சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன், எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடிக்க, புதுமுக இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் வெளிவந்து பெரியளவில் வரவேற்பு பெற்ற் வசூலில் சாதனை செய்துவரும் படம் ‘டான்.’
அந்த வெற்றியைக் கொண்டாடும் விதத்தில் 6. 6. 2022 அன்று மாலை சென்னையில் வெற்றி விழாவுக்கு ஏற்பாடாகியிருந்தது.
விழாவில், டான் படத்தை தயாரித்த லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் எம்.டி. சுபாஸ்கரன் லைகா நிறுவனத்தில் உயர்பொறுப்பு வகிக்கும் தமிழ்க்குமரன், படத்தில் நடித்த நடிகர்கள், இசையமைப்பாளர் அனிருத் உள்ளிட்ட தொழில்நுட்பக் கலைஞர்கள் திரளாக பங்கேற்றனர். படத்தை வெளியிட்ட ரெட் ஜெயண்ட் நிறுவனத்தின் உதயநிதி ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.
நிகழ்வில் உதயநிதி ஸ்டாலின், ” ‘டாக்டர்’ திரைப்படத்தின் வசூலை டான் முறியடிக்கும் என, படத்தின் பாடல் வெளியீட்டு விழாவிலேயே சொன்னேன். அது அப்படியே நடந்துள்ளது.
இந்த படத்தின் கதையை முதலில் ஒருவர் கேட்டு நிராகரித்துள்ளார். அது நான்தான். ஆமாம்… நான் கதை கேட்டேன். கதை எனக்குப் பிடித்தது. ஆனால், பள்ளி மாணவனாக நடிக்கும் படியான காட்சிகள் இருந்ததால் அதை என்னால் செய்ய முடியாத நிலையில் ஒத்துக்கொள்ள வில்லை.
சிவகார்த்தி நடிப்பில் படம் தயாரானபின், முதலில் எங்கள் நிறுவனத்தில் இருந்து நான்கு பேர் படத்தைப் பார்த்தோம். முதல் பாதியைப் பார்த்து இது நகைச்சுவையாக இருக்கிறதா, சிரிப்பு வருகிறதா என்று எங்களுக்குள்ளேயே பலவிதமாக பேசிக் கொண்டோம்.
இரண்டாம் பாதியை பார்த்தபின், ”கடைசி ஒரு மணி நேரம் அப்பா, மகன் உறவு மிகவும் உணர்வுபூர்வமாக எடுக்கப்பட்டுள்ளது. அதனால், இந்தப் படம் ஓடும்” என்று சொன்னேன். சொன்னதைப் போலவே ரசிகர்கள் படத்தைத் தலையில் தூக்கி வைத்து கொண்டாடி வருகிறார்கள். அதற்காக பெரிய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.
சிவகார்த்திகேயன் பேசும்போது, ”இயக்குநர் சிபி மற்றவர்களிடம் கதை சொன்னதையெல்லாம் என்னிடம் சொல்லியிருக்கிறார். இப்போது வரை உதயநிதி சாரிடம் கதை சொன்னதை சொல்லவே இல்லை” என்றார்.