கதையாழமிக்க பீரியட் படைப்பாய், அதிர்ச்சி தரும் அத்தியாயங்களின் அணிவகுப்பாய் ‘ஆட்டி.’
செங்காடு என்கிற அந்த மலைக் கிராமத்தில் சிறுவர் சிறுமிகளுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கும் ஆசிரியர் மர்மமான முறையில் கொலை செய்யப்படுகிறார். கொலையாளி யார், கொலைக்கான காரணம் என்ன என்பதை கண்டறியும் முயற்சியில் இறங்குகிறார் காவல்துறை உயரதிகாரி அமைதி ராஜ்.
அவரது விசாரணையில் அந்த ஆசிரியர் மட்டுமல்லாது இன்னும் சிலரும் மர்மமான முறையில் இறந்திருப்பதை, ஏதோவொரு ஆன்மிக சக்தியால் அந்த மரணங்கள் நடப்பதாக ஊர் நம்புவதை, அந்த நம்பிக்கையால் கொலைகள் நடப்பது குறித்து யாரும் போலீஸில் புகார் கொடுப்பதில்லை என்பதை, கொலைகளைச் செய்வது முகத்தை மறைத்து காடுகளில் திரியும் ஐந்து பேர் கொண்ட குழு என்பதையெல்லாம் தெரிந்து கொள்கிறார்.
இந்த சம்பவங்களே 1970 காலகட்டத்தில் நடந்து கொண்டிருக்க, அந்த ஐந்து பேரின் பின்னணி என்ன என்பதை தெரிந்து கொள்ள இன்னும் 100 ஆண்டுகள் வரை பின்னோக்கி அழைத்துச் செல்கிறது இயக்குநர் டி கிட்டு அமைத்திருக்கும் அதிரடிக்கு பஞ்சமில்லாத திரைக்கதை…
நடிக்கும் படங்களிலெல்லாம் பாலியல் வன்முறைக்கு ஆளாகும் அபி நட்சத்திரா இந்த கதையில் பாலியல் சீண்டலுக்கு ஆளாகிறார். கற்ற கல்வி கொஞ்சமாய் இருந்தாலும் அதை தான் வசிக்கும் மலைக்கிராம சிறார்களிடம் கொண்டு சேர்ப்பதை லட்சியமாக கொண்டிருக்கிறது அவர் ஏற்றிருக்கும் கேரக்டர். அவரது கல்வி போதிக்கும் கூடம் குடிசையாக இருந்தாலும் அவரது லட்சியம் கோபுரமாக உயர்ந்து நிற்கிறது. தன்னிடம் தவறாக நடந்து கொள்ள முயற்சிக்கும் ஆசிரியரிடம் வார்த்தைகளாலும் கன்னத்தில் அறைவதன் மூலமும் கோபத்தைக் காட்டும்போது தகதகவென எரியும் நெருப்பின் உக்கிரத்தை உணர முடிகிறது.
அமைதி ராஜ் என பெயர் வைத்துக் கொண்டு 12 என்கவுண்டர், 8 டிரான்ஸ்பர் என கெத்து காட்டுகிற போலீஸாக இசக்கி கார்வண்ணன். அலட்டலை குறைத்துக் கொண்டு விசாரணையில் சுறுசுறுப்பையும் புத்திசாலித்தனத்தையும் வெளிப்படுத்தும் கேரக்டருக்கு பொருத்தமாக இருக்கிறது அவரது நடிப்பு.
காமப்பசி அதிகரித்து தகாத செயல்களில் ஈடுபடுகிற ஆசிரியராக பிரவீன் பழனிசாமி, உடல்பசியைத் தீர்த்துக் கொள்ள ஸ்ரீதேவியுடன் பழகும் 16 வயதினிலே டாக்டரை நினைவுபடுத்துவது போன்ற கதாபாத்திரம். அதற்கேற்ற உடல்மொழியுடன் பங்களித்து பரலோகம் போகிறார்.
நாட்டார் தெய்வங்களைப் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபடுகிறவராக சித்து குமரேசன் திரைக்கதை வேகமெடுக்க உதவுகிறார். செல்வகுமாரும், காதல் சுகுமாரும் காவல்துறை அதிகாரிகளாக வருகிறார்கள். கரண் சக்கரவர்த்தி, சவுந்தர் உள்ளிட்டோரும் கவனம் பெறுகிறார்கள்.
படத்தின் பலமாக அமைந்திருக்கிறது தீசனின் பின்னணி இசை. சிபி சதாசிவத்தின் ஒளிப்பதிவில் தேயிலைச் செடிகளின் பச்சைப் பசேல் அடர்த்தியையும் ஓங்கி வளர்ந்த மரங்களையு மலைகளையும் பார்ப்பது கண்களுக்கு குளிர்ச்சி தருகிறது; காட்சிகளை பிரமாண்டமாக்குகிறது.
திரைக்கதையிலிருக்கும் திருப்பங்களுக்கேற்ப எடிட்டிங்கில் திறமை காட்டியிருப்பதோடு படத்தின் நீளத்தை 94 நிமிடங்களில் அடக்கியிருக்கிறார் சி.எம்.இளங்கோவன்.
50 லிருந்து 150 வருடங்கள் வரை முன்னும் பின்னுமாக காலகட்டத்தை காட்சிகளில் கொண்டு வர கடுமையாக உழைத்திருக்கிறார் கலை இயக்குநர் முஜுபுர் ரஹ்மான்.
காலகாலமாய் நடக்கும் பெண்களுக்கெதிரான பாலியல் வன்முறைகளை மையப்படுத்திய இந்த படத்தில் சிறு தெய்வங்கள் உருவான விதத்தை விளக்கும் காட்சிகள் சிலிர்ப்பூட்டாமல் விடாது.
வித்தியாசமான கிரைம் திரில்லர் விரும்பிகளுக்கு இந்த வார பெஸ்ட் சாய்ஸாக இருக்கப் போகிற இந்த ஆட்டி ஆச்சரியங்களை தனக்குள் வைத்திருக்கிறது பூட்டி!
-சு.கணேஷ்குமார்
