அமாலா பால் கதை நாயகியாக நடித்து, சமீபத்தில் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் வெளியான படம் ‘கடாவர்.’ ஹரீஸ் உத்தமன், அதுல்யா ரவி, ரித்விகா, உள்ளிட்ட பலர் இணைந்து நடித்திருக்கும் இந்த படத்தை அமலாபால் தயாரித்திருந்தார்.
அந்த படம் மெடிக்கல் கிரைமை மையப்படுத்தி நடக்கும் கொலைகளும், குற்றங்களும் அதைச் சுற்றி நடக்கும் சம்பவங்களுமாக க்ரைம் திரில்லர் படமாக வெளிவந்து பெரும் வரவேற்பையும் பெற்றது.
”கடாவர் படத்தில் நடித்ததன் மூலம் மீண்டும் தமிழில் எனக்கு வரவேற்பு கிடைத்தது பெரும் மகிழ்வை தருகிறது” என்கிறார் இந்த படத்தில் பிரதான கதாபாத்திரத்தில் நடித்த திரிகுன்.
தமிழ்ப் படங்களில் அறிமுகமாகி தெலுங்கில் பிசியான நடிகராக வலம் வந்தவர் மீண்டும் தமிழ்படங்களில் கவனம் செலுத்தி நடித்துவருகிறார்.
அவரிடம் பேசினோம்… ”தாய்மொழி தமிழில் மீண்டும் படம் பண்ணுவது உற்சாகமாக இருக்கிறது. இரண்டு தமிழ்படங்கள் படப்பிடிப்பில் உள்ளன. தமிழில் முன்னணி இயக்குனரோடு ஒரு படத்திலும் நடித்துவருகிறேன். தெலுங்கிலும் வரிசையாக படங்கள் செய்துவருகிறேன்.
இரண்டு மொழிகளிலும் நடிப்பது வெவ்வேறு கலாச்சாரங்கள், வாழ்வியல் முறைகள, மனிதர்களின் அணுகுமுறைகள் பெரும் அனுபவமாக இருக்கிறது.
இரண்டு மொழிகளும் எழுதப்படிக்க தெரிவதால் திரைக்கதையின் ஆழம் புரிந்து நடிக்க வசதியாக இருக்கிறது.
தெலுங்கில் பிரேமதேசம், கஞ்சம், கன்னடத்தில் லைன்மேன், தமிழில் டெவில் ஆகியபடங்கள் படப்பிடிப்பு முடிந்து வெளியீட்டுக்குத் தயாராக இருக்கின்றன” என்று உற்சாகமாகப் பேசியவரை வாழ்த்தினோம்.