டி.எஸ்.பி.யின் இசை அனைத்து திரைப்படங்களிலும் யு.எஸ்.பி.யாக உள்ளது! – ‘தி வாரியர்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகை கீர்த்தி ஷெட்டி பேச்சு

லிங்குசாமி இயக்கத்தில் நடிகர் ராம் பொத்தினேனி நடித்திருக்கும் அதிரடி திரைப்படம் ‘தி வாரியர்.’ கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாக நடித்துள்ளார். ஆதி பினுஷெட்டி வில்லனாக நடித்துள்ளார்.

தமிழ் தெலுங்கு என இரு மொழிகளில் இப்படம் ஜூலை 14-ம் தேதி திரைக்கு வரவுள்ளது. அதையொட்டி பத்திரிகையாளர் சந்திப்பு இன்று சென்னையில் நடைபெற்றது.

பிரமாண்டமான இந்த நிகழ்வில் இயக்குநர்கள் பாரதிராஜா, மணிரத்னம், பார்த்திபன், விக்ரமன், ஆர்.கே.செல்வமணி, விஜய் மில்டன், வசந்தபாலன், எஸ்.ஜெ.சூர்யா, பிருந்தாசாரதி, கார்த்திக் சுப்புராஜ், சிறுத்தை சிவா, தயாரிப்பாளர் அன்புச்செழியன், நடிகர் விஷால், ஆர்யா, ‘த வாரியர்’ படத்தின் ஹீரோ , ராம் பொதினேனி, ஹீரோயின் கீர்த்தி ஷெட்டி, வில்லனாக நடித்துள்ள ஆதி, முக்கிய வேடத்தில் நடித்துள்ள நதியா என பலரும் கலந்துகொண்டனர்.

நிகழ்வில் நடிகர் ராம் பொத்தினேனி பேசுகையில், ”எனது நீண்ட நாள் கனவான தமிழ் சினிமா அறிமுகம் இப்படி பிரமாண்டமாக அமையும் என நினைக்கவில்லை.  ‘புல்லட்’ பாடலை வெற்றியடையச் செய்த அனைவருக்கும் நன்றி. அற்புதமான ஆல்பத்தை வழங்கிய தேவி ஸ்ரீ பிரசாத்துக்கு நன்றி. ஆதி ஒரு சக்திவாய்ந்த கதாபாத்திரத்தில் நடித்ததில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். புல்லட் பாடலை பாடிய சிலம்பரசன் அண்ணனுக்கு நன்றி. இந்த திரைப்படத்திற்கு ஆதரவு தெரிவித்து வரும் சிவகார்த்திகேயன் அண்ணன், சூர்யா சார் மற்றும் பிற பிரபலங்களுக்கு நன்றி. தமிழ் சினிமாவில் இவ்வளவு பிரமாண்டமாக அறிமுகமானதற்கு நானும் கீர்த்தியும் மிகவும் பாக்கியசாலிகள்” என்றார்.

நடிகை கீர்த்தி ஷெட்டி பேசுகையில், ”இங்கே பல சிறந்த திரைப்பட இயக்குநர்கள் இத்திரைப்படத்தை ஆதரிக்கிறார்கள் என்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.  என்னை இந்தப் படத்தில் நடிக்க வைத்த லிங்குசாமி சாருக்கு நன்றி. டிரெய்லரில் சுஜித் சார் தனது காட்சிகளுக்கு பெரும் பராட்டுக்களை பெற்று வருவது, எனக்கு மிகவும் மகிழ்ச்சி. எனக்கு ராமுடன் நிறைய காட்சிகள் உள்ளன, அடுத்து நதியா மேடம். நதியா அம்மாவுடன் வேலை செய்வதை மிகவும் ரசித்தேன் அவரை எனக்கு மிகவும் பிடிக்கும். தயாரிப்பாளர் ஸ்ரீநிவாஸ் சார் சிறந்த ஆதரவை அளித்து வருகிறார், மேலும் அவரது தொடர் வரிசை திரைப்படங்கள் குறித்து நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். DSP சாரின் இசைதான் தான் இதுவரை வெளியான அனைத்து திரைப்படங்களிலும் USP ஆக உள்ளது, மேலும் அவரது அற்புதமான இசையால் தான் படம் இவ்வளவு பிரபலம்  பெற்றுள்ளது. தெலுங்கில் ராம் ஏற்கனவே வாரியர் என்று அழைக்கப்படுகிறார், மேலும் இந்த படம் வெளியான பிறகு தமிழிலும் அவர் அழைக்கப்படுவார். என்னை பற்றி பாசிட்டிவிட்டியை பரப்பி எனக்கு ஆதரவளித்த ரசிகர்களுக்கு நன்றி” என்றார்.

இயக்குநர் பாரதிராஜா பேசுகையில், ”இயக்குனர் லிங்குசாமி காதல் உணர்வு அதிகம் கொண்டவர், அதனால்தான் பல விஷயங்களை ஆக்கப்பூர்வமாக வெளிப்படுத்த முடிகிறது. இந்தப் படத்தில் ராம் மிகச்சிறப்பாக நடித்துள்ளார். கீர்த்தி ஷெட்டி இன்னும் பல வருடங்கள் திரையுலகில் ஆதிக்கம் செலுத்தும் நடிகையாக இருப்பதற்கான அனைத்து அம்சங்களும் குணங்களும் கொண்டவராக இருக்கிறார்” என்றார்.

இயக்குநர் ஆர்.கே.செல்வமணி பேசுகையில், தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் ராம் பொதினேனிக்கு வாரியர்  மிகப்பெரிய திருப்புமுனையாக அமையப் போகிறது. படம் வெளியானதும் அவருக்கு தமிழக ரசிகர்கள் சிவப்பு கம்பளம் விரிக்கப் போகிறார்கள். இந்தப் படத்தின் ரிலீஸுக்குப் பிறகு இயக்குநர் லிங்குசாமி தெலுங்கு திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தப் போகிறார்” என்றார்.

நிகழ்வில் இயக்குநர் வசந்தபாலன் பேசுகையில், ”இந்த விழாவிற்கு,  கிட்டத்தட்ட அனைத்து முன்னணி திரைப்பட இயக்குனர்களையும் வரவழைத்துள்ளதை காண்பதில் மகிழ்ச்சியடைகிறேன். லிங்குசாமியின் நல்ல உள்ளம் தான் இதை நிகழ்த்தியுள்ளது. அவர்தான் உண்மையான போர்வீரன். ராம் பொத்தினேனி தமிழில் ‘காதல்’ படத்தின் மூலம் அறிமுகமாகவிருந்தார். அது அப்போது நடக்கவில்லை. இப்போது தமிழ் சினிமாவிற்கு அவர் வந்ததில் மகிழ்ச்சி. ஆதி திறமையான நடிகர், அவருடன் அரவாணில் பணிபுரிந்தபோது அவரது சிறப்பான நடிப்பை நான் பார்த்திருக்கிறேன். இந்த படத்தின் மூலம் லிங்குசாமி மற்றும் அவரது ஒட்டுமொத்த குழுவும் மாபெரும் வெற்றியை காணப்போகிறது, அதற்கு என் வாழ்த்துகள்” என்றார்.

தயாரிப்பாளர் அன்பு செழியன் பேசுகையில், ”பையா படத்திலிருந்து லிங்குசாமியுடன், நான் பயணித்து வருகிறேன். பையா படத்தின் பாடல்களை கேட்டதில் இருந்தே அது பெரிய வெற்றியடையும் என்று நான் கூறினேன், அதுபோலவே அந்த படம் பெரிய வெற்றி படமாக அமைந்தது. இப்போது, வாரியர் ஒரு பிளாக்பஸ்டர் ஹிட்டாக இருக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்” என்றார்.

நடிகரும் இயக்குநருமான எஸ்.ஜே.சூர்யா பேசுகையில், ”இயக்குநர்   லிங்குசாமி பல பிரச்சனைகளை கடந்து நீண்ட இடைவெளியில் இருந்தார். தன்னைத்தானே மாற்றிக் கொள்ளவும், சரியான நேரத்தில் சரியான திட்டத்துடன் பதிலடி கொடுக்கவும் கடவுள் அவரைத் தயார்படுத்தியுள்ளார் என்று நான் உறுதியாக நம்புகிறேன். என் சொந்த வாழ்க்கையிலும் தொழிலிலும் நானே இதை அனுபவித்திருக்கிறேன். இதை கடந்து அவர் பெரிய வெற்றியை பெறுவார். வாழ்வே மாயம் காலத்திய கமல்ஹாசனின் வசீகரத்தை ராம் பெற்றிருக்கிறார். அவர் சிலம்பரசனின் தம்பியைப் போலவே இருக்கிறார். கீரித்தி ஷெட்டி குறுகிய காலத்தில் பெரிய நட்சத்திரமாகிவிட்டார். சில தனிப்பட்ட வேலைகள் காரணமாக மும்பை சென்று 2-3 மாதங்கள் தங்கியிருந்தேன். நான் மும்பையில் இருக்கும்போதெல்லாம் ஆட்டோ ரிக்ஷாவில் பயணிப்பேன், ஹிந்தியில் புஷ்பா 2 பாடல்களைக் கேட்டு ஆச்சரியப்பட்டேன். தேவி ஸ்ரீ பிரசாத் இவ்வளவு உயரம் எடுப்பார் என்று நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை. தென்னிந்திய மற்றும் வட இந்திய திரைத்துறையின் போக்கு முற்றிலும் மாறிவிட்டது, இப்போது நிறைய மாற்றங்கள் ஏற்படப் போகிறது. வாரியர் குழு அனைவரும் சிறந்த வெற்றியைப் பெற வாழ்த்துகிறேன்” என்றார்.

நடிகரும் இயக்குனருமான ராதாகிருஷ்ணன் பார்த்திபன் பேசுகையில்.., எஸ்.ஜே.சூர்யா சொன்னது போல லிங்குசாமிக்கு இந்த நீண்ட இடைவெளி நல்ல திருப்புமுனையாக அமைந்தது, மேலும் அவர் இயக்கும் ‘வாரியர்’ திரைப்படம் அவருக்கு பெரிய வெற்றிப்படமாக அமையும். ராம் மிகவும் அழகான நடிகர், கீர்த்தி ஷெட்டியுடன் அவரது கெமிஸ்ட்ரி நிறைய வேலை செய்தது. வாரியர் படத்துடன் ஒரே வார இறுதியில் எனது இரவின் நிழல் திரைப்படம் வெளியாகிறது. இந்த இரண்டு படங்களையும் அனைவரும் ஆதரித்து வெற்றியடைய செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.

நடிகை நதியா பேசுகையில், ”இந்த நிகழ்ச்சி எங்கள் அனைவருக்கும் ஒரு சிறப்பு தருணம். லிங்குசாமி சாரை ஒரு நல்ல இயக்குனராக நான் அறிவேன், ஆனால் இன்று நான் அவரை ஒரு நல்ல நண்பராகப் பார்க்கிறேன், அவரது மனதுக்காக தான் இங்கு பலர் கூடியிருக்கிறார்கள். ராம் ஒரு அற்புதமான நடிகர். சமூக ஊடகங்களைப் பற்றி எனக்கு சொல்லி தருவதில் கீர்த்தி எனக்கு செட்டில் பெரும் உதவியாக இருந்தார். இந்தப் படத்தில் ஆதி சிறப்பாக நடித்திருக்கிறார். முதல் நாள் ஷூட்டிங்கில் அவர் மாற்றத்தை பார்த்து வியந்தேன். இவ்வளவு பெரிய திரைப்படத்தை உருவாக்கிய தயாரிப்பாளர் ஸ்ரீனிவாஸ் சாருக்கு நன்றி. இப்படம் மாபெரும் வெற்றியடைய அனைவருக்கும் எனது வாழ்த்துகள்” என்றார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here