‘யுனிவர்சல் ஜீனியஸ்’ என்கிற சாதனைக்காக எடுக்கப்பட்ட ‘கலைஞர் நகர்’ படத்தில் ஹீரோயின்களில் ஒருவராக நடிப்பதன் மூலம் திரைத் துறைக்குள் நுழைகிறார் டாலி ஐஸ்வர்யா.
மாடலிங் துறையில் எட்டு வருட அனுபவம் கொண்ட இவர் ‘கலைஞர் நகர்’ தவிர மூன்று படங்களிலும் நடித்து வருகிறார்.
‘கலைஞர் நகர்’ படத்தில் பிரஜின் ஹீரோவாகவும், மிகமிக அவசரம் ஸ்ரீபிரியங்கா ஹீரோயினாகவும் நடித்துள்ளனர். சுகன் குமார் இயக்கியுள்ள இந்த படத்தின் விளம்பர நிகழ்ச்சி சமீபத்தில் நடந்தது.
அதையடுத்து டாலி ஐஸ்வர்யா தனது முதல் பட அனுபவம், அடுத்தடுத்த படங்கள் என பலவற்றை நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.
“நடிப்பு தான் ஆர்வம் என்றாலும் மாடலிங் மூலமாக பயணத்தை ஆரம்பித்து சினிமாவில் நுழைவது தான் சரியாக இருக்கும் என நினைத்தேன். ஏற்கனவே ‘காதலே கோமாளி’ என்கிற குறும்படத்திலும் நடித்துள்ளேன். ‘கலைஞர் நகர்’ படப்பிடிப்பு துவங்குவதற்கு முன்னதாக அதில் நடித்த ஒரு நடிகை எதிர்பாராத விபத்தில் சிக்கியதால் படப்பிடிப்பு துவங்குவதற்கு இரண்டு நாட்கள் முன்பு தான் அந்த வாய்ப்பு என்னை தேடி வந்தது. இரண்டாம் நாளே படப்பிடிப்பு, அதுவும் 23 நேரத்தில் எடுக்கப்படுகின்ற சாதனை படத்தில் நடிக்க வேண்டும் என்கிற பிரமிப்பும் படபடப்பும் கொஞ்சம் இருக்கத்தான் செய்தது.
அதேசமயம் முதல் நாளே படத்தின் ஸ்கிரிப்டை படித்ததும் நம்பிக்கை பிறந்தது. படப்பிடிப்பு தளத்தில் ஒரே நாளில் அதுவும் 19 லொகேஷன்களில் மாற்றி மாற்றி படப்பிடிப்பு நடைபெற்றது. ஒவ்வொரு லொகேஷனுக்கும் மாறுவதற்கு 10 முதல் 15 நிமிட இடைவெளி மட்டுமே இருந்தது.
இந்தப்படம் மேடை நடனக்கலைஞர்களின் வாழ்வாதாரம் மற்றும் சமூகத்தில் அவர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை சொல்லும் கதையாக உருவாகி இருக்கிறத. அவர்கள் மீது பலர் கொண்டுள்ள தவறான அபிப்ராயத்தை மாற்றும் படமாக இது இருக்கும். இதில் பிரஜின், பிரியங்கா என நடிப்பு அனுபவம் மிகுந்த இருவருடன் நடித்தது மிகப்பெரிய அனுபவமாக இருந்தது.
ஒரேநாளில் படமாக்கப்பட்டாலும் கூட இந்த படத்தில் இடம்பெறும் திருவிழா காட்சிகள் மிக பிரமாண்டமானதாக இருக்கும். பல துணை நடிகர்கள் பங்கு பெற்ற இந்த திருவிழா காட்சியை இந்த படத்திற்காகவே உருவாக்கினார்கள். படத்தின் இயக்குநர் சுகன் குமார் ஏற்கனவே ‘பிதா’ என்ற குறும்படத்தை 23.23 மணி நேரத்தில் இயக்கி சாதனை செய்தவர். இந்தமுறை முழு நீள திரைப்படத்தை 23 மணி நேரத்தில் ஏழு நிமிடம் முன்னதாகவே படப்பிடிப்பை முடித்து விட்டார்.
‘யுனிவர்சல் ஜீனியஸ்’ என்கிற சாதனைக்காக இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. சினிமாவில் எனது அறிமுகமே இப்படி ஒரு சாதனை படம் மூலமாக அமைந்ததில் மகிழ்ச்சி.
இதுதவிர தற்போது ‘இரவின் கண்கள்‘ என்கிற சயின்டிஃபிக் திரில்லர் படத்திலும் ‘ஹேப்பி பர்த்டே ஜூலி‘ என்கிற திரில்லர் மற்றும் ‘கடைசி தோட்டா‘ என்கிற கிரைம் திரில்லர் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறேன். ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான ஜானரில் உருவாகி வருகின்றன.
மிகவும் துணிச்சலான கதாபாத்திரங்களில், அதிக வசனம் கொண்ட, நாயகிக்கு முக்கியத்துவம் தரும் கதைகள், லவ் மற்றும் திரில்லர் கதையம்சம் கொண்ட படங்களில் நடிப்பதற்கு அதிகம் விரும்புகிறேன்.
சினிமாவில் ஏற்கனவே நிறைய ஐஸ்வர்யாக்கள் இருக்கின்றனர். அதே சமயம் மாடலிங் உலகில் டாலி ஐஸ்வர்யா என்று தான் என்னை பலருக்கும் தெரியும். அதனால சினிமாவிற்கும் அதே பெயரை பயன்படுத்த ஆரம்பித்து விட்டேன்” என்றார்.


