலிசை தந்திருக்கும் அம்ரீஷின் பின்னணி இசை காமெடி சென்டிமென்ட் கதைக்களத்துக்கு பொருத்தம்.
அயல்நாட்டுக் காட்சிகளில் ரிச்னெஸ், கிராமத்துக் காட்சிகளில் பசுமையை வளைத்துச் சுருட்டி கண்களைக் குளிர்வித்தல் தன் கடமையை கச்சிதமாக செய்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் குருதேவ்.
‘ஜாலியா வாங்க; சிரிச்சுட்டு போங்க’ டைப்பில் உருவாகும் படங்கள் யாருக்குத்தான் பிடிக்காது? அந்த வகையில் அடங்குவதால் சண்டக்காரியை உங்களுக்கு பிடிக்காமல் போகாது!
-சு.கணேஷ்குமார்

