சினிமா விமர்சகர்களை கொல்லும் பேய்களிடம் சிக்கிக் கொள்ளும் சினிமா விமர்சகர். இப்படி சிம்பிளாக சொல்லிவிட முடிகிற கதைக்கு இயக்குநர் பிரேம் ஆனந்த் அமைத்திருப்பது படு வித்தியாசமான திரைக்கதை…
யூ டியூபில் சினிமா விமர்சனம் செய்யும் சந்தானத்தை, ஹிட்ச்காக் இருதயராஜ் என்பவர் ஒரு தியேட்டருக்கு வர வைத்து, திரையில் ஓடும் படத்துக்குள் அனுப்புகிறார். படத்தில் அவர் மட்டுமல்லாமல் அவருடைய குடும்பமும் கோரமான தோற்றத்திலிருக்கிற நரமாமிசம் சாப்பிடுகிற சிலரிடம் சிக்கிக் கொள்ள, தப்பிக்க வாய்ப்பேயில்லை என்கிற அளவுக்கு நிலைமை மோசமாகிறது.
அப்படியான உயிரைக் காப்பாற்றிக் கொள்ளும் போராட்டத்தில் சந்தானமும் அவரது குடும்பமும் சந்திக்கும் சவால்கள் பரபரப்பாக இருக்க, எப்படி தப்பிக்கிறார்கள் என்பது கிளைமாக்ஸ்…
சந்தானம் நக்கல், நையாண்டிகளால் ஒரு லிட்டர் தாகத்துக்கு ஒற்றை சொட்டு வழங்கியதுபோல் கொஞ்சமே கொஞ்சம் சிரிப்பூட்டுகிறார். அவரது ஹேர்ஸ்டைலிலும் உடல்மொழியிலும் சிறியளவில் வித்தியாசம் தெரிகிறது. அதனால் என்ன பிரயோஜனம் என்பது தெரியவில்லை.
ஹீரோயின் கீத்திகா பேயாக அகோர முகத்துடன் அங்குமிங்கும் பறந்து கொண்டிருப்பதால் அவரது நடிப்புக்கு என்ன மதிப்பெண் கொடுப்பது என்ற குழப்பம் உருவாகிறது. ஆனாலும் கொடுத்த வேலையை செய்திருப்பதிலும் தோற்றத்தின் லட்சணத்திலும் குறையில்லை.
ஹிட்ச்காக் இருதயராஜாக பேய் மேக்கப்பில் ஒரே இடத்தில் உட்கார்ந்தபடியே அதட்டிக்கொண்டும் உருட்டிக்கொண்டும் தன் கடமையை நிறைவு செய்கிறார் செல்வராகவன்.
மொட்டை ராஜேந்திரனின் ஒன்லைன் வசனங்கள் கலகலப்பூட்டுகின்றன. ஹீரோவுக்கு கிட்டத்தட்ட படம் முழுக்க ஒரே காஸ்ட்யூம். இவரோ அழகழகாய் விதவிதமாய் மாட்டிக்கொண்டு சுற்றுகிறார்.
யாஷிகா ஆனந்த், மாறன், ரெடின் கிங்ஸ்லி என மற்றவர்கள் தங்களால் இயன்றதை செய்திருக்க, நிழல்கள் ரவிக்கு ஆய் போகிற வேலையைக் கொடுத்து கழிவறைக்குள் உட்கார வைத்திருப்பதை மன்னிக்க முடியாது.
கெளதம் மேனன் கெத்தான பாத்திரத்தில் வந்தாலும் கவனம் ஈர்க்கும்படி எதையும் செய்யவில்லை. உடம்பைக் கவ்விப் பிடிக்கும் உடைகளோடு அப்படியும் இப்படியும் வந்துபோகும் கஸ்தூரியின் காமெடி மனதைக் கவ்விப் பிடிக்கவில்லை.
திரைக்கும் ஓடும் படத்துக்குள் விரியும் மாய உலகம், முக்கிய சம்பவங்கள் நடக்கும் கப்பல், கதையின் ஒரு பாத்திரமாக வருகிற பேரடைஸ் தியேட்டரின் கலர்ஃபுல்லான வடிவமைப்பு என கலை இயக்குநரின் பங்களிப்பில் பாராட்டும்படியான அம்சங்கள் ஏராளம்.
ஒளிப்பதிவால் தரம் உயர்ந்திருக்கும் படத்தை பின்னணி இசை தாங்கிப் பிடிக்கிறது.
கதைக்களம் நிச்சயமாய் வித்தியாசம்தான். பலவீனமும் அதுவேதான்…
சந்தான படமாயிற்றே, சிரித்து ரசிக்கலாம் என்ற எதிர்பார்ப்போடு போனால் ஏமாற வேண்டியிருக்கும். வித்தியாசமான அனுபவம் போதும் என்றால் பெஸ்ட் ஆப் லக்!
-சு.கணேஷ்குமார்