Home விமர்சனம் திரெளபதி 2′ சினிமா விமர்சனம்

திரெளபதி 2′ சினிமா விமர்சனம்

ரசிகர்களை 14-ம் நூற்றாண்டுக்கு அழைத்துப்போகும் படம். இஸ்லாமிய ஆட்சியாளர்களால் இந்தியாவில் இந்து மதத்தினர் அனுபவித்த கொடுமைகள் ஏராளம். அதில் ஒரு துளியை தொட்டுக் காட்டியிருக்கிற ‘திரெளபதி 2’

திருவண்ணாமலையை தலைமையிடமாக கொண்டு அரசாட்சி புரிகிற வீர வல்லாளரிடம், குறுநில மன்னர் ஒருவரின் வாரிசான வீரசிம்ம காடவராயன் தளபதியாக இணைகிறார். இஸ்லாமிய (துருக்கியர்கள்) ஆட்சியாளர்கள் வீர வல்லாளரின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் பகுதிகளை தங்கள் வசப்படுத்த திட்டமிட்டு செயல்படுகிறார்கள். அதை எதிர்த்துப் போரிடும் வீர வல்லாளர் கொல்லபடுகிறார். அவரைக் கொன்றவர்களை பழி தீர்த்து, அவர்களின் திட்டத்தை முறியடிக்க களமிறங்குகிறார் காடவராயன். அதனால் அவர் இழந்தது என்ன? பெற்றது என்ன? என்பது கதையின் மீதி…

வீரசிம்ம காடவராயனாக ரிச்சர்ட் ரிஷி. போர் வீரனுக்காக கம்பீரத்தை உடற்கட்டிலும் நடிப்பிலும் சண்டைக் காட்சிகளிலும் சரியான அளவில் வெளிப்படுத்தியிருக்கிறார். அவருக்கு மனைவியாக வருகிற, ரக்சனா வீரமிக்க பெண்மணியாக தோரணையான நடையாலும் கண்ணசைவுகளாலும் தன் கேரக்டரின் மதிப்பைத் தக்க வைக்கிறார். வீர வல்லாளராக வருகிற நட்டி நட்ராஜிடம் ராஜகம்பீரம் அவ்வளவாய் இல்லை.

காமவெறியராக தினேஷ் லம்பா, முகமது பின் துக்ளக்காக சிராக் ஜானி இருவரும் கொடுமைக்கார இஸ்லாமியர்களின் அடையாளமாக களம் கண்டிருக்க,

வேல ராமமூர்த்தி, ஒய்.ஜி.மகேந்திரன், சரவண சுப்பையா, அருனோதயன் லக்‌ஷ்மணன், பரணி, திவி என இன்னபிற கதாபாத்திரங்களில் வருகிறவர்களின் நடிப்பு காட்சிகளுக்கு போதுமானதாக இருக்கிறது.

ஜிப்ரான் இசையில் பத்மலதா குரலில் எம்கோனே பாடல் (சின்மயி பாடி, படத்தில் இடம்பெறாத பாடல்) மனதில் தங்கும். பின்னணி இசை, கலை இயக்குநரின் உழைப்பு, ஒளிப்பதிவு படத்துக்கு பலம்.

14-ம் நூற்றாண்டில் நடந்த சம்பவங்களை பின்னணியாக கொண்டு, கற்பனை கலந்து மோகன் ஜி இயக்கியிருக்கும் இந்த படம் குறிப்பிட்ட ஒரு தரப்பினரின் இஸ்லாமிய வெறுப்புக்கு உரம் போடலாம்; விவாதங்களில் மோதலை உருவாக்கலாம்; அதைத்தாண்டி இந்த வரலாற்றுப் படம் வரலாறு படைக்க வாய்ப்பில்லை!

-சு.கணேஷ்குமார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தயவு செய்து அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டாதீர்கள்.. முடிந்தால் சுயமாக எழுத கற்றுக் கொள்ளுங்கள்