Home சினிமா நான்கு காட்சிகள் எடுக்கும் திட்டத்தோடு சென்று முழுப் படத்தையும் முடித்துக்கொண்டு வந்திருக்கிறோம்! -‘ட்ரீம் கேர்ள்’பட விழாவில்...

நான்கு காட்சிகள் எடுக்கும் திட்டத்தோடு சென்று முழுப் படத்தையும் முடித்துக்கொண்டு வந்திருக்கிறோம்! -‘ட்ரீம் கேர்ள்’பட விழாவில் இயக்குநர் எம் ஆர் பாரதி பேச்சு

எம்.ஆர். பாரதி இயக்கத்தில் புதுமுகங்கள் ஜீவா, ஹரிஷா நடித்துள்ள ‘ட்ரீம் கேர்ள்’ படத்தின் முன்னோட்டம் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.

நிகழ்வில் பேசிய இயக்குநர் எம் .ஆர்.பாரதி, “நான் சினிமாவுக்கான உதவி இயக்குநர் வாய்ப்பு தேடிய போது சரியான படம் அமையவில்லை. சின்னச் சின்ன படங்களில் நான் உதவி இயக்குநராக வேலை பார்த்தேன்.’நெஞ்சமெல்லாம் நீயே’ என்ற படத்தில் பணியாற்றினேன். அதுதான் உருப்படியான ஒரு படம்.

‘மீரா’ படத்திற்கு பிறகு பல ஆண்டுகள் கழித்து 12 நாளில் ‘அழியாத கோலங்கள் 2 ‘படத்தை எடுத்தோம். அந்த பட முயற்சியில் இறங்கியபோது, நான் பொருளாதார சிக்கலில் மாட்டிக் கொள்ளக் கூடாது என்று அர்ச்சனா தயாரிக்க முன் வந்தார். அப்போது ரேவதியை இயக்குநராக ஆக்கலாமே படத்துக்கு ஒரு மதிப்பு கிடைக்கும் என்றேன். உன் கனவு இது. நீதான் இயக்க வேண்டும் என்று கூறினார். அப்படி அந்தப் படத்தை 12 நாட்களில் எடுத்தோம். யூட்யூபில் லட்சக்கணக்கான பேர் பார்த்துள்ளார்கள்.

இந்த ‘ட்ரீம் கேர்ள்’ படத்திற்கு நான்கு காட்சிகள் எடுப்பது போல் திட்டத்தோடு சென்றோம். ஆனால் முழுப் படத்தையும் முடித்து விட்டு வந்திருக்கிறோம். 16 நாட்களில் பெரும்பாலான காட்சிகளை எடுத்து விட்டோம் .

சினிமா என்பது கஷ்டம் கிடையாது. தேவையில்லாமல் சிரமப்படக்கூடாது. சரியாக வாய்ப்புகள் அமையவில்லை என்றால் அதிலிருந்து ஒரு பிரேக் கொடுத்துவிட்டு மீண்டும் செல்லலாம். சற்று விலகி இருந்து பார்த்தால் நமக்கு ஒரு திறப்பு கிடைக்கும்.

நான் சினிமாவில் வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்று சிரமப்பட்டதில்லை. சினிமா நம்ப வேண்டும் நேசிக்க வேண்டும்.

சிறிய பட்ஜெட்டில் சிக்கனமாகப் படம் எடுக்கக் தெரிந்தால் நம்மை அது காப்பாற்றி விடும். சிக்கனமாக எடுத்தால் இழப்பும் குறைவாக இருக்கும்.

முதலில் நான் ‘மீரா’ படத்திற்கு கதை வசனம் எழுதினேன். பி சி சார் இயக்கினார். அதன் பிறகு சினிமாவை நான் நேசித்ததால் அதற்குள்ளேயே எப்போதும் இருப்பது போல் பார்த்துக் கொண்டேன்.

ராஜ் டிவிக்காக நிறைய விளம்பரங்கள், விளம்பர படங்கள் தயாரித்தேன். கல்லூரிகளுக்கு புத்தகம் போட்டேன். முதலில் இக்னோ எனப்படும் இந்திராகாந்தி திறந்தவெளி பல்கலைக்கழகத்திற்காக ஒரு சிறு புத்தகம் போட்டோம். இந்தியா முழுக்க ஒரே பாடத்திட்டம் இருந்ததால் அந்தச் சிறிய புத்தகம் பெரிய வெற்றி பெற்றது. அதற்குப் பிறகு அந்த துறையில் நுழைந்து வெற்றிகரமாக 26 ஆண்டுகளாக சாருலதா பப்ளிகேஷன் நடத்தி வருகிறேன்.

எனக்குள் இருந்த சினிமா கனவை அழிக்காமல் இருந்ததால் அதற்குப் பிறகும் ‘அழியாத கோலங்கள் 2 ‘எடுக்க முடிந்தது. இந்தப் படம் வெற்றி பெற ஒத்துழைப்பு கொடுங்கள்” என்றார்.

பிரபல ஒளிப்பதிவாளர் பி .சி. ஸ்ரீராம் “இங்கே பாரதி பற்றி எல்லாரும் புகழ்ந்து பேசுவதைப் பார்த்தபோது ,ஒரே கருத்தை எல்லோரும் கூறிய போது எனக்கு சிலிர்ப்பாக இருந்தது. நான் வேறு விதமான விழாக்களில் கலந்து கொண்டுள்ளேன். சினிமா ஆடியோ விழாவில் கலந்து கொள்வது இதுவே முதல்முறை. பாரதி அழைத்தால் மறுப்பு சொல்ல முடியுமா? அவர் தனது நட்பின் மூலம் உயர்ந்திருக்கிறார்.எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.

எங்களுக்குள் நீண்ட நாள் நட்பு உண்டு.எங்களுக்குள் பல கதைகள் உண்டு. அவரது திருமணத்திலிருந்து பல கதைகள் உண்டு.

நான் சொன்ன ஒரு வரிக் கதையை அவர் திரைக்கதையாக்கிக் கொடுத்தார். சுவாரசியமாக மாற்றி இருந்தார். நன்றாக இருந்தது.அது வழக்கமான படமாக இருக்காது. அவர் இது மாதிரி அர்த்தமுள்ள சிறிய பட்ஜெட் படங்கள் செய்தாலே போதும். பல கோடி ரூபாய் பெரிய பட்ஜெட் படங்கள் எல்லாம் வேண்டாம். இந்தப் படம் நன்றாக வர வேண்டும் .பாரதிக்கு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்” என்றார்.

படத்தின் நாயகன் ஜீவா, படத்தின் நாயகி ஹரிஷா, படத்தின் ஒளிப்பதிவாளர் சாலமன் போஸ், படத்தில் நடித்துள்ள பிரபு சாஸ்தா, எழுத்தாளர், இயக்குநர் அஜயன் பாலா, இயக்குநர் நந்தா பெரியசாமி, இயக்குநரும் கதை வசன கர்த்தாவுமான பிருந்தா சாரதி, இயக்குநர் கதிர், .திரைப்படக் கல்லூரி முதல்வரும் ஓவியருமான கலைமாமணி ட்ராட்ஸ்கி மருது, இயக்குநர் வசந்தபாலன் உள்ளிட்டோரும் நிகழ்வில் கலந்துகொண்டு படம் குறித்தும் இயக்குநர் பற்றியும் பேசினார்கள்.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தயவு செய்து அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டாதீர்கள்.. முடிந்தால் சுயமாக எழுத கற்றுக் கொள்ளுங்கள்