அப்பா மகன் பாசக்கதையில் கத்தி, ரத்தம், துப்பாக்கி என வன்முறை வெறியாட்டம் ஜாஸ்தியாக கலந்த ‘ஜாஸ்பர்.’
ஜாஸ்பர் பலசாலி; உடம்பில் வினோத விசேஷ சக்தி படைத்தவன். கொலை செய்வதற்கு அஞ்சாதவன். நூற்றுக்கணக்கில் கொலைகள் செய்து குவித்தவன்.
ஹரிஷ் மனைவி மகன் என வாழ்ந்து வருபவர். பேங்க் மேனேஜரான அவரிடம், ஒரு தரப்பினர் பலகோடி ரூபாய் கருப்பு பணத்தை மாற்றி கொடுக்க சொல்கிறார்கள். சட்ட விரோதம் என்று சொல்லி ஹரிஷ் மறுக்க, அவரை கடத்தி துன்புறுத்துகிறார்கள்.
கடத்தப்பட்ட ஹரிஸை காப்பாற்ற தன் உயிரையே இழக்கிற அளவுக்கு இறங்கிப் போராடுகிறார் ஜாஸ்பர்.
ஜாஸ்பருக்கும் ஹரிஷுக்கும் என்ன தொடர்பு, கடத்தல்காரர்களிடமிருந்து ஹரிஷை காப்பாற்ற முடிந்ததா என்பதுதான் மிச்சமிருக்கிற கதை. இயக்கம்: யுவராஜ்.டிஇளவயது ஜாஸ்பர், பேங்க் மேனேஜர் என இரண்டு கதாபாத்திரங்களை சுமந்திருக்கிறார் விவேக் ராஜகோபால். வெட்டுக்குத்து, கொலை, என ரத்தச்சகதியில் கரடு முரடாக வெளிப்படுபவர் அப்படியே நேர்மையான பேங்க் மேனேஜராக சராசரி மனிதராக மற்றொரு கதாபாத்திரத்திலும் சரியாகப் பொருந்துகிறார்.
அண்ணாந்து பார்க்கும் உயரம்; மொட்டைத் தலை தாடி மீசை என மிரட்டல் தோற்றத்தில் நடுத்தர வயது ஜாஸ்பராக சி.எம். பாலா கச்சிதம்!
ஹரீஷின் மனைவியாக லாவண்யா. கணவனை கடத்தியவர்கள் அவரது விரல்களை துண்டித்து அனுப்புவதை பார்த்துக் கதறும்போது பரிதாபத்தைச் சம்பாதிக்கிறார்.
ஐஸ்வர்யா தத்தா சற்றே கனமான கதாபாத்திரத்தில் வந்துபோகிறார்!
வில்லனும் அவரது அடியாட்களாக வருபவர்களும் தங்கள் பங்களிப்பை சரியாக செய்திருக்கிறார்கள்.
பின்னணி இசை மூலம் காட்சிகளின் பரபரப்புக்கு தேவையான சுறுசுறுப்பூட்டியிருக்கிறார் (பிரபல டிரம்ஸ் கலைஞர் சிவமணியின் மகன்) குமரன் சிவமணி.
கதையின் நாயகனுக்கு இருக்கும் வித்தியாசமான உடல்பலம், பாவமன்னிப்பு தருகிற பாதிரியாரே வேறு விதமான முடிவெடுப்பது, டெரரான வில்லன்களின் பின்புலம் என முடிந்தவரை திரைக்கதையில் விறுவிறுப்பு சேர்க்க முயன்றிருக்கிறார் இயக்குநர். அந்த முயற்சிகள் பாஸ்மார்க் மட்டுமே கொடுக்கும்படியிருக்கிறது!