‘படமல்ல பாடம்’ என்ற பட்டியலில் சேர்கிற பெருமிதமான தமிழ் சினிமா!
குழந்தைகள் மீதான பாலியல் வன்முறையை மையப்படுத்திய படங்களின் வரவுக்குப் பஞ்சமில்லை.. அவற்றின் தொடர்ச்சியாக, இதுவரை வந்தவற்றைவிட சற்றே ஆழமான, ஏற்கத்தக்க கதையோட்டத்தில் ‘கார்கி.’
ஒன்பது வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் ஐந்து இழிபிறவிகள் கைதாகிறார்கள். அதில், ஐந்தாவது நபர் சாய்பல்லவியின் அப்பா!
‘என்னுடைய அப்பா இரண்டு பெண் பிள்ளைகளைப் பெற்றவர். அவர் அப்படியொரு கேவலமான காரியத்தில் ஈடுபட்டிருக்க மாட்டார்’ என உறுதியாக நம்பும் சாய்பல்லவி, அவரை சட்டத்தின் பிடியிலிருந்து மீட்க நினைக்கிறார். ஆனால், சம்பந்தப்பட்ட சிறுமியே அடையாளம் காட்டி குற்றம் நிரூபிக்கப்பட்டதால் தண்டனை உறுதி என்றாகிறது.
சாய்பல்லவிக்கு போலீஸ் தரப்பிலும் வழக்கறிஞர்கள் தரப்பிலும் யாரும் உதவ முன்வராத சூழ்நிலை. அதையெல்லாம் தாண்டி சட்டத்தோடு போராடி அப்பாவை குற்றமற்றவர் என நிரூபிக்கிறார்.
அவர் குற்றமற்றவர் எனில் குற்றவாளி யார்? கிளைமாக்ஸில் பதில் இருக்கிறது. அது நமக்கு ரயில்வே ஹை வோல்டேஜில் ஷாக்கடித்தது போன்ற உணர்வைத் தருகிறது. இயக்கம்:- கெளதம் ராமச்சந்திரன்
படத்தின் தலைப்பை கதாபாத்திரப் பெயராகவும். கதையை தன் மீதும் சுமந்திருக்கிறார் சாய்பல்லவி.
அப்பாவின் மீது பாசம் காட்டுவதாகட்டும், அப்பா மீது குற்றம் சுமத்தப்பட்டபின் அக்கம் பக்கம் மீடியா என எல்லா பக்கமிருந்தும் அவமானத்தைச் சந்தித்து தலை குனிவதாகட்டும், சட்டப் போராட்டங்களைச் சந்தித்து சோர்வுறுவதாகட்டும், அப்பாவை குற்றமற்றவர் என நிரூபித்தபின் மனதிலிருந்து புன்னகைப்பதாகட்டும் ஒவ்வொரு பிரேமிலும் ‘பிரேமம்’ நாயகியிடமிருந்து பிரமிக்க வைக்கும் நடிப்பு! ‘மைடியர் மச்சான்’ பாட்டில் தனுஷுடன் அப்படியொரு குத்தாட்டம் போட்டவரா இவர்? ‘கார்கி’க்கு காத்திருக்கின்றன உயரிய விருதுகள்!
‘சிதைந்து கிடந்த சிறுமியைக் காப்பாற்றிய தன் மீதே பழி வந்துவிட்டதே’ என ஆதங்கத்தில் மனம் புழுங்குகிற இடத்தில் ஆர்.எஸ். சிவாஜியின் நடிப்பில் அத்தனை உயிரோட்டம்!
‘பருத்திவீரன்‘ சரவணன், லிவிங்ஸ்டன், ‘கவிதாலயா‘ கிருஷ்ணன், ஜெயபிரகாஷ், பெனிக்ஸ் என்ற பாத்திரத்தில் காவல்துறை அதிகாரியாக வருகிற கேப்டன் பிரதாப், திருநங்கை டாக்டர். சுதா என அத்தனைப் பேரின் நடிப்பும் அளவாக, நிறைவாக!
பெரும்பாலான படங்களில் ஜாலி வெங்கட்டாக வருகிற காளி வெங்கட்டுக்கு இந்த படத்தில் அவரது உடம்பைப் போலவே கொஞ்சம் கனமான, வழக்கறிஞர் வேடம். தனது கெக்கேபிக்கே தனங்களை தூக்கிப் போட்டுவிட்டு, பாத்திரத்தின் தன்மையுணர்ந்து இயல்பாக நடித்திருக்கிற அவருக்கும் இது குறிப்பிடத்தக்க படம்!
பாலியல் வன்முறைக்கு ஆளான சிறுமியாக வேதா பிரேம்குமார், சிறுவயது சாய்பல்லவியாக அன்ஷிதா ஆனந்த் என குழந்தை நட்சத்திரங்களும் கவனம் ஈர்க்கிறார்கள்.
கதாபாத்திரங்களுக்கு சரியாக பொருந்தகூடிய நடிகர்களைத் தேர்வு செய்திருப்பது, கடைசி நிமிடம் வரை குற்றவாளி யார் என்பதை யூகிக்க முடியாத அளவில் பரபரப்பாக விறுவிறுப்பாக கதையை நகர்த்தியிருப்பது, ‘பெண் பிள்ளைகளின் பாதுகாப்பு விஷயத்தில் யாரையும் நம்ப முடியாது; நம்பக் கூடாது’ என்ற விழிப்புணர்வை ஆழமாக விதைத்திருப்பது, உண்மைத் தன்மையை அலசாமல் பரபரப்புச் செய்திகளால் டி.ஆர்.பி. ஏற்ற முயற்சிக்கும் மீடியாக்களை, ‘எது உண்மையா நடக்குதோ அதுதான் செய்தி; ஆனா, நீங்க விரும்புறதுதான் செய்தியா இருக்கணும்னு நினைக்கிறீங்க’ என்கிற ரீதியில் வெளுத்து வாங்கியிருப்பது என இயக்குநரை குறிப்பிட்டுப் பாராட்ட படத்தில் அநேக அம்சங்கள்… கண்ணியம் மீறாத காட்சிகள்… அத்தனைக்காகவும் இயக்குநருக்கு அழுத்தமான கை குலுக்கல்!
பெண் பிள்ளைகளின் உணர்வை அம்மாக்கள் எந்தளவுக்கு (அவ)மதிக்கிறார்கள் என்பதை எடுத்துக் காட்டுகிறது, சாய் பல்லவி தன் அம்மாவிடம் பதில் சொல்லிச் சொல்லி அலுத்துச் சலித்து மனம்குமுறும் காட்சி!
திருநங்கையொருவர் நீதிபதியாக இடம்பெறும்படி கதையெழுதி, நிஜ திருநங்கையொருவரையே நடிக்கவும் வைத்து, அவருடைய பாலியல் பிறவிக் குறைபாட்டை வழக்கறிஞர் ஏளனமாகப் பேசும்படி திரைக்கதையமைத்து, பாலியல் பலாத்கார வழக்கை தான் நீதிபதியாக இருந்து விசாரிப்பது எந்தெந்த விதங்களில் பொருத்தமானது என அந்த பாத்திரத்தின் வழியாகவே சொல்ல வைத்திருப்பது ஹைலைட்! அதற்காக இயக்குநருக்கு மற்றுமொரு பாராட்டு!
கோவிந்த வசந்தாவின் பின்னணி இசை கச்சிதம். ‘யாத்ரி’ பாடல் ஈர்க்கிறது.
ஒளிப்பதிவு, எடிட்டிங் என இன்னபிற தொழில்நுட்பக் கலைஞர்களிடமிருந்து கிடைத்திருக்கிறது கதைக்களத்துக்கு என்ன தேவையோ அதற்கேற்ற உழைப்பு!
நிறைவாக ஒரு வரி… விமர்சனம் என்ற பெயரில் படத்தின் முழு கதையையும் வரிவரியாக பதிவு செய்யும் அதிபுத்திசாலிகளின் எழுத்துகள் எதையும் படிக்காமல், வேறு எந்த விதத்திலும் கதையின் கிளைமாக்ஸை தெரிந்து கொள்ளாமல் ‘கார்கி’யை பாருங்கள். புது அனுபவம் உறுதி!
By சு. கணேஷ்குமார் / 99415 14078 / sg120678@gmail.com