விக்னேஷ் கார்த்திக் இயக்கிய ‘ஹாட் ஸ்பாட்’ திரைப்படம் ரசிகர்களிடம், குறிப்பாக இளைய தலைமுறையிடம் பெரியளவில் வரவேற்பு பெற்று, வசூல் குவித்தது. அந்த வெற்றியைத் தொடர்ந்து ஹாட் ஸ்பாட் இரண்டாம் பாகம் உருவாகவிருக்கிறது.
இந்த படத்தை நடிகர் விஷ்ணு விஷாலின், ‘விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ்’ நிறுவனம் வழங்குகிறது. ஹாட் ஸ்பாட் படத்தை தயாரித்த ‘கே ஜெ பி டாக்கீஸ்’, ‘செவன் வாரியர்ஸ்’ நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன.
இந்த மகிழ்ச்சியான தகவலை நடிகர் விஷ்ணு விஷால், இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் மற்றும் தயாரிப்பாளர்கள் இணைந்து அறிவிக்கும் நிகழ்வு சென்னையில் நடந்தது.
நிகழ்வில் பத்திரிகையாளர்கள் முன்னிலையில் இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் பேசியபோது, ”ஹாட் ஸ்பாட் படத்தின் விமர்சனங்களைத் தாண்டி, நீங்கள் தந்த ஆதரவுதான் வெற்றிக்குக் காரணமாக இருந்தது. ஓடிடியிலும் நன்றாகப் போய்க்கொண்டிருக்கிறது. இப்போது இரண்டாம் பாகத்தை, விஷ்ணு விஷால் சார் வழங்குவது மகிழ்ச்சி. இப்படி ஒரு கதையை வழங்க நிறைய தைரியம் வேண்டும். அவர் மிகப்பெரிய மனதுடன் எங்களை ஊக்குவிக்கிறார். முதல் பாகத்தைப் போலவே, இந்த இரண்டாம் பாகமும் உங்களை மகிழ்விக்கும். படத்தில் நடிப்பவர்கள், தொழில் நுட்ப கலைஞர்கள் பற்றிய விவரங்களை விரைவில் தெரிவிக்கிறோம்” என்றார்.
நடிகர் விஷ்ணு விஷால் பேசியபோது, ”ஹாட் ஸ்பாட் 2 நான் இல்லாமல் சாத்தியமில்லை என்று எனக்கு முன்பேசியவர்கள் சொன்னார்கள். ஆனால் அப்படியில்லை, நல்ல படம் கண்டிப்பாக எப்படியாவது வந்தே தீரும். நல்ல படைப்புகள் கண்டிப்பாக வெற்றி பெறும். ஹாட் ஸ்பாட் டிரெய்லர் பார்த்துவிட்டு எனக்குப் பயங்கர கோபம். சினிமா எப்போதும் சமூகத்தில் பாதிப்பைத் தரும் என நம்புபவன் நான். அதனால் எனக்குக் கோபம் வந்தது. எல்லோரும் போல் நானும் இருந்தேன், ஆனால் படம் வந்த பிறகு வந்த பாசிடிவ் விமர்சனங்கள் ஆச்சரியமாக இருந்தது. ஹாட் ஸ்பாட் ஓடிடியில் தான் பார்த்தேன். ஒவ்வொரு கதையும் எனக்கு அவ்வளவு பிடித்தது. எனக்கே என் மகனை எப்படி வளர்க்க வேண்டும் எனப் புரிய வைத்தது. அப்போதே விக்னேஷை அழைத்து பாராட்டினேன்.
இரண்டாம் பாகத்தின் கதையை சொன்னார். மிகவும் பிடித்தது. எனக்குக் கடைசி கதை ரொம்ப பிடித்துள்ளது. பார்க்கும் போது உங்களுக்கும் பிடிக்கும். இந்த 15 வருட அனுபவத்தில் நல்ல கதைகள் தேர்ந்தெடுக்கும் திறமை வந்துள்ளது. ஒரு தயாரிப்பாளராக மாறியுள்ளேன். அதன் முதல் படி ஹாட் ஸ்பாட் 2. விஷ்ணு விஷால் ஸ்டூடியோ மூலம் இன்னும் பல நல்ல படங்கள் தயாரித்து வருகிறோம். தொடர்ந்து நல்ல படங்களைத் தயாரித்து வழங்குவேன்.
கிரியேடிவ் புரொடியூசர் கே வி துரையின் டி நிறுவனத்துடன் இணைந்து பல படங்கள் தயாரித்து வழங்கவுள்ளேன். விரைவில் அதற்கான அறிவிப்பு வெளியாகும்” என்றார்.
நிகழ்வில் ‘செவன் வாரியர்ஸ்’ சார்பில் சுரேஷ் குமார், ‘கே ஜெ பி டாக்கீஸ்’ சார்பில் பாலமணிமார்பன் உள்ளிட்டோர், ஹாட் ஸ்பாட் தந்த வெற்றி குறித்தும், உருவாகவிருக்கும் இரண்டாம் பாகம் குறித்தும் பேசினார்கள்.