ஐந்தாம் வேதம் வெப் சீரிஸ் விமர்சனம்

ஆன்மிகம், அமானுஷ்யம், மந்திர தந்திரம் என பல வருடங்கள் முன் மர்ம தேசம் தொடர் மூலம் மிரட்டலான அனுபவத்தை தந்த நாகா, அதே ஆன்மிக அமானுஷ்யங்களோடு இன்றைய அறிவியலை கூட்டு சேர்த்துக் கொண்டு வெப் சீரிஸ் உலகில் பாதம் பதித்திருக்கும் ‘ஐந்தாம் வேதம்.’

தென்காசியிலுள்ள அய்யங்கார்புரத்துக்கு அனு என்ற இளம்பெண் (சாய் தன்ஷிகா) ஒரு பெட்டியுடன் வந்து சேர்கிறாள். எந்த நேரமும் மொபைல் போனில் ஏ ஐ மூலம் உருவாக்கப்பட்ட பெண்ணுடன் பேசிக் கொண்டேயிருக்கிற இளைஞன் ஒருவன் அனுவுடன் இணைந்து கொள்கிறான்.

ஒரு டாக்டர், தான் அந்த ஊரில் பல வருடங்கள் முன் வாழ்ந்தபோது பயன்படுத்திய கம்ப்யூட்டரை தேடி வருகிறார்.

புகைப்படக் கலைஞரான இளைஞர் ஒருவர் தன் வசமிருக்கும் ஓலைச்சுவடியை எடுத்துக் கொண்டு அந்த ஊர் சிவன் கோயிலில் சில விஷயங்களை ஆராய்ச்சி செய்யும் நோக்கத்தில் வருகிறார்.

ஒரு அப்பா தன் மகளுக்கு தோஷ நிவர்த்தி பரிகாரம் செய்வதற்காக மகளுடன் அந்த ஊருக்கு வந்து தங்குகிறார். அவர் கையில் ஒரு பழங்கால புத்தகத்தை வைத்துக் கொண்டு அவ்வப்போது அந்த ஊர் சிவன் கோயிலின் அமைப்பை, சிலைகளைக் கூர்ந்து கவனிக்கிறார்.

தான் கையாளும் வழக்கு சம்பந்தமாக அதே ஊருக்கு ஓரு பெண் வழக்கறிஞர் வருகிறார்.

அந்த ஊர்த் தலைவரின் தம்பி பிசினஸ் விஷயமாக வெளிநாட்டிலிருந்து அந்த ஊருக்கு வருகிறார்.

ஏ ஐ மூலம் மனிதர்களை உருவாக்க ஒரு பக்கம் படு பயங்கரமான, கொடூரமான முறையில் முயற்சி நடந்து கொண்டிருக்க அதற்கு அனுவுடன் வந்த இளைஞன் பலியாகும் சூழ்நிலை உருவாகிறது.

அந்த ஊரிலிருக்கும் சிவன் கோயிலில் காலங்காலமாக பூஜை செய்து வரும் அர்ச்சகர் குடும்பத்தினர் அதே கோயிலில் மறைந்திருக்கும் ஐந்தாம் வேதத்தை அறிந்து கொள்ள காத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் முயற்சிக்கு பலன் தரும் ரகசியம் அனு கொண்டு வந்துள்ள பெட்டியில் இருப்பதாக தெரிகிறது.

அனு அந்த பெட்டியை பெட்டியை அர்ச்சகர் குடும்பத்திடம் ஒப்படைத்து விட்டு, அங்கிருந்து புறப்படுகிறாள். புறப்பட்டு கொஞ்ச தூரம் பயணித்தபின் மீண்டும் தொடங்கிய இடத்துக்கே வந்து சேர்கிறாள். அவளால் அந்த ஊரை விட்டுப் போகவே முடியவில்லை.

அனு கொடுத்த பெட்டியைத் திறந்தபின் அந்த அர்ச்சகரின் குடும்பத்தில் சில சிக்கல்கள் உருவாகிறது. ஊர்த் தலைவர் கொலை செய்யப்பட காவல்துறை அவரது தம்பியை சந்தேகப்பட்டு விசாரிக்கிறது. இப்படி கதை எப்படி எப்படியோ பயணித்தாலும் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு அத்தனை எபிசோடுகளிலும் தொற்றிக் கொண்டிருக்கிறது.

அந்த பெட்டி அனு மூலம் அர்ச்சகர் குடும்பத்துக்கு வந்து சேர்ந்ததன் பின்னணி என்ன? பெட்டியிலிருந்த ரகசியம் என்ன? அர்ச்சகர் குடும்பம் ஐந்தாம் வேதத்தை கண்டுபிடிக்க முடிந்ததா இல்லையா? இதற்கான பதில்களை ஒவ்வொன்றாக விடுவிக்கின்றன கடைசி இரு எபிசோடுகள்…

கதை அத்தோடு முடியவில்லை. இந்த சீரிஸுக்கு அடுத்த சீஸனும் உண்டு…

அனுவாக சாய் தன்ஷிகா. கை முழுக்க வரையப்பட்டிருக்கும் ‘டாட்டு’க்களும் படு மாடர்னாக அவர் அணியும் உடைகளுமே ‘என்னைப் பார், என் அழகைப் பார் என்பதுபோல் கவனத்தை ஈர்க்க, முதல் இரு எபிசோடுகளையும் கடைசி எபிசோடையும் முழுமையாக ஆக்கிரமித்து இடைப்பட்ட  எபிசோடுகளில் கதையோடு கலந்து கடந்திருக்கிறார். தன்னைச் சுற்றி நிகழ்வதெல்லாம் மர்மமாக இருக்கும் நிலையில் தலை கால் புரியாமல் மனக் குழப்பத்துக்கு ஆளாகி பின்னர் பயத்தின் சதவிகிதம் அதிகரித்து மிரள்கிற காட்சிகளை பொருத்தமான நடிப்பால் பலப்படுத்தியிருக்கிறார்.

மொபைல் போனில் ஏ ஐ மூலம் உருவான பெண்ணிடம் விளையாட்டுத்தனமாக கடலை போட்டுக்கொண்டே, இவன் என்ன குறிக்கோளோடு அனுவோடு சேர்ந்து சுற்றிக் கொண்டிருக்கிறான் என யோசிக்க வைக்கும் விவேக் ராஜகோபால், கிளைமாக்ஸில் வெளிப்படும் விதம் அதிர வைக்கிறது.

அர்ச்சகர்களாக ஒய் ஜி மகேந்திரன், அவரது மகனாக கோபி கண்ணதாசன் கெட்டப்பும் நடிப்பும் நிறைவு. ஒய் ஜி.யின் பேத்தியாக வருகிற பெண்ணின் வெகுளித்தனமும் துறுதுறுப்பும் ரசிக்க வைக்கிறது.

விவேக் எதிர்பார்த்துக் காத்திருக்கும் பெண்ணாக கிரிஷா குருப். சாந்த முகமும் சட்சட்டென மாறும் முகபாவங்களுமாய் மனதைக் கவர்கிறார்.

பெண்ணுக்கு பரிகாரம் அதுஇதுவென சொல்லிக்கொண்டு கோயிலில் நுழைந்து அங்குமிங்கும் நோட்டமிட்டு, தனது நடிப்பின் மூலம் ‘இவர் பெரிதாய் ஏதோ சதி செய்யக் காத்திருக்கிறார்’ என்ற எதிர்பார்ப்பைத் தருகிறார்.

டான்ஸ் மாஸ்டர் ராம்ஜி அகோரி சாமியார் போல் அவ்வப்போது வந்து போகிறார். ஏற்கனவே நாம் அறிந்துள்ள ரி, யஜூர், சாம, அதர்வண வேதங்களாக வருகிற உயரம் குறைவான நான்கு பேர், சாய் தன்ஷிகாவின் தந்தையாக மேத்யூ வர்கீஸ் என சீரிஸில் கச்சிதமாய் நடித்துள்ள நபர்களின் எண்ணிக்கை ஏராளம்… கண்களாலேயே தமது மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

ஒளிப்பதிவில் ஸ்ரீனிவாசன் தேவராஜன், பின்னணி இசையில் ரேவா, எடிட்டிங்கில் ராஜேஷ் எம்.ஆர் என அனைவரின் உழைப்பும் கதைக்களத்தை பலமடங்கு தரம் உயர்த்தியுள்ளன.

ஐந்தாம் வேதம் _ மிரட்டலான மேக்கிங்கில் மர்மதேசத்தின் ஏ ஐ வெர்சன்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here