முழுக்க முழுக்க இன்றைய இளம் தலைமுறையைக் கவரும் விதத்தில் ஒரு படம். கனமான கதையை கலகலப்பான காட்சிகளால் கோர்த்துக் கட்டி, சீரியஸான சில கருத்துக்களை கியூட்டாக சொல்லியிருக்கும் ‘டியூட்.’
கதைநாயகன் அகன். அவனது மாமன் மகள் குறள். சிறுவயதிலிருந்தே அவனுடன் பழகி வளர்ந்தவள், வளர்ந்தபின் அவனது பிஸினஸில் பார்ட்னரானவள். அவள் ஒரு கட்டத்தில் ஏகனை காதலிப்பதாக சொல்ல, அவனுக்கு அவள் மீது அப்படியொரு ஃபீலிங் இல்லாததால் காதலை ஏற்க மறுக்கிறான். அவள் மனம் வருந்தினாலும், கொஞ்ச நாளிலேயே வேறொரு இளைஞனுடன் காதல் வயப்பட்டு ஒருசில மாதங்கள் கடந்தோடுகிறது. அந்த விவரம் தெரியாத ஏகனுக்கு அவள் மீது காதல் உருவாகிறது. அதை அவளிடம் சொல்கிறான்.
கதை சூடுபிடிப்பது போல் தோன்றுகிறதா? உம்ஹூம் இதெல்லாம் டீசர்தான்…
அகன் தன்னிடம் காதலைச் சொன்னதும் குறள் அதை ஏற்க மறுத்து, தான் வேறொரு நபரை காதலிக்கும் விவரத்தை அவனிடம் சொல்கிறாள். அதிர்ச்சியடையும் அவன், மனதை தேற்றிக்கொண்டு அவளை அவனோடு சேர்த்து வைக்கும் முடிவுக்கு வருகிறான். இதையெல்லாம் டிரெய்லராக எடுத்துக் கொள்ளலாம்…
அகன், குறளை அவளது காதலனோடு சேர்த்து வைக்க வேண்டும் என்றால், முதலில் குறளை அவனே அதாவது அகனே திருமணம் செய்து கொள்ள வேண்டும்.
தலை சுற்றுகிறதா? சுற்றத்தான் செய்யும். ஒருவன் தான் காதலிக்கும் பெண்ணை அவளது காதலனோடு சேர்த்து வைக்கும் முடிவுக்கு வருகிறான் என்றால் நல்ல விஷயம்தான். அவன் பெருந்தன்மையானவன்தான். ஆனால், அவளை அவனே திருமணம் செய்து கொண்டு அதன் பின் அவளது காதலனுடன் சேர்த்து வைப்பான் என்றால்… கேட்கவே ஒரு மாதிரியாக இருக்கிறதா? இருக்கத்தான் செய்யும். உண்மையில் கதை சூடுபிடிக்கும் இடம் இதுதான்…
அகன் அப்படியொரு முடிவெடுக்க காரணம் என்ன, குறள் யாருக்கு மனைவியாகிறாள் என்பதெல்லாம்தான் சுவாரஸ்யமான மெயின் ஃபிக்சர்.
அகனாக பிரதீப் ரங்கநாதன்; சுருக்கமாக பி ஆர். நடக்கிறார், ஓடுகிறார், சிரிக்கிறார், குதிக்கிறார், அழுகிறார், அடிக்கிறார், துடிக்கிறார், சிகரெட் பிடிக்கிறார், சாக்லேட் சாப்பிடுகிறார், கோபப்படுகிறார், உற்சாகமாகிறார்… எல்லாவற்றிலும் ஒருவித கிறுக்குத்தனம் இருக்கிறது; எல்லாவற்றிலும் ஒரு ஸ்டைல் இருக்கிறது. எல்லாவற்றையும் ரசிக்க முடிகிறது.
கதைநாயகியாக மமிதா பைஜு. மகிழ்ச்சி, கலகலப்பு, காதல், ஏக்கம், வேதனை, ஆத்திரம், விரக்தி, இயலாமை என நிமிடத்துக்கு நிமிடம் வெவ்வேறு உணர்வுகளை வெளிப்படுத்தும்படியான கதாபாத்திரம். வெளிப்படுத்தியிருக்கும் விதத்தைப் பார்த்தால் எக்ஸ்பிரஷன்களின் எக்ஸ்பிரஸ் பட்டப் பெயர் சூட்டலாம் போலிருக்கிறது.
கதைநாயகிக்கு தந்தையாக; கதைநாயகனின் மாமாவாக; பல மாநில அமைச்சர்களோடு நெருங்கிப் பழகுகிற இந்தியா முழுவதும் செல்வாக்குள்ள தமிழ்நாட்டின் அமைச்சராக சரத்குமார். கேரக்டருக்கேற்ற கம்பீரம், கதைக்கேற்ற கலகலப்பு, காட்சிக்கேற்ற ஆட்டம்பாட்டம் என வலம் வருபவரின் வில்லத்தனமும் கவனம் ஈர்க்கிறது.
ஹிருது ஹாரூனுக்கு கொடுக்கப்பட்டிருப்பது கதைநாயகியின் காதலன் என்ற முக்கியத்துவமுள்ள, நடிப்பில் வெகுளித்தனத்தை வெளிப்படுத்தும்படியான கதாபாத்திரம். அதற்கேற்ப அமுல்பேபியாய் மாறியிருக்கிறார்.
பி ஆரின் நண்பனாக வருகிற டிராவிட் செல்வம் கதைநாயகியின் தவறுகளை சுட்டிக்காட்டும் ஆவேசப் பேச்சில் தனித்து தெரிகிறார். ரோகிணி, நேஹா ஷெட்டி, சத்யா உள்ளிட்டோரின் ஃபெர்ஃபாமென்ஸ் பக்கா.
திரும்பிய பக்கமெல்லாம் கலர்ஃபுல்லாக இருக்க, ஒளிப்பதிவாளர் நிகேத் பொம்மியின் கேமரா கண்கள் குஷி மூடுக்குள்ளும் மோடுக்குள்ளும் போய் சுற்றிச் சுழன்றிருக்கிறது.
சாய் அப’யங்கர்’ இசையில் ‘ஊறும் ப்ளட்’, ‘சிங்காரி’ பாடல்கள் இதமான தாலாட்டாக தவழ்கிறது, ‘வைஃப்’க்கும் கேரண்டி தருகிறது. பின்னணி இசை காட்சிகள் கடத்த முன்வரும் உணர்வுகளுக்கு உறுதுணையாகியிருக்கிறது.
ஒரு காதல் இல்லையென்றாகிவிட்டால் உடனடியாக அடுத்த காதலை தேர்ந்தெடுக்கிற இன்றைய தலைமுறை, இன்றைக்கும் பலர் மனதில் இருக்கிற சாதிவெறி, அதனால் நிகழ்கிற ஆணவக் கொலை என பலவற்றை அழுத்தமான காட்சிகளாலும் நறுக் சுறுக் வசனங்களாலும் கட்டமைத்து, ‘தாலிக்கு மரியாதை தருவதைவிட தாலியை சுமக்கும் பெண்ணின் மனதுக்கு மதிப்பளிப்பது அவசியம்’ என்ற கருத்தோடு படத்தை முடித்திருக்கிற இயக்குநர் கீர்த்தீஸ்வரன் வெற்றிப்பட இயக்குநர்களின் வரிசையில் கெத்தாக ஏறி நிற்கிறார்.
டியூட் _ தீபாவளி ரிலீஸில் பெஸ்ட்!
-சு.கணேஷ்குமார்