நடிகர் ரவி மோகன் ஜெயம் ரவியாக இருந்த காலகட்டத்தில் ஹீரோவாக நடித்த, இளைஞர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற பிரபல திரைப்படம் ‘தாம் தூம்.’
இந்த படம் 18 ஆண்டுகளுக்குப் பிறகு, டிஜிட்டல் முறையில் புதுப்பிக்கப்பட்டு 5.1 ஆடியோ சவுண்ட் தரத்துடன், வரும் ஏப்ரல் 10-ம் தேதி தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் ரீ ரிலீஸ் ஆகிறது.
2008 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 28 அன்று வெளியான இந்த படம் அந்நேரத்தில் இளைஞர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. வெளிநாடுகளில் முழுமையாக படமாக்கப்பட்ட காட்சிகள், அதிரடியான சண்டை காட்சிகள், அழகான காதல் தருணங்கள் ஆகியவை அந்த காலத்து இளம் தலைமுறையை மிகவும் கவர்ந்தன. குறிப்பாக 2K தலைமுறைக்கும் இன்றளவும் நினைவில் இருக்கும் படங்களில் இதுவும் ஒன்றாகும்.
இந்த படத்தின் மூலம் பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் தமிழில் முதன்முறையாக கதாநாயகியாக அறிமுகமானார். தற்போது ஹிந்தி திரையுலகில் முன்னணி நடிகையாக விளங்கும் அவர், அரசியல் துறையிலும் முக்கிய பங்கு வகித்து வருகிறார். ராய் லக்ஷ்மி, ஜெயராம், போஸ் வெங்கட், பிதாமகன் மகாதேவன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் அமைந்த பாடல்கள் மற்றும் பின்னணி இசை இந்த படத்திற்கு பெரிய பலமாக அமைந்தது. அந்த காலத்தில் ஹிட் பட்டியலில் இடம் பெற்ற பல பாடல்கள் இன்றும் ரசிகர்களால் ரசிக்கப்படுகின்றன.
மறைந்த ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குநர் ஜீவா இயக்கத்தில் உருவான இந்த படம், வணிக அம்சங்களுடன் கூடிய ஒரு முழுமையான கமெர்ஷியல் என்டர்டெய்னராக அமைந்தது.
ரவி மோகன் ரசிகர்களுக்கும், 2000களின் நினைவுகளை மீண்டும் அனுபவிக்க விரும்பும் ரசிகர்களுக்கும் இந்த ரீ-ரிலீஸ் ஒரு சிறப்பு திரை அனுபவமாக அமையும் என்பது உறுதி.
Murugan Film Factory சார்பில் கந்தசாமி மற்றும் பாலசுப்ரமணி ஆகியோர் பிரமாண்டமாக வெளியிட திட்டமிட்டுள்ளனர். சேலம் பகுதியிலேயே பல வெற்றி திரைப்படங்களை விநியோகம் செய்த அனுபவம் கொண்ட இவர்கள், ஹோசூரில் கிராண்ட் சினிமாஸ் என்ற மல்டிப்ளெக்ஸ் திரையரங்கத்தையும் நடத்தி வருகிறார்கள். தாம் தூம் படத்தை மீண்டும் திரைக்கு கொண்டு வருவதன் மூலம் ரசிகர்களுக்கு மலரும் நினைவு அனுபவத்தை வழங்கவுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து Murugan Film Factory சார்பில் கந்தசாமி மற்றும் பாலசுப்ரமணி ஆகியோர் மேலும் பல வெற்றி திரைப்படங்களையும் எதிர் வரும் காலத்தில் ரீ-ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.


