ஹாரர் திரில்லர், சர்வைவல் திரில்லர் என எந்த வகையில் வேண்டுமானாலும் சேர்க்கலாம். அப்படியொரு பரபரப்பான கதைக்களத்தில் அமைந்துள்ள படம்.
தியேட்டரில் ரசிகர்கள் படம் துவங்கி 20 நிமிடங்களில் ‘என்னய்யா இது, செத்து செத்து விளையாடுறாங்க’ என்று தங்களுக்குள் பேசிக் கொள்கிறார்கள். அந்தளவுக்கு ஐந்து பேர் விதவிதமாக கொல்லப்படுகிறார்கள்; மீண்டும் உயிர் பிழைத்து வருகிறார்கள். மீண்டும் கொல்லப்படுகிறார்கள், மீண்டும் உயிர் பிழைக்கிறார்கள்…
அதற்கெல்லாம் காரணம் என்ன, கொல்லப்பட்டு கொல்லப்பட்டு உயிர் பிழைப்பவர்களின் பின்னணி என்ன என்பதையெல்லாம் தெளிவுபடுத்துகிறது சோனி பிக்சர்ஸ் என்டர்டெயின்மென்ட் இந்தியா வழங்கும் இந்த படத்தின் கதையோட்டம்…
2015 -ல் வெளியான அன்டில் டான் என்ற வீடியோ கேமை அடிப்படையாகக் கொண்டு தனித்துவமான படைப்பாக, ‘லைட்ஸ் அவுட்’, ‘அன்னாபெல் கிரியேஷன்’ போன்ற படங்களைத் தயாரித்த டேவிட் எப். சாண்ட்பெர்க் இயக்கியுள்ளார்.
பட்டாம்பூச்சி விளைவை மையப்படுத்திய ஒரு விளையாட்டு, அதில் ஈடுபடுவோர் தேர்வு செய்யும் முறையைப் பொறுத்து அவர்களின் வாழ்வு சாவு தீர்மானிக்கப்படும். அப்படியொரு சூழ்நிலையில் மூன்று பெண்களும் இரண்டு ஆண்களும் சிக்குகிறார்கள். வெற்றிக்கான இலக்கை அடைய முடியாமல் தவிக்கிறார்கள். ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு விதமாக கொடூரமாக பயம் காட்டப்பட்டு, ஒவ்வொரு விதமாக கொல்லப்படுகிறார்கள். மீண்டும் உயிரோடு வருகிறார்கள். அப்போதுதான் தாங்கள் டைம் லூப் (Time loop) எனப்படும் காலச் சுழலில் சிக்கியிருப்பது அவர்களுக்கு புரிகிறது. அதிலிருந்து எப்படியாவது தப்பித்துவிட வேண்டும் என்று போராடுகிறார்கள். அதன் விளைவுகள் என்ன என்பது படத்தின் மீதிக் கதை…
ஐந்து பேரையும் அமானுஷ்ய சக்தி பயம் காட்டும்போது படம் பார்ப்பவர்கள் மிரளாமல் இருக்க முடியாது. அவர்கள் கொல்லப்படும் விதமும் பயங்கரம்… அதுவும் ஒவ்வொருவரும் வெடித்துச் சிதறும்போது உடல் நடுங்கும் வாய்ப்பிருக்கிறது.
க்ளோவர் என்ற பிரதான கதாபாத்திரத்தை ஏற்றிருக்கிற எல்லா ரூபின் தந்திருக்கும் நடிப்புப் பங்களிப்பு தனித்து தெரிகிறது. மற்றவர்களும் கதையின் தன்மைக்கேற்ப உணர்வுபூர்வமாகவும் உணர்ச்சிக் கொந்தளிப்போடும் நடித்திருக்க, பெஞ்சமின் வால்பிஷின் பின்னணி இசை திகில் உணர்வை ஆடியன்ஸுக்குள் கடத்துகிற வேலையை சரியாகச் செய்திருக்கிறது.
ஒளிப்பதிவும் கலை இயக்குநரின் உழைப்பும் படத்தை தரம் உயர்த்தியிருக்கின்றன.
ஒரு வீடு, அதை சூழ்ந்திருக்கும் அமானுஷ்யம், உயிர் தப்பிக்க போராடுபவர்கள், தொடர் உயிரிழப்புகள் என பின்னப்பட்டுள்ள இந்த அன்டில் டான் மிரட்டலான அனுபவத்தை விரும்புகிறவர்கள் தவறவிடக் கூடாத படம்.

