முனீஸ்காந்த், காளி வெங்கட் இருவரும் முதன்மைப் பாத்திரங்களில் நடிக்க, கரகாட்டக் கலை பின்னணியில், மண் மணத்தோடு உருவாகியுள்ள திரைப்படம் ‘காடப்புறா கலைக்குழு.’ படம் வரும் ஜூலை 7-ம் தேதி திரைக்கு வரவுள்ள நிலையில் படக்குழுவினர் பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர்.
நிகழ்வில் இயக்குநர் ராஜா குருசாமி, ‘‘முகச்சுளிப்பு இல்லாமல் இரத்தக் காட்சிகள் இல்லாமல், குடும்பத்தோடு பார்க்கக்கூடிய படமாக இந்தப் படம் இருக்கும்” என்றார்.
நடிகர் முனிஸ்காந்த், ‘‘இந்த படத்தை முண்டாசுப்பட்டி போன்று குழுவாகச் சேர்ந்து உருவாக்கியுள்ளோம். படத்தில் கரகாட்டம் ஆடியுள்ளேன். அது எனக்கு ஒரு புது அனுபவமாக இருந்தது. படம் கண்டிப்பாக வெற்றியடையும்” என்றார்.
நடிகர் காளி வெங்கட், ‘‘எனக்கு இது மிக முக்கியமான படம். இந்த படத்தின் இயக்குநர் குறும்படம் எடுத்த காலத்திலிருந்தே எனக்குப் பழக்கம். தனுஷ் சார் டிரெய்லர் பார்த்துப் பாராட்டினார். உங்களுக்கும் படம் பிடிக்கும்” என்றார்.
நடிகர் சூப்பர் குட் சுப்பிரமணி, ‘‘நான் பல படங்களில் நடித்துள்ளேன், ஆனால், எனக்கு மிகப்பெரிய அடையாளம் கொடுத்தது முண்டாசுப்பட்டி படம், அதன் பிறகு அப்படி ஒரு படம் எனக்கு அமையவில்லை. அதை இந்த படம் பூர்த்தி செய்யும் என நம்புகிறேன்” என்றார்.
தயாரிப்பாளர் டாக்டர் முருகானந்தம் வீரராகவன், ‘‘நான் அறிவியல் துறையில் பணியாற்றியவன். என் துறையில் சாதித்த பிறகு என்னிடமுள்ள கலையார்வம் காரணமாக எனக்குப் பிடித்த துறைக்கு வந்துள்ளேன். இந்த படத்தில் உங்களை ரசிக்க வைக்கும் அனைத்து அம்சங்களும் உள்ளது. தொடர்ந்து எங்கள் நிறுவனம் மூலம் நல்ல படைப்புகளை தருவோம். உங்கள் ஆதரவை தாருங்கள்” என்றார்.
நடிகை ஸ்வேதா ரமேஷ், ‘‘இது எனக்கு முதல் படம். படம் உங்களுக்கு கண்டிப்பாக பிடிக்கும்” என்றார்.
நடிகை ஶ்ரீலேகா ராஜேந்திரன், ‘‘இப்போது பழமையான கலைகள் அழிந்து வருகிறது. நான், செத்தாலும் ஆயிரம் பொன் என்ற படத்தில் நடித்தேன். அதில் ஒப்பாரி அழிந்து போவதைப் பற்றி எடுத்தார்கள். இந்த படத்தை கரகாட்டத்தை மையப்படுத்தி எடுத்துள்ளார்கள். தயாரிப்பாளர் கலையின் மீதான அன்பில் இப்படத்தை எடுத்துள்ளார். படம் கண்டிப்பாக ஜெயிக்கும்” என்றார்.
நடிகர் டெலிபோன் ராஜ், ‘‘ஜாதியை வைத்து படம் எடுக்கும் காலகட்டத்தில் கலையை வைத்து எடுத்துள்ளார்கள். முனிஷ்காந்த் சார் படத்தில் பம்பரமாக ஆடியிருக்கிறார். காளி வெங்கட்டும் அசத்தியிருக்கிறார். ஆயிரம் பேரின் உழைப்பு இது” என்றார்.