இது அண்ணன் தம்பி கதையில் உருவான படம்.
இப்படி சொன்னதும் ‘விஜய்காந்தின் வானத்தைப் போல’ லெவலுக்கெல்லாம் கற்பனை செய்துகொள்ள வேண்டாம்.
அண்ணன், தம்பியைப் பழிவாங்க வேண்டும் என்று காத்திருக்கிறார். தம்பி, அண்ணனை சந்திக்க வேண்டும் என மனம் முழுக்க பாசத்தை நிரப்பி வைத்துக் காத்திருக்கிறார். இருவரும் ஒரு கட்டத்தில் தாங்கள் அண்ணன் தம்பி என்பது தெரியாமல் அரசியல் சார்ந்த விஷயங்களில் மோதிக் கொள்கிறார்கள். ஒரு சந்தர்ப்பத்தில் இருவரும் சகோதரர்கள் என்று தெரிந்து கொள்கிறார்கள். அதுவரை கதையில் பரபரப்பு தொற்றிக் கொண்டிருக்க, பின்னர் நடக்கிற சம்பவங்களில் உற்சாகமும் நெகிழ வைக்கும் தருணங்களும் பின்னிப் பினைந்திருக்கின்றன. அண்ணன் தம்பிகள் பிரிந்தது ஏன், அவர்களுக்குள் என்ன பிரச்சனை என்பது உட்பட சில விஷயங்களை விவரிக்கிறது திரைக்கதை.
கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி தயாரித்திருக்கும் இஷாக் ஹுசைனி அண்ணனாகவும் தம்பியாகவும் பிரதான பாத்திரங்களை ஏற்றிருக்கிறார். அண்ணன் அரசியல்வாதியாக ஒருசில அராஜக நடவடிக்கைகளில் இறங்குகிறார். தம்பி கல்லூரி மாணவனாக புரட்சி, போராட்டம் என களமாடுகிறார். நடிப்பில் குறிப்பிட்டுச் சொல்லும் அளவுக்கு ஏதுமில்லை. அண்ணன் தம்பி தோற்ற வித்தியாசத்துக்காக நெற்றியிலிருக்கும் புருவத்தை பெரிதாக்கி, சிறிதாக்கியதில் எதுவுமே நேர்த்தியாக இல்லை.
அண்ணனுக்கு ஒன்று தம்பிக்கு ஒன்று என படத்தில் இரண்டு ஹீரோயின்கள். ஒருவர் பிரியா. இன்னொருவர் ஜூலி. இருவருடைய பங்களிப்பும் கச்சிதம்.
சதாசிவ ஜெயராமனின் பின்னணி இசை பரவாயில்லை ரகம்.
தயாள் ஓஷோ மற்றும் தேவராஜ் கூட்டணியின் ஒளிப்பதிவு படத்தை அரதப்பழசான மொபைல் போனில் எடுத்தது போலிருக்கிறது. சின்ன கேரக்டர், பெரிய கேரக்டர் என்ற வித்தியாசமில்லாமல் யார் பேசினாலும் அவர்கள் வாய்க்கு குளோசப் ஷாட் வைத்திருப்பது எரிச்சலூட்டுகிறது. ஹீரோவின் வீங்கிப்போன கண்களை மட்டும் 100 முறையாவது நெருக்கத்தில் காட்டியிருப்பார்கள். கதையில் அதற்கான அவசியம் எதுவும் இருப்பதாக தெரியவில்லை.
கதை தாக்கம் தருவதாக இருந்திருந்தால், திரைக்கதை சுவாரஸ்யமாக அமைக்கப்பட்டிருந்தால், படத்தை எடுத்தவிதத்தில் தரம் வெளிப்பட்டிருந்தால் பூகம்பம் திரையுலகில் அதிர்வை உருவாக்கியிருக்கும். எது எப்படியோ படத்தை தீபாவளி ரேஸில் இறக்குகிற இஷாக் ஹுசைனியின் துணிச்சலை பாராட்டத்தான் வேண்டும்.
-சு.கணேஷ்குமார்
