பகத் பாசில் நடிப்பில் இயக்குநர் எஸ். எஸ். ராஜமௌலி வழங்கும் ‘டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள்’ திரைப்படம் அக்டோபர் 2-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. அதையடுத்து படத்தினை விளம்பரப்படுத்தும் வகையில் வெளியீட்டிற்கு முன்னரான பிரி ரிலீஸ் நிகழ்வு சென்னையில் நடைபெற்றது.
எஸ்.எஸ். ராஜமௌலி, எஸ்.எஸ். கார்த்திகேயா, ஃபஹத் பாசில், சாரா சச்தேவ், பிரவீண் ஆண்டனி, விநியோகஸ்தர் சக்திவேலன் உள்ளிட்ட படக்குழுவினருடன் நடிகர் சூர்யா, தயாரிப்பாளர் ஐசரி கே.கணேஷ் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் இயக்குநர் எஸ் எஸ் ராஜமௌலி பேசுகையில்,
”இந்த படத்தின் முன்னோட்டத்திற்கு பின்னணி குரல் கொடுத்த ‘உலக நாயகன்’ கமல்ஹாசனுக்கு மிகப்பெரிய நன்றி. ‘கருப்பு’, ‘விஸ்வநாத் & சன்ஸ்’ என டபுள் டமாக்கா வெற்றியை வழங்கிய சூர்யாவிற்கு வாழ்த்துக்கள் மற்றும் நன்றி. ‘சிங்கம்’ படத்தின் மூலம் மாஸான போலீஸ் அதிகாரியை காட்சி படுத்திய உங்களிடமிருந்து, ‘சீன்’ படத்தில் மீண்டும் ஒரு வித்தியாசமான போலீஸ் அதிகாரியை காட்சிப்படுத்தி இருப்பீர்கள் என நம்புகிறோம். நவம்பரில் அந்தப் படத்திற்காக ஆவலுடன் காத்திருக்கிறோம். அந்த திரைப்படமும் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
ஒரு முறை என்னிடம் மிகப் பெரிய கட்டிடக் கலை நிபுணர் சொன்னார்… ‘நம்முடைய நகத்தின் மேல் ஒரு கட்டிடத்தின் அவுட்லைனை வரைய முடிந்தால்.. அதுதான் மிகச் சிறந்த கட்டிடம்’ என்றார். இது என்னை பொறுத்தவரை திரைப்படத்திற்கும் பொருந்தும். இரண்டரை மணி நேர திரைப்படத்தை இரண்டு அல்லது மூன்று வரிகள் கொண்ட கதையாக சொல்லப்பட வேண்டும். அதுதான் சிறந்த படம். இதைத்தான் இந்தப் படத்தின் இயக்குநர் ஷஷாங்கிடம் சொன்னேன்.
இயக்குநர் கதை சொல்வதற்காக என்னை சந்தித்தார். அப்போது அவர் எனக்கு மூன்று மணி நேரத்தைத் தாருங்கள். இப்படத்தின் கதையை சொல்கிறேன் என்றார். அவரிடம் நிச்சயமாக மூன்று மணி நேரத்தை ஒதுக்க முடியாது. உங்களால் ஐந்து நிமிடத்தில் இப்படத்தின் கதையை சொல்ல முடியுமா ? என கேட்டேன். அது எப்படி சாத்தியம் ? எனக் கேட்டார். ஐந்து நிமிடத்தில் இப்படத்தின் கதையை நீங்கள் சொன்னால்…. அது எனக்குப் பிடித்திருந்தால்… நான் இரண்டரை மணி நேர கதையைக் கேட்கிறேன் என்றேன். அப்போது அவர் யோசித்து எனக்கு ஐந்து நிமிடம் வேண்டாம். ஒரே ஒரு வாக்கியத்திற்குள் இந்தக் கதையை சொல்கிறேன் என்றார்.
‘ஒரு பேயை கடத்திய மனிதனின் கதை.._ என்று சொன்னவுடன் எனக்கு மிகவும் பிடித்து விட்டது. இந்த ஒற்றை வாக்கியத்தில், இதில் இருக்கும் எல்லா விசயங்களும் என் மனதில் ஓடியது. அதனால் இந்தக் கதை மிகவும் அருமையாக இருந்தது. அதன் பிறகு இந்த படத்தின் பணிகள் தொடங்கியது.
ஃபஹத் பாசில் ஒரு சிறந்த நடிகர் என்று அனைவருக்கும் தெரியும். அவர் ‘கும்பளாங்கி நைட்ஸ்’, ‘ஜோஷி’, ‘ட்ரான்ஸ்’, என ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். அவர் எப்படி, இப்படிப்பட்ட கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடிக்கிறார் என்பது இன்றுவரை எனக்கு ஆச்சரியமாகவே இருக்கிறது. அவர் தொடர்ந்து டார்க் ஷேடுள்ள கேரக்டர்களில் நடிக்கிறார் என வியப்பாகவே இருக்கும். இந்த படத்திலும் அவர் நடித்திருப்பது சிறப்பு.
மீண்டும் சொல்ல வேண்டும் என்றால் இந்தப் படத்தின் ராஸ்கல் அவர்தான். சூரி கதாபாத்திரத்தில் அற்புதமாக நடித்திருக்கிறார். இந்தப் படத்தின் முதல் பிரதியை டப்பிங் இல்லாமல்… இசை இல்லாமல்… பார்க்கும் போது நான் அழுதேன். சிரித்தேன். அந்த அளவிற்கு என்னை இந்தப் படம் கவர்ந்தது. அந்த அளவிற்கு அந்த சூரி கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்து நடித்திருக்கிறார். இதற்காக அவருக்கு நன்றி.
படத்தில் சூரி கதாபாத்திரத்தை ஓட ஓட விரட்டுவது திவ்யா. அந்த கதாபாத்திரத்தில் சாரா நடித்திருக்கிறார். மிக அற்புதமாக நடித்திருக்கிறார். திரையில் சூரி என் பெஸ்ட் பிரண்ட் என்று சொன்னாலும்.. படப்பிடிப்பு தளங்களில் இருவரும் நடிக்கும்போது எதிரிகளாகவே இருந்திருப்பார்கள். ஒருவரை ஒருவர் மிஞ்சி சிறப்பாக நடிக்க வேண்டும் என்று போட்டி இருந்திருக்கும். இந்தத் திரைப்படத்தில் ஒவ்வொரு காட்சிக்கும்… ஒவ்வொரு உரையாடலுக்கும்… ஒவ்வொரு சிறு சிறு நடிப்பிற்கும்…. சூரிக்கு, திவ்யா சரியான போட்டியாளராக இருப்பார். இந்த போட்டி ரசிகர்களுக்கு நிச்சயமாக பிடிக்கும்.
எடிட்டர் பிரவீன் சொன்னது போல் இந்த திரைப்படம் பேத்தி முதல் பாட்டி வரை குடும்பத்தில் உள்ள அனைவருக்குமானது. அக்டோபர் 2ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. அனைவரும் குடும்பத்தினருடன் வருகை தந்து.. இந்தத் திரைப்படம் தரும் மேஜிக்கல் எக்ஸ்பீரியன்ஸ் அனுபவியுங்கள்.
இந்தப் படத்தின் தெலுங்கு முன்னோட்டத்திற்கு பின்னணி குரல் கொடுத்த நடிகர் பாலகிருஷ்ணாவிற்கும், தமிழில் பின்னணி குரல் கொடுத்த ‘உலகநாயகன்’ கமல்ஹாசனுக்கும், மலையாள மொழியில் பின்னணி குரல் கொடுத்த நடிகர் மோகன்லாலுக்கும் நன்றி” என்றார்.

நடிகர் ஃபஹத் பாசில் பேசுகையில்,
”இந்தக் கதையை கேட்ட தருணத்திலிருந்து எனக்குள் இரண்டு விசயங்கள் மட்டும் தான் எப்போதும் நினைவில் இருக்கிறது. அதை மட்டும் பகிர்ந்து கொள்கிறேன்.
தயாரிப்பாளர் கார்த்திகேயா எனக்கு குறுஞ்செய்தி அனுப்பி இருந்தார். அதில் ‘இரண்டு கதைகளை மட்டும் அனுப்பி இருக்கிறேன். இந்த இரண்டில் எந்தக் கதையை நீங்கள் தேர்வு செய்தாலும் எங்களுக்கு ஓகே’ என குறிப்பிட்டிருந்தார். அதன் பிறகு அவரை சந்தித்தேன். இரண்டு கதைகளையும் கேட்டேன். இரண்டு கதைகளும் பிடித்திருந்தது. இரண்டு கதைகளிலும் நடிக்கிறேன் என்றேன். அப்போதுதான் அவர், ‘நான் தான் தயாரிக்கிறேன்’ என்றார். அது எனக்கு சந்தோஷமாக இருந்தது. அதன் பிறகு ஒரு விசயம் சொன்னார். ‘இந்த படத்தை ராஜமௌலி தான் வழங்குகிறார்’ என்றார். அப்படி சொன்னவுடன் என்னை விட வேறு சிறந்த நடிகர்களை வைத்து தயாரிக்கலாமே..! என சொன்னேன்.
இதுவரை எனக்கு தெலுங்கில் நல்லதொரு ஓபனிங் இருந்ததில்லை என நினைக்கிறேன். இந்தப் படம் அதனை மாற்றும் என்று நம்புகிறேன். இதற்காக தயாரிப்பாளருக்கும் ராஜமௌலிக்கும் நன்றி.
தயாரிப்பாளர் கார்த்திகேயா இப்படத்தின் நிகழ்விற்கு சூர்யா வருகை தருகிறார் என்று சொன்னார். அதைக் கேட்டவுடன் எனக்கு இன்னும் மகிழ்ச்சி அதிகமாகியது .ஏனென்றால் அவர் எனக்கு சகோதரர். அவர் இன்று இங்கு வருகை தந்ததற்கும், வாழ்த்துவதற்கும் நன்றி.
நான் இதுவரை இப்படி ஒரு கதையை கேட்டதும் இல்லை, இப்படி ஒரு படத்தை பார்த்ததும் இல்லை. இப்படி ஒரு கதாபாத்திரத்திலும் நான் நடித்ததில்லை. இது மிகவும் புதிது. அதனால் தான் இதில் நடிப்பதற்கு உடனே சம்மதம் தெரிவித்தேன். நாங்கள் இந்தப் படத்திற்காக 100, 120 நாட்கள் படப்பிடிப்பு நடத்தினோம். இப்படத்தினை அண்மையில் பார்த்தபோது வியந்தேன். படத்தில் பணியாற்றிய இயக்குநர் ஷஷாங்க் யெலெட்டி, ஒளிப்பதிவாளர் பிராட் பிரான்சிஸ், தயாரிப்பு வடிவமைப்பாளர் சந்தீப், மோகன், இசையமைப்பாளர் காலா பைரவா, படத்தொகுப்பாளர் பிரவீண் ஆண்டனி ஆகிய அனைவருக்கும் நன்றி.
தயாரிப்பாளர் எஸ் எஸ் கார்த்திகேயாவிற்கு நன்றி. ஹைதராபாத்தில் ஒரு அரங்கத்தில் ‘டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள்’ படத்தின் படப்பிடிப்பு நடைபெறும். அடுத்த அரங்கத்தில் ‘வாரணாசி’ படத்தின் படப்பிடிப்பு நடைபெறும். இரண்டிற்கும் அவர்தான் தயாரிப்பாளர். ஆனால் அவர் எப்போதும் எங்கள் படக் குழுவுடன் தான் இருப்பார். அதற்காக அவருக்கு நன்றி.
என்னை எப்போதும் ஆச்சரியப்படுத்திய குழந்தை என்றால் அது சாரா தான். படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் போது ஒரு காட்சியில் என்னிடம் இப்படி பேசலாமே..! என என்னுடைய வசனத்தையும் அவள் சொல்லிக் காட்டுவாள். என்னுடன் இவ்வளவு அர்ப்பணிப்புடன் இணைந்து பணியாற்றிய சக நடிகர்கள் யாருமில்லை என்று சொல்லலாம். அந்த அளவிற்கு அற்புதமான சக நடிகை தான் சாரா. நாங்கள் இருவரும் இணைந்து இந்த படத்தில் அற்புதமான மேஜிக்கை நிகழ்த்தி இருக்கிறோம். நாங்கள் இருவரும் இணைந்து இந்த படத்தை அனைவரும் அக்டோபர் 2ம் தேதி திரையரங்கில் காண வேண்டும் என அழைப்பு விடுக்கிறோம். மிகவும் சிறப்பான படம். இந்தப் படத்தை நீங்கள் குடும்பத்தினருடனும்… நண்பர்களுடனும்… விருப்பத்திற்குரியவர்களுடனும்…. பார்க்கலாம். இந்தப் படம் உங்களை சிரிக்க வைக்கும், அழ வைக்கும், அந்த அளவிற்கு அழகான அற்புதமான படம்” என்றார்.

