Home சினிமா டிராகன் சினிமா விமர்சனம்

டிராகன் சினிமா விமர்சனம்

2 கே கிட்ஸை கொத்துக் கொத்தாய் தியேட்டருக்கு இழுக்கிற அத்தனை அம்சங்களையும் அடுக்கி, ‘தப்பு செய்தால் தண்டனையிலிருந்து தப்பிக்க முடியாது’ என்பதை அழுத்தந்திருத்தமாய் எடுத்துச் சொல்லியிருக்கும் படம். ‘கப்பு முக்கியம் பிகிலு’ என்ற தளபதியின் வசனம் போல ‘படிப்பு முக்கியம் பசங்களா’ என தரமாக பாடம் நடத்தியிருக்கும் ‘டிராகன்.’

நேர்மையாகப் படித்து தேர்ச்சி பெற முடியாத 48 அரியர்ஸ் வைத்திருக்கிற மாணவன் ராகவன் முறைகேடுகளில் ஈடுபட்டு பட்டதாரியாகிறான்; பெரிய வேலையில் சேர்கிறான்; மாதம் 3 லட்சம்  சம்பளம் பெறுகிற அளவுக்கு உயர்கிறான்; கார் வாங்குகிறான்; வீடு வாங்குகிறான்; மிகப்பெரிய தொழிலதிபரின் மகளை கல்யாணம் செய்து கொள்வதற்கு தயாராகிறான்.

எல்லாமே நன்றாக போய்க் கொண்டிருக்கும்போது, வாழ்க்கையில் முன்னேறுவதற்காக அவன் செய்த தவறுகள் அவனை துரத்தத் துவங்குகின்றன. அதையெல்லாம் அவன் எப்படி சமாளிக்கிறான் என்பது பரபரப்பான காட்சிகளாக கடந்தோட திருமணம் நடந்ததா இல்லையா என்பது கிளைமாக்ஸ்.

நன்றாகப் படிக்கும் மாணவனாக இருந்து தான் விரும்பிய பெண்ணுக்கு பொறுக்கித்தனமான பையனை பிடிப்பதால் தானும் அப்படியே மாறுவது, ரவுடியிஸத்தில் இறங்கி கல்லூரியில் கெத்து காட்டுவது, போலி சான்றிதழ் பெற்று வேலையில் சேர்வது, செய்த தவறை மறைக்க மீண்டும் தவறு செய்வது, செய்த தவறுகளையும் செய்து கொண்டிருக்கும் தவறுகளையும் கல்யாணம் செய்து கொள்ளப்போகும் பெண்ணிடமிருந்து மறைக்க படாதபாடு படுவது என பிரதீப் ரங்கநாதனின் நடிப்பு முழுவதும் அதிரிபுதிரி அட்டகாசம்; ரசிக்கும்படியான கிறுக்குத்தனம் எக்கச்சக்கம். மனிதருக்கு ஜோடியாக லட்டு லட்டாய் இரண்டு ஹீரோயின்கள் கிடைக்க முத்தக் காட்சி அதுஇதுவென மனிதர் வாழ்ந்திருக்கிறார். ராகவன் டிராகனாய் மாறுகிற ஆரம்பக் காட்சி அத்தனை சுவாரஸ்யம்!

கல்லூரியில் ‘டிராகன்’ காட்டும் கெத்து பிடித்துப் போய் காதலிப்பது, அந்த கெத்து அவனை கல்யாணம் செய்துகொண்டு வாழ்வதற்கு ஒத்துவராது என முடிவெடுப்பது, டிராகனின் வாழ்க்கை டிராஜடியாக மாறியதற்கு தானும் ஒரு காரணம் என உணர்ந்து கலங்குவது என அனுபமா பரமேஸ்வரன் தந்திருக்கும் உணர்வுபூர்வமான நடிப்பு; அவரது பாத்திரத்துக்கு பொருத்தமான பங்களிப்பு.

முகத்தில் பணக்காரத்தனம் தெரிய வேண்டும்; பால்கோவா குவியலாய் திரண்டிருக்கும் இளமையை அப்படியும் இப்படியுமாய் காண்பிக்க வேண்டும்; உணர்ச்சி ததும்ப நடிக்கவும் வேண்டும்… அனைத்தையும் கவனம் ஈர்க்கும்படி செய்திருக்கிறார் இரண்டாம் நாயகியாய் வருகிற கயாது லோகர்.

கல்லூரி முதல்வராக மிஷ்கின். தன் மாணவன் தவறானவனாக இருக்கும்போது வெறுப்பது, அவனை திருத்துகிற விஷயத்தில் கடுமையான நடந்துகொள்வது, திருந்தியவனுக்கு பரிசாக தன் மகளையே தர முன்வருவது என சற்றே அலட்டலான நடிப்பால் ஆளுமையாக நடமாடியிருக்கிறார் இயக்குநர் மிஷ்கின்.

மகனுடைய தேவைக்காக லட்சக்கணக்கில் பணம் கொடுத்து ஊக்குவிப்பது, அவன் பிரச்சனையில் சிக்கும்போது மனதுக்கு ஆறுதலாய் இருப்பது என பிள்ளைக்காக எதையும் செய்யும் அப்பாவாக எளிமையான நடிப்பைத் தந்திருக்கிறார் ஜார்ஜ் மரியான். அவருக்கு மனைவியாக வருகிறவரின் நடிப்பில் நல்ல உயிரோட்டமிருக்கிறது; அவருக்கு குரல் பங்களிப்பு தந்திருப்பது வினோதினி வைத்தியநாதன்.

கோடிகளில் புரள்கிற தொழிலதிபரானாலும் எளிய மனிதர்களையும் மதிப்பவராக கே எஸ் ரவிக்குமார். ஒரு பாடலில் சில விநாடிகள் அவர் போட்டிருக்கும் ஸ்டெப்பில் வெளிப்பட்டிருப்பது, படையப்பா பட கிக்கு ஏறுதே பாடலில் ஏற்றியிருந்த அதே எனர்ஜி.

கார்ப்பரேட் நிறுவன நிர்வாகிக்கான நடை உடையோடு அட்டனன்ஸ் போட்டிருக்கிற கெளதம் மேனன், பாடலொன்றில் தாறுமாறாய் ஆட்டமும் போட்டிருக்கிறார்.

போலிச் சான்றிதழ் தயாரிப்பு, மாணவர்கள் தேர்வெழுதிய விடைத்தாள்களை மாற்றுதல் அதுஇதுவென குற்றச் செயல்களில் மூழ்கியவராக ‘லிப்ரா’ ரவீந்தர் சந்திரசேகர் ஒன்றிரண்டு காட்சிகளில் தலை காட்டும் சினேகா, கிளைமாக்ஸில் மின்னல் வெட்டுவதுபோல் புன்னகை காட்டும் இவானா… இப்படி படத்தில் ஏகப்பட்டோர் களமாடியிருக்க நண்பர்களாக வருகிற விஜே சித்து, ஹர்சத் கலகலப்புக்கு உதவியிருக்கிறார்கள்.

இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து தவறான நபராக வந்து, தகுந்த தண்டனை பெற்று முன்னுதாரமாகிறார்.

பாடல்களை உற்சாகம் தெறிக்கும் பட்டாசுகளாய்ப் பரிமாறி பட்டையைக் கிளப்பியிருக்கும் லியோன் ஜேம்ஸ், பின்னணி இசையில் கதையோட்டத்தின் தேவையை சரியாக நிறைவேற்றியிருக்கிறார்.

நிகேத் பொம்மியின் ஒளிப்பதிவு தரம்.

‘எப்படி வேண்டுமானாலும் வாழலாம்’ என முடிவெடுப்பவர்களுக்கு சமூகத்தில் கிடைக்கிற வாய்ப்புகளை சுட்டிக்காட்டி, அதையெல்லாம் பொருட்படுத்தாமல் இப்படித்தான் வாழ்வேன் என தீர்மானிப்பவர்கள் அதிர்ஷ்டசாலிகள் என்பதை இளம் தலைமுறைக்கு புரிய வைக்கும் விதத்தில் திரைக்கதையை கட்டமைத்திருக்கிற இயக்குநர் அஸ்வத் மாரிமுத்துவை, சில காட்சிகளில் கலந்திருக்கிற எரிச்சல் தருகிற சங்கதிகளைப் பொருட்படுத்தாமல் பாராட்டலாம்.

டிராகன் _ தியேட்டர்களை ரசிகர்களால் நிறைப்பவன்!

-சு.கணேஷ்குமார்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தயவு செய்து அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டாதீர்கள்.. முடிந்தால் சுயமாக எழுத கற்றுக் கொள்ளுங்கள்