இளையராஜா அவர்கள் மாநிலங்களவை உறுப்பினராக பொறுப்பேற்று உலகத்தரத்தில் ஓர் இசைப்பல்கலைக்கழகத்தை தமிழ்நாட்டில் உருவாக்க வேண்டும் என கோரிக்கை வைத்திருக்கிறார் ‘கட்டில்’ பட இயக்குநர் இ.வி. கணேஷ்பாபு.
இசைஞானி இளையராஜா மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்ட செய்தி 6.7. 2022 புதனன்று இரவு 8 மணியளவில் வெளியானது.
சென்னை சத்யம் தியேட்டரில் அப்போது, ‘த வாரியர்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடந்து கொண்டிருந்தது.
பிரமாண்டமான அந்த நிகழ்வில் இயக்குநர்கள் பாரதிராஜா, மணிரத்னம், பார்த்திபன், விக்ரமன், ஆர்.கே.செல்வமணி, விஜய் மில்டன், வசந்தபாலன், எஸ்.ஜெ.சூர்யா, பிருந்தாசாரதி, கார்த்திக் சுப்புராஜ், சிறுத்தை சிவா, தயாரிப்பாளர் அன்புச்செழியன், நடிகர் ஆர்யா, ‘த வாரியர்’ படத்தின் ஹீரோ , ராம் பொதினேனி, ஹீரோயின் கிர்த்தி ஷெட்டி, வில்லனாக நடித்துள்ள ஆதி, முக்கிய வேடத்தில் நடித்துள்ள நதியா என பலரும் கூடியிருந்தனர்.
அந்த நிகழ்வில் பாரதிராஜா பேசிக் கொண்டிருந்தபோது, இளையராஜா பற்றிய செய்தி வரவே, அதையொருவர் துண்டுச் சீட்டில் குறிப்பிட்டுக் காண்பிக்க, உடனடியாக அந்த செய்தியை அறிவித்து, இளையராஜாவைப் பற்றி பெருமையாக சிலவரிகள் சொல்லி, உற்சாகமான குரலில் வாழ்த்தினார். கிட்டத்தட்ட தமிழ்த் திரையுலகிலிருந்து அதுதான் முதல் வாழ்த்தாக இருக்கக்கூடும்.
அதையடுத்து தமிழக முதலமைச்சர், சூப்பர் ஸ்டார் ரஜினி, உலகநாயகன் கமல் என பலரிடமிருந்தும் வாழ்த்துகள் குவிந்து கொண்டிருக்கின்றன!

அந்த வரிசையில் ‘கட்டில்’ பட இயக்குநர் இ.வி. கணேஷ்பாபுவும் தனது சமூகவலைதள பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். வெறுமனே வாழ்த்தாமல், ‘இளையராஜா அவர்கள் மாநிலங்களவை உறுப்பினராக பொறுப்பேற்று உலகத்தரத்தில் ஓர் இசைப் பல்கலைக்கழகத்தை தமிழ்நாட்டில் உருவாக்க வேண்டும்‘ என்ற கோரிக்கையையும் வைத்துள்ளார். தனித்துவமான அந்த வாழ்த்து பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது!
இளையராஜா, கட்டில் பட இயக்குநரின் வேண்டுகோளை ஏற்று, தனது பதவியின் செல்வாக்கை பயன்படுத்தி தமிழ்நாட்டில் இசைப் பல்கலைக்கழகம் உருவாக ஆவன செய்வார் என நம்புவோம்!