இந்த படத்தின் ஷூட்டிங்கின்போது யானைகள் வந்துவிடுமோ என்ற திகிலுடன் நடித்தோம்! -‘குருமூர்த்தி’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் படத்தின் நாயகன் நட்டி பேச்சு

நட்டி நடராஜ் கதாநாயகனாகவும், ராம்கி முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ள படம் ‘குருமூர்த்தி.’ ஃபிரண்ட்ஸ் டாக்கீஸ் சார்பில் சிவசலபதி சாய்சரவணன் தயாரித்துள்ள இந்த படத்தில் கதாநாயகியாக பூனம் பஜ்வா நடிக்க மற்றும் சஞ்சனா சிங், அஸ்மிதா, ரிஷா, ரவிமரியா, ரேகா சுரேஷ், மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்தை கே.பி.தனசேகரன் இயக்கியுள்ளார். அடிப்படையில் ஒளிப்பதிவாளரான இவர், இந்த படத்தின் மூலம் இயக்குநராகியுள்ளார்.

விரைவில் படம் வெளியாகவுள்ள நிலையில் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடந்தது. நடிகர்கள் நட்டி, ராம்கி, பூனம் பஜ்வா உள்ளிட்ட படக்குழுவினருடன் சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர்கள் ஆர்.கே.செல்வமணி, பேரரசு விநியோகஸ்தர்கள் சங்கத் தலைவர் கே.ராஜன், ஒளிப்பதிவாளர் சக்தி சரவணன், ஸ்ரீராம் கார்த்திக், பிரஜின் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் நடிகர் நட்டி “ஒரே நாளில் நடக்கும் கதை தானே, சிட்டிக்குள்ளேயே படத்தை முடித்துவிடலாம் என்று நினைக்காமல் கதையின் தேவைக்கு ஏற்ப ஊட்டியைச் சுற்றியுள்ள பகுதிகளில் நிறைய செலவு செய்து இந்தப் படத்தைப் படமாக்க தயாரிப்பாளர் முன்வந்ததில் சினிமாவை அவர் எவ்வளவு நேசிக்கிறார் என்பது தெரிகிறது. ஷூட்டிங்கின்போது யானைகள் எப்போது வருமோ என்கிற ஒரு சூழலில்தான் திகிலுடன் நடித்தோம். இந்த படத்தின் கதையை இயக்குநர் தனசேகரன் என்னிடம் கூறியபோது ஒரே நாளில் இவ்வளவு விஷயங்களா..? உங்களால் இதை எல்லாவற்றையும் காட்டி விட முடியுமா என்று கேட்டேன். சொன்னபடியே அழகாக அத்தனையும் படத்திற்குள் கொண்டு வந்துள்ளார். ‘செக்கச்சிவந்த சுந்தரி’ பாடலில் ராம்கி மூன்று நடிகைகளுடன் நடனமாடியுள்ளார். அந்தப்பாடலில் எனக்கு இடம் இருக்கிறதா என்று கேட்டபோது உங்களுக்கு இதில் வேலை என்று இல்லை என ஒதுக்கி விட்டனர்” என்று ஜாலியாகப் பேசினார்.

நடிகர் ராம்கி “கோவிட் நிலவிய காலகட்டத்தில் ஊட்டியைச் சுற்றியுள்ள, இதுவரை படப்பிடிப்பு நடத்தாத பகுதிகளில் 45 நாட்கள் படப்பிடிப்பு நடத்துவது என்பது சாதாரண விஷயமல்ல. தயாரிப்பாளரின் ஒத்துழைப்பு தான் அதற்கு முக்கியமான காரணம். படக்குழுவினரின் பாதுகாப்புக்காக, தினசரி பூஜை நடத்தும் அளவிற்கு நல்ல மனிதர். 25 வருடத்திற்கு முன் நான் நடித்த படங்களில் நட்டி உதவி ஒளிப்பதிவாளராகப் பணியாற்றி வந்தார். எல்லா இடங்களிலும் அவர் பெயரே கேட்கும். அப்போது எப்படி இருந்தாரோ இப்போதும் அதேபோன்று எளிமையான மனிதராக இருக்கிறார். படத்தில் எங்கேயும் அவரது தலையீடு இல்லை. ஒரே நாளில் நடக்கும் கதை என்றாலும் அடுத்து என்ன நடக்கும், பணம் கிடைத்தால் மனிதன் எப்படி மாறுகிறான் என்பதை வைத்து விறுவிறுப்பாக இந்தப் படத்தை இயக்குநர் தனசேகரன் இயக்கியுள்ளார்” என்றார்.

இயக்குநர் கே.பி.தனசேகரன் பேசும்போது, “இயக்குநராக இது எனக்கு முதல் படம். புது இயக்குநர் தானே என நினைக்காமல் படத்தின் தயாரிப்பாளர் இந்தப் படத்தை பெரிய படமாகக் கொண்டு வருவதற்கு எனக்கு ஊக்கமளித்தார். இந்தப்படத்தின் ஒளிப்பதிவாளர் தேவராஜ், புஷ்பா படத்தில் இரண்டாவது யூனிட் ஒளிப்பதிவாளராக பணியாற்றியது மகிழ்ச்சியான விஷயம். இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ள சத்யதேவ் நிச்சயம் நல்ல இடத்திற்கு வருவார்” என்று கூறினார்.

நடிகை பூனம் பஜ்வா, “இந்த படத்தின் தமிழரசி என்கிற அருமையான கதாபாத்திரத்தை இயக்குநர் எனக்குக் கொடுத்துள்ளார். நட்டியுடன் இணைந்து நடித்தது போன்று எதிர்காலத்தில் தான் நடிக்கும் படங்களில் அவரைப்போன்ற நடிகர்களுடன் இணைந்து நடிக்க வேண்டும் என விரும்புகிறேன். அந்த அளவுக்கு பழகுவதற்கும், இணைந்து நடிப்பதற்கு நல்ல மனிதர்” என்றார்.

நடிகர் ரவிமரியா, ”பத்து வருடத்திற்கு முன்பு நட்டியை ஹீரோவாக வைத்து மிளகா என்கிற படத்தை இயக்கினேன். ஆனால் இப்போதுதான் அவருடன் முதன்முறையாக இணைந்து நடிக்கிறேன். கதாநாயகிகள் அனைவரும் இந்த விழாவில் ஒற்றுமையாக கலந்து கொண்டிருப்பதைப் பார்க்கும்போது சந்தோஷமாக இருக்கிறது. மிளகா படத்தில் உதவி எடிட்டராக பணியாற்றிய பாசில் தான் இந்த படத்திற்கு எடிட்டராகப் பணியாற்றி உள்ளார். அப்போதே அவர் பெரிய இடத்திற்கு வருவார் என்று சொன்னேன்’ என்றார்.

இயக்குநர் ஆர்.கே செல்வமணி “ராஜாவாக இருந்தாலும்கூட அவருக்கும் சின்னச்சின்ன ஆசை இருக்கும். அப்படி இந்தியாவில் முதல் பத்து கேமராமேன்களில் ஒருவராக இருக்கும் நட்டி, நடிப்பின் மீதான காதலால் ஒரு நடிகராக மாறி ஒரு துணை நடிகரைப்போல் எளிமையாக இந்த இடத்தில் அமர்ந்து இருக்கிறார். அதுமட்டுமல்ல, அவர் கதைகளை தேர்வு செய்யும் விதமும் ஒவ்வொரு படத்திற்கும் ஆச்சரியப்படுத்துகிறது. அந்தவகையில் அவர் தேர்வு செய்ததாலேயே இந்தப் படம் வித்தியாசமான படமாக இருக்கும் என்றும் உறுதியாகச் சொல்ல முடியும்” என்றார்.

இயக்குநர் பேரரசு பேசும்போது, “ராம்கி ஹீரோவாக நடித்து வந்த சமயத்தில் கூட இப்படி ஒரு பாடல் அவருக்குக் கொடுக்கப்படவில்லை. இப்போது 3 கதாநாயகிகளுடன் அவர் ஆடுவதைப் பார்க்கும்போது ராம்கிக்கு யோகம் ஆரம்பித்து விட்டது என்று தான் சொல்ல வேண்டும்” என்றார்.

படக்குழு:- சத்யதேவ் உதயசங்கர் இசையமைத்துள்ள இந்தப் படத்திற்கு தேவராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். இவர் தெலுங்கில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற புஷ்பா படத்தில் இரண்டாவது யூனிட் ஒளிப்பதிவாளராக பணியாற்றி வருகிறார். இந்தப்படத்தின் படத்தொகுப்பை எஸ்.என்.பாசில் கவனித்துள்ளார்.

இசை வெளியீட்டு விழா புகைப்படத் தொகுப்பு:-

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here