கேங்கர்ஸ் சினிமா விமர்சனம்

‘வசனமா முக்கியம்; படத்த பாருடா’ என்பதுபோல, ‘கதையா முக்கியம்; கலகலப்புதான் அவசியம்’னு சுந்தர் சி’யும் வடிவேலுவும் வரிந்து கட்டி களமிறங்கியிருக்கிற படம்.

அந்த ஊர்ல அண்ணனும் தம்பியுமா ரெண்டு பேரு, குற்றச் செயல்களை குஷியா செய்துகிட்டிருக்காங்க. அவங்களை சட்டப்படி தண்டிக்க அந்த ஊர் ஸ்கூல் டீச்சர் ஒருத்தங்க முயற்சி செய்றாங்க. காவல்துறை, அவனுங்க என்னல்லாம் அராஜக அநியாயம் பண்றாங்கன்னு ரகசியமா கண்காணிச்சு சிக்க வைக்க ஒரு போலீஸை ஊருக்குள்ள அனுப்பி வைக்குது.

கதை இப்படி ஃபர்ஸ்ட் கியர் போடுறப்போ, அந்த ரகசிய போலீஸ்தான் கதையோட ஹீரோவா இருப்பாருன்னு நாம ஒரு முடிவுக்கு வர்றோம். ஹீரோவும் வர்றார். கேடுகெட்டவனுங்கள போட்டுப் பொளக்குறார். எல்லாமே நல்லா போறப்போ வேறொருத்தரு ‘அவனுங்கள கண்காணிக்க வந்த போலீஸ் நான்தான்’னு சொல்லி எட்டிப் பார்க்குறாரு.

அப்படினா ஹீரோ யாரு, அவருக்கும் குற்றவாளிகளுக்கும் என்ன சம்பந்தம்னு சிலபல கேள்விகள் மனசுல தோணுதுல்ல… அதுக்கெல்லாம் பதில் சொல்ற விதமா திரைக்கதை டாப் கியர் போட்டு பறக்குது… அடுத்த பாகத்துக்கு வெச்சிருக்குற ‘லீடு’ம் அசத்துது.

ஒரு இரும்பு பைப்பு. அதால அடிச்சா ஆளு காலியாகிடுவான், இல்ல கோமாவுக்கு போய்டுவான். அப்படியொரு பைப்பால ஒருத்தன் அடிக்க வர்றப்போ நம்ம ஹீரோ சுந்தர் சி கையால தடுக்குறாரு, பைப்பு வளைஞ்சிடுது. அம்புட்டு பலமானவரு முகத்த மறைச்சுக்கிட்டு ஒரு வில்லன துவம்சம் பண்ணி தெறிக்க விடுறாப்ல; இன்னொரு வில்லன கூத்துக் கலைஞன் வேடத்துல வந்து வெளுத்து வாங்குறாரு. வில்லன் கும்பல்கிட்டேயிருந்து 100 கோடி ரூபாய குறிவெச்சு தூக்குற கிளைமாக்ஸ் சீனெல்லாம் பட்டைய கிளப்பும் பட்டாசு.

13 வருசங்கழிச்சு சுந்தர் சி படத்துல வடிவேலு. லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வந்தவர் மாதிரி பழைய பாடிலாங்வேஜோட அவரு அடிக்கிற லூட்டியெல்லாம் செம எனர்ஜியா இருக்குது. மனுசன் கொஞ்ச நேரம் பாட்டியம்மா கெட்டப்புல வர்றாரு. அது கெட்டப் மாதிரியே தெரியல. நிஜமா ஒரு பாட்டியே அங்குட்டும் இங்குட்டும் திரியுற ஃபீல் வருது. ஒரு சிங்கிள் ஷாட் சீன்ல நான் அது அடிச்சதில்ல, இது அடிச்சதில்லைன்னு அஞ்சு நிமிச டயலாக்க கேப் விடாம அடிச்சு விடுறாரு. நமக்கு மூச்சு வாங்குது. சும்மா பேச்சுக்கு சொல்றதில்ல… நிஜமாவே வடிவேலு கம்பேக்தான். காட்சிக்கு காட்சி காமெடி கலாட்டாதான்.

ஹீரோ மட்டும்தான் அநியாயத்தை தட்டிக் கேட்பாரா? இந்த படத்துல ஹீரோயின் கேத்ரின் தெரசாவும் அதை கெத்தா செய்றாங்க. அம்மணி அத்தோட நிறுத்திக்காம சத்தா இருக்குற வளைவு நெளிவைக் காட்டி டக்கரா ஒரு டான்ஸையும் போட்டிருக்காங்க.

வில்லன்களா பார்த்துப் பழகிய ஹரிஷ் பெராடி, மைம் கோபி, அருள்தாஸ் எல்லாரும் அடிதடியும் வெட்டுக்குத்துமா களமாடியிருக்காங்க. அவங்ககிட்டே சிக்கி சின்னாபின்னமாகுற வாணி போஜனை பார்க்க பாவமா இருக்கு. அந்தளவுக்கு சிரமப்பட்டு நடிச்சிருக்காங்க.

பக்ஸ் பகவதி பெருமாளை லேடி கெட்டப்புல பார்க்குறதெல்லாம் வேற லெவல் விஷப்பரிட்சை. தியேட்டர்ல சிரிப்பு அள்ளுது.

முனீஸ்காந்த், சந்தானபாரதி, விச்சுன்னு படத்துல ஏகப்பட்ட பேரு; பங்களிப்பு ஜோரு.

என்ட் கார்டு போட போறப்போ என்ட்ரீ கொடுக்குற ‘கலகலப்பு’ ஹீரோ விமல் ஸ்டோரியோட டர்னிங் பாயிண்டுக்கு ஹெல்ப் பண்றாரு.

சண்டைக் காட்சிகள்ல சத்யாவோட பேக்ரவுண்ட் மியூஸிக் தூள் கிளப்புது பாட்டுக்கு போட்ட மெட்டுலாம்கூட பரவசம்தான்.

ஒளிப்பதிவால ஒட்டு மொத்த படத்தையும் இஞ்ச் இஞ்சா மெருகேத்தியிருக்காரு இ கிருஷ்ணசாமி.

படத்துல லாஜிக் ஓட்டை ஏகப்பட்டது இருக்கு. அதெல்லாம் காமெடி கலவரத்துல காணாம போய்டுது.

கடைசியா ஒரு வார்த்த… இது சிரிப்புக்கு ஏத்த படம்; வெறுப்பு ஏத்தாதுன்னு அடிச்சு சொல்லலாம் சூடம்!

-சு.கணேஷ்குமார்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here