‘குலுகுலு’ சினிமா விமர்சனம்

குலுகுலு‘ சினிமா விமர்சனம்

பலருக்கும் பிடிக்கும் கலகல பாத்திரங்களில் நடிக்கும் சந்தானம் ஒரு சாராருக்கு மட்டுமே பிடிக்கும் பிளாக் காமெடி ஜானருக்கு தாவியிருக்கும் ‘குலுகுலு.’

தனக்கு எதிரிலிருக்கும் யாருக்கு எந்த உதவி தேவைப்பட்டாலும் செய்யத் துடிப்பவன்; செய்து முடிப்பவன் அந்த இளைஞன். அந்த குணமே அவனுக்கு ஆப்பு வைப்பதும், அதையெல்லாம் பிடுங்கி வீசிவிட்டு தன் இயல்பைத் தொலைக்காமல் பயணிப்பது அவனது தனித்துவம். கதையின் ஒன்லைன் என்னவோ அம்புட்டுத்தான். ஆனால், திரைக்கதை தருகிற அனுபவம் பலருக்கும் வாழ்க்கைப் பாடம்.

இயக்கம்: மேயாத மான், ஆடை படங்களை இயக்கிய ரத்னகுமார்

குறைந்த மக்களே வசித்த அமேசான் காட்டுப் பகுதியில் பிறந்தவர், தனது இனம், மொழி அழிந்ததை நேரில் பார்த்தவர், நாடு நாடாக நாடோடியாக சுற்றித் திரிந்து தமிழகம் வரை வந்தவர் என வலுவான கதாபாத்திரத்தில் சந்தானம். அவரது பழுப்பேறிய உடையும், அழுக்கடைந்த அடர்தாடியும், ஒடுங்கிய கன்னங்களும் பரிதாபத்தை தூண்டுகிறது.

பணம் கேட்டு மிரட்டும் கடத்தல் கும்பலிடமிருந்து தன் நண்பனை மீட்க உதவி கேட்கும் இளைஞர்களுக்கு தோள்கொடுப்பது; சொத்துக்காக தன்னை கொலை செய்யத் துரத்தும் அண்ணன்களிடமிருந்து இளம்பெண் ஒருவரை காப்பாற்ற துணை நிற்பது என விரியும் காட்சிகளில் சந்தானத்தின் நடிப்பு ஈர்க்கிறது. அடிபட்டு சாலையோரம் கிடக்கும் நாயை அடக்கம் செய்யும் காட்சி நச்!

சீரியஸான கதாபாத்திரம் என்றாலும் சந்தானம் தன் ஸ்டைலில் சிரிப்பு சிப்ஸ் தூவவும் சிலபல சீன்கள் உண்டு. சுற்றிலும் ஆட்களை ஏற்பாடு செய்துவிட்டு திமிர்பிடித்த போலீஸ்காரருக்கு பொளேர் சிகிச்சை தரும் குசும்புக்கு தியேட்டரில் விசில்!

முதுமையைக் கண்டு பயப்படுகிற, முதியோர்களை அருவருப்பாக பார்க்கிற இயல்பை (கெரஸ்கோஃபோபியா) வியாதியாக கொண்ட நமீதா கிருஷ்ணமூர்த்தி, ஒருசில காட்சிகளில் வந்தாலும் தனது டிரேட் மார்க் காமெடியைக் கொடுத்திருக்கிற ‘லொள்ளுசபா’ மாறன், வில்லனாக வருகிற ப்ரதீப் ராவத், போலீஸாக சாய் தீனா… இன்னபிற கதாப்பாத்திரங்களில் நடித்திருப்பவர்களின் பங்களிப்பு நேர்த்தி!

இளைஞனைக் கடத்தி வைத்துக் கொண்டு அவனைச் சார்ந்தோரிடம் பணம் கேட்டு மிரட்டும் ஜார்ஜ் மரியான் தலைமையிலான கூட்டணியின் அலப்பறை ரசிக்க வைக்கிறது!

‘கடிகாரம் ஓடுற வரை டைம் தெரியும்; அது நின்னாதான் கடிகாரம் கண்ணுக்கு தெரியும்’, அவரு வேலை வேலைன்னு சுத்துறதாலதான் உனக்கு வேளா வேளைக்கு சோறு கிடைக்குது’, ‘புத்திசாலி கூட அடுத்து என்ன யோசிப்பானு யூகிக்கலாம்; ஆனா கிறுக்கனுங்க டேஞ்சரஸ்…’ வசனங்களில் அர்த்தம், அரசியம், சுவாரஸ்யம், நகைச்சுவை எதற்கும் பஞ்சமில்லை.

சந்தோஷ் நாராயணன் இசையில், அவரது மகள் தீ-யின் குரலில் அன்பரே பாடல் மனதை வருடுகிறது.

ஒளிப்பதிவுக்கு அதிக வேலை தரக்கூடிய கதைக்களம். சுற்றிச் சுழன்றிருக்கிறார் விஜய் கார்த்திக் கண்ணன்.

‘குலுகுலு’ – வித்தியாசமான படங்களை விரும்புவோர் இந்த வீக் என்டை கொண்டாட ஏற்ற சாய்ஸ்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here