‘கேப்டன்‘ சினிமா விமர்சனம்
புதுமையான ஹாலிவுட் படங்களை தொடர்ந்து தமிழுக்கு ஏற்றபடி இறக்குமதி செய்கிற இயக்குநர் சக்தி செளந்தர்ராஜன் இந்தமுறை கைகோர்த்திருப்பது ஏலியன், பிரிடேட்டர் கதைகளோடு!
ஒருசில அண்டை நாடுகளின் எல்லையோரம், லட்சக்கணக்கான பரப்பளவில் அமைந்திருக்கிற இந்திய எல்லைக்குட்பட்ட அடர்ந்த காடு. அந்த காட்டுக்குள் யார் சென்றாலும் மர்மமான முறையில் பலியாகிறார்கள். இந்திய ராணுவ வீரர்கள் சென்றாலும் அதே கதிதான் என்ற சூழ்நிலை. அதுவும் குழுவாக செல்லும் வீரர்களில் ஒருவரே மற்றவர்களை சுட்டுக் கொன்றுவிட்டு, தானும் சுட்டுக்கொண்டு உயிரை விடுவது தொடர்கதையாக இருக்கிறது.
நடப்பவை என்ன? என கண்டுபிடிக்க ‘கேப்டன்’ ஆர்யா தலைமையிலான ராணுவ வீரர்கள் குழு துணிச்சலாக காட்டுக்குள் நுழைகிறது. அந்த குழுவில் ஒருவர் வழக்கம்போல மற்றவர்களை சுட்டுக் கொல்ல முயற்சித்து, தானும் சுட்டுக் கொண்டு பலியாகிறார். அந்த கொலை முயற்சியிலிருந்து அதிர்ஷ்டவசமாக தப்பிக்கும் ஆர்யா அன்ட் டீம் அலசி ஆராய்ந்து, காட்டுக்குள் நடக்கும் தொடர் மரணங்களுக்கு காரணம் காட்டுக்குள் வாழும் வினோத விலங்குக் கூட்டம் என்பதைக் கண்டறிகிறார்கள்.
அப்புறமென்ன… வேற்றுக்கிரக வாசிகள் போலிருக்கிற அந்த விலங்குகளின் பின்னணி என்ன என ஆர்யா தலைமையிலான குழுவினர் அலசி ஆராய்வது, அதில் கிடைக்கிற தகவல்கள் அதிர்ச்சி மேல் அதிர்ச்சி தருவதாக இருப்பது, நடக்கும் தொடர் மரணங்களில் கார்ப்பரேட் சதியும் பின்னிப் பிணைந்திருப்பது, அந்த விலங்குகளை அழித்தொழிப்பதற்கான முயற்சி பெரும் சவாலாக இருப்பது என நீள்கிறது திரைக்கதை.
சிந்திப்பது, சிந்திப்பதை செயல்படுத்துவது இரண்டிலும் புத்திசாலித்தனம் காட்டும் ராணுவ வீரராக ஆர்யா. ஏற்ற கேரக்டருக்கு முடிந்தவரை உயிர் கொடுத்திருக்கிறார்.
ஆர்யாவின் குழுவில் ஒருவராக வருகிற காவ்யா ஷெட்டி, காவ்யா என்ற பெயரில் ஆர்யாவுக்கு ஜோடியாக வருகிற ஐஷ்வர்யா லட்சுமி, ராணுவ வீரர்களாக வருகிற ஹரிஷ் உத்தமன், ‘அம்புலி’ கோகுல், ராணுவ உயரதிகாரிகளாக வருகிற மாளவிகா அவினாஷ், ஆதித்ய மேனன், ராணுவ உயரதிகாரி – விஞ்ஞானி என கனமான பாத்திரத்தை சுமந்திருக்கிற சிம்ரன்… அவரவருக்கு கொடுத்த வேலையை கச்சிதமாக செய்ய முயற்சித்திருக்கிறார்கள்.
வினோத விலங்கின் வடிவமைப்பு, அந்த விலங்குகளுக்கிடையிலான சிக்னல் பரிமாற்றம் என நீளும் சங்கதிகள் பரவாயில்லை ரகம். அந்த விலங்குகளின் தலைவியாக சம்பந்தமேயில்லாத ஆக்டோபஸ் மாதிரியான ஒன்றைக் காண்பிப்பதன் காரணகாரியமெல்லாம் இயக்குநருக்கே வெளிச்சம்!
ஒளிப்பதிவும், இமானின் பின்னணி இசையும் படத்தின் பெரும் பலம்.
ஏலியன், பிரிடேட்டர் வகையறா கதைகளோடு வந்த ஹாலிவுட் படங்களை இதுவரை பார்த்ததேயில்லை என்றால், அந்த வகை கதைகளை மிகமிக சுமாராக எடுத்தாலும் பார்க்கப் பிடிக்கும் என்றால் ‘கேப்டன்’ உங்களுக்கானவர்!