‘நாடு நல்லாயிருக்கணும்கிறதுக்காக எதை செஞ்சாலும் தப்பில்ல’ என கருத்து சொல்லும் படம்.
முன்னாள் ராணுவ வீரரான ‘ஆடுகளம்’ நரேன் தன் கொள்கையோடு ஒத்துப் போகிற சிலரை வைத்துக் கொண்டு, சிலருடைய உயிரை பரலோகத்துக்கு அனுப்பிக் கொண்டிருக்கிறார். அவர் அப்படி நடந்து ‘கொல்’வதற்கு காரணம் என்ன? அவர் யாரையெல்லாம் வேட்டையாடுகிறார் என்பது கொஞ்சமே கொஞ்சம் பரபரப்பான திரைக்கதையில்… இயக்கம் தேவகுமார்
கதையின் நாயகியாக வருகிற மேக்னா, கண்களில் இளைஞர்களை கவர்ந்திழுக்கும் மேக்னட் வைத்திருக்கிறார். தன்னை அடையத் துடிக்கும் மூன்று பேரை சாமர்த்தியமாக வசியப்படுத்தி வீழ்த்துவதாகட்டும், இக்கட்டான சூழலில் சுனாமி வேகத்தில் எதிராளிகளைப் பந்தாடுவதாகட்டும், பாடல் காட்சியில் ‘ஐயோ கொல்லுறாளே’ என்று பெருமூச்சு விடத்தோன்றும் அளவுக்கான இளமையின் செழுமையை எந்தளவுக்கு முடியோ அந்தளவுக்கு காட்சிப்படுத்துவதாகட்டும் வருகிற காட்சிகள் அனைத்திலும் தன்னை மட்டுமே கவனிக்க செய்திருக்கிறார்.
சமூக விரோதிகளால் தான் பாதிக்கப்பட, அப்படிப்பட்டவர்களை களையெடுக்க திட்டம் தீட்டுகிற பிரதான கதாபாத்திரத்தில், பிரமாதமாக நடிக்கக்கூடிய ‘ஆடுகளம்’ நரேன். வருகிற காட்சிகள் குறைவென்றாலும் நடிப்பில் நிறைவைத் தர முயற்சித்திருக்கிறார்.
பாண்டி கமல் சமூக விரோதிகளிடம் ஆக்ரோஷம் காட்டும்போது வெளிப்படும் வெறித்தனம் பரவாயில்லை ரகம். இந்த படத்தின் தயாரிப்பாளர் மனோஜ் கிருஷ்ணசாமி, முத்துக்காளை, வெங்கல் ராவ் என மற்ற நடிகர்களின் பங்களிப்பிலும், பரிமளவாசனின் பின்னணி இசையிலும் குறையில்லை.
கதையின் முதன்மை பாத்திரத்தில் வருகிறவர் பொள்ளாச்சி காமவெறியர்களை வேட்டையாட அடுத்தகட்ட பயணத்தை துவங்குவது படத்திலிருக்கும் கவனம் ஈர்க்கும் சங்கதி.
திரைக்கதையில் விறுவிறுப்பு கூட்டியிருந்தால் ‘இந்த கிரைம் தப்பில்ல’, ‘வசூலில் இதை மிஞ்ச வேறில்லை’ என்று சொல்ல வைத்திருக்கும்.