கிரைம் திரில்லரில் கதையில் ஊர் உலகத்துக்கு கருத்துப் பரிமாற்றம் செய்யும் படம்.
அடர்ந்த காடு, இரவு நேரம். ஒரு நபரை முகமூடி அணிந்த ஒரு நபர் கொடூரமாக கழுத்தறுத்துக் கொல்கிறார். அதே விதமாக ஒரு பெண்ணையும் கொல்கிறார். அடுத்ததாக யூ டியூபில் கலக்கிக் கொண்டிருக்கும் ஜோடியை கொல்வதற்காக தூக்கிப்போய், காட்டுக்குள் கட்டி வைத்து சித்ரவதை செய்கிறார். அவர் அப்படி தொடர்ந்து கொலை செய்வது ஏன்? கொலை செய்யப்படுகிறவர்கள் யார்? என்பதே மீதிக் கதை…
படத்தை இயக்கியிருக்கிற சிக்கல் ராஜேஷ் பாசக்கார அண்ணனாக, தங்கையின் இழப்புக்கு பழி வாங்கும் வெறியராக நடிப்பில் இருவேறு முகம் காட்டியிருக்கிறார். அவருக்கு தங்கையாக வருபவர் யூ டியூபில் ஒரு குறிப்பிட்ட நபர் செய்கிற அநியாய அக்கிரமம் பற்றி துணிச்சலாகப் பேசி, அதனால் பின் விளைவுகளைச் சந்திக்கிற நிலைமையை பரவாயில்லை ரகமான நடிப்பில் பரிமாறியிருக்கிறார்.
யூ டியூப் செலிபிரிட்டியாக வருகிற மஹேந்திரன் கனத்த தேகமும் முரட்டுத்தனமான தோற்றத்திலும் இருக்கிறார். அவரது காதலியாக வருகிற நீமா ரே இளமையாக இருக்கிறார்; கவர்ச்சி ததும்ப வலம் வருகிறார். கொலைகாரனிடம் மாட்டிக்கொண்டு அவதிப்படுகிற காட்சியில் இருவரின் நடிப்பும் ஓரளவு கவனம் பெறுகிறது.
சேரன் ராஜ், சிசர் மனோகர் போலீஸ் அதிகாரிகளாக வந்து, காட்டுக்குள் நடையாய் நடந்து மூச்சு வாங்கி கடந்து போகிறார்கள்.
கதைக்களத்துக்கு பொருத்தமான வரிகளில் உருவான பாடல்களுக்கு ஏ.எம்.அசார் தந்திருக்கும் இசை கவர்கிறது. அஸ்மிதா கவர்ச்சி ஆட்டம் போடும் பாடலுக்கான இசை உற்சாகம் தருகிறது.
கதை நிகழ்விடங்கள் காடாகவும் இருள் சூழ்ந்தும் இருக்க அதில் தன் கேமரா கண்களால் வெளிச்சம் புகட்டி காட்சிகளை தரமாக பதிவு செய்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் பாஸ்கர்.
இன்ஸ்டா, யூ டியூப் என சமூக வலைதளங்களில் பிரபலமாக இருக்கிற சிலர் வருமானத்துக்காக எந்த எல்லைக்கும் போகத் தயாராக இருப்பதால், ஆபாசத்தின் உச்சத்தை தொடுவதால் சமூகம் சந்திக்கும் ஆபத்துக்களைப் பட்டியலிட்டு,
அப்படியான தரக்குறைவான நபர்கள் சமூகத்திலிருந்து ஒழிக்கப்பட வேண்டியவர்கள் என ஆத்திர ஆவேசத்துடன் இரவின் விழிகளை உருவாக்கியிருக்கும் இயக்குநர் சிக்கல் ராஜேஷின் சமூக அக்கறையைப் பாராட்டலாம். காட்சிகளில் சுவாரஸ்யம் இருந்திருந்தால் படத்தின் வெற்றிக்காக வாழ்த்தியிருக்கலாம். அதற்கு வாய்ப்பில்லாமல் போயிருக்கிறது.

