குழந்தைகள் மீதான பாலியல் வன்முறையை கதையின் அஸ்திவாரமாக்கி, சித்தப்பா மகள் பாசப்பிணைப்பை உணர்வுபூர்வமான காட்சிகளால் கட்டமைத்திருக்கும் ‘சித்தா.’
அண்ணன் காலமாகிவிட அவரது எட்டு வயது மகள் சுந்தரியை தன் சொந்த மகளாக பாசம்காட்டி வளர்த்து வருகிறார் ‘சித்தா’ர்த். அதே பாசத்தை அதே வயதுடைய நண்பனின் அக்காள் மகள் பொன்னி மீதும் காட்டுகிறார்.
பொன்னி ஒருநாள் பாலியல் வன்முறைக்கு ஆளாகிறாள். பழி சித்தார்த் மீது விழுகிறது. கைது அது இதுவென காவல்துறை நடவடிக்கைகளும் பாய்கிறது.
சில நாட்கள் கழிந்த நிலையில் குழந்தை சுந்தரி காணாது போகிறாள். அடுத்தடுத்த நாளில் அவளைப் போலவே ஒரு சிறுமியின் சடலத்தை போலீஸார் கைப்பற்றுகிறார்கள். கதையில் பயமும் பதற்றமும் கூடுகிறது.
சுந்தரிக்கு நேர்ந்த பயங்கரம் அடுத்தடுத்த காட்சிகளாய் விரிய சத்தியமாய் அதிர்ந்து போகிறோம்… இயக்கம் எஸ் யூ அருண்குமார்
20 வருடங்கள் கடந்த நடிப்புப் பயணத்தில் சித்தார்த்துக்கு குறிப்பிட்டுச் சொல்லும்படியான படம். அண்ணன் மகள் மீது உயிருக்குயிரான பாசம் காட்டுவதாகட்டும், அந்த மகளே தன்னைக் கண்டு பயப்படும் சூழ்நிலை உருவானபின் மனம் நொறுங்குவதாகட்டும், காமவெறி சைக்கோவை கண்டுபிடித்து கொல்ல துடிப்பதாகட்டும் காட்சிக்கு காட்சி சித்தா தந்திருப்பது பாராட்டும்படியான நடிப்பு!
பூசிய தேகமும், குண்டுக் கன்னங்களும் மிரளும் விழிகளுமாய் சித்தார்த்தின் காதலியாக நிமிஷா சஜயன். மெல்லிய கோபம் கொப்பளிக்க அவர் சித்தார்த்துடன் பழகும் விதம் ரசிக்க வைக்கிறது.
சுந்தரியாக நடித்திருக்கும் குழந்தை சித்தப்பாவை ‘சித்தா’, ‘சித்தா’ என்றழைத்து வெளிப்படுத்தும் பிரியத்தில் ஆழம் அதிகம். காம வெறியனிடம் மாட்டிக் கொண்டு சித்தரவதை அனுபவிக்கும் காட்சிகளில் எவர் மனதும் கலங்காமலிருக்காது. பொன்னியாக நடித்துள்ள குழந்தையின் பங்களிப்பும் கச்சிதம்.
சித்தார்த்தின் அண்ணியாக அஞ்சலி நாயர், நண்பனாக வருகிற இளைஞர் என அத்தனை பேரின் நடிப்பும் படத்துக்கு 100% பலம் சேர்த்திருக்கிறது. போலீஸ் இன்ஸ்பெக்டராக வருகிற பெண்மணியின் நடிப்பு தனியாக தெரிகிறது.
சந்தோஷ் நாராயணனும், திபு நைனன் தாமஸும் பாடல்களுக்கு உணர்வுகளை வருடும் விதத்தில் இசையமைத்திருக்க, விஷால் சந்திரசேகரின் பின்னணி இசை காட்சிகளுக்குத் தேவையான விறுவிறுப்பை தந்திருக்கிறது.
படத்தின் பெரும்பாலான காட்சிகள், பெண் குழந்தைகளை பெற்று வளர்த்துக் கொண்டிருப்பவர்களுக்கு பயத்தைத் தூண்டும் விதத்தில் இருந்தாலும், அதன் மூலம் இந்த படம் நடத்தியிருக்கும் விழிப்புணர்வுப் பாடம் இன்றைய சமூகத்துக்கு மிகமிக அவசியம்!
இப்படியொரு படத்தை தயாரித்திருப்பதற்காக சித்தார்த்துக்கு சிறப்புப் பாராட்டு தெரிவிப்பது கடமை!
சித்தா, சொல்லவந்ததை சரியாக எடுத்துச் சொல்லி நிற்கிறது கெத்தா!