‘ஜோதி’ சினிமா விமர்சனம்

ஜோதி‘ சினிமா விமர்சனம்

சமூக விழிப்புணர்வுப் படங்களின் வரிசையில் மற்றுமொரு படைப்பு. கருவிலிருக்கும் குழந்தையைத் திருடுவதே கதையின் மையக்கரு.

மருத்துவர்களின், மருத்துவத் துறையின் சதிகளை எத்தனையோ படங்களில் பார்த்தாயிற்று. ஜோதியும் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது சற்றே புதிய கோணத்தில்!

ஜோதி நிறைமாதக் கர்ப்பிணியாக, இன்னும் நான்கைந்து நாட்களில் குழந்தை பிறந்துவிடும் என்ற நிலையிலிருக்கிறார். அந்த நேரமாகப் பார்த்து அவரது கணவர் வெளியூர் போய்விட, தனிமையிலிருக்கும் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி யாரோ ஒருவர் ஜோதிக்கு சிசேரியன் செய்து குழந்தையைத் திருடிக் கொண்டு போய்விடுகிறார். சிசேரியன் செய்த வயிற்றை சரியாக தைக்காததால் ரத்தம் வெளியேறிக் கொண்டிருக்க ஜோதி வலியோடு உயிருக்குப் போராடுகிறார்.

படத்தின் ஆரம்பக் காட்சியே இப்படி பயத்தையும் பதற்றத்தையும் கூட்ட, சம்பவத்துக்கு காரணம் யார் என்பதை கண்டுபிடிக்க களமிறங்குகிறது காவல்துறை.

விசாரணையில் பலரும் சந்தேக வட்டத்துக்குள் வர, ஜோதி சிக்கிய சதிவலையைப் பின்னியது யார்? அதற்கான பின்னணி என்ன என்ன? என்ற கேள்விகளுக்குப் பதிலாக திருப்பங்கள் நிறைந்த திரைக்கதை விரிகிறது; அதில் இருக்கும் உண்மைகள் அதிரச் செய்கிறது. இயக்கம்:- ஏ.வி. கிருஷ்ண பரமாத்மா

ஜோதியாக, ஆழமான கதைகளில் மட்டுமே நடிக்கிற ஷீலா ராஜ்குமார். ஒரு ஆணின் கோபத்தை விட ஒரு பெண்ணின் அமைதி ஆபத்தானது என்பதை வெளிப்படுத்தும் அழுத்தமான கதாபாத்திரத்தில் இயல்பான நடிப்பால் கவர்கிறார். குழந்தைத் திருட்டு யாரால் நடந்தது, ஏன் நடந்தது என விவரிக்கும் கிளைமாக்ஸ் காட்சியில் அவரது நடிப்பில் வெளிப்படும் துடிப்புக்கு ஸ்பெஷல் பாராட்டு!

காவல்துறை அதிகாரியாக வெற்றி. எவரைச் சந்தேகப்பட்டாலும் அது தவறாகிவிட மனதில் சூழும் குழப்ப முடிச்சுகளை நெற்றி அசைவுகளின் மூலம் காண்பிப்பது சாமர்த்தியம். மற்றபடி அவருக்கு பெரிதாய் வேலையில்லை!

ஜோதியின் கணவராக, டாக்டராக வருகிற ‘ராட்சசன்’ சரவணன், உயரதிகாரிக்கே ஆலோசனை சொல்கிற அளவுக்கு வலுவான சிந்தனை கொண்ட கான்ஸ்டபிளாக குமரவேல், குழந்தை இல்லா ஏக்கத்தை சரியாக பிரதிபலிக்கிற க்ருஷா குரூப், சொத்துக்காக அக்காவிடம் சண்டையிடுகிற ஹரிணி என இன்னபிற கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர்களின் நடிப்புப் பங்களிப்பு நேர்த்தி!

ரங்கா‘ என்ற எடுபிடி ஆசாமி கதாபாத்திரத்தில், வந்து நியாயத்தின் பக்கம் நின்று கெடுபிடி காட்டுகிற எஸ்.ஆர். ராஜா சேதுபதியே இந்த உருப்படியான படத்தின் தயாரிப்பாளரும் கூட!

செஸி ஜெயாவின் ஒளிப்பதிவு, ஹர்ஷவர்தன் ராமேஸ்வரின் இசை திரைக்கதையோட்டத்துக்கு முடிந்தவரை பலம் சேர்க்கின்றன.

வருடத்திற்கு 40’000 குழந்தைகள் காணாமல் போவதும், அதில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகளைக் கண்டுபிடிக்கவே முடிவதில்லை என்றும் ஜோதி எடுத்துச் சொல்கிற புள்ளி விவரங்கள் அதிர்ச்சி தருபவை!

படம் பார்த்தபின், நமது குழந்தைகளை கவனித்துக் கொள்வதில் அக்கறையும், நம்மைச் சார்ந்த கர்ப்பிணி பெண்கள் மீதும் கவனமும் கூடும். அதுவே படத்தின் வெற்றி!

ஜோதி – மேட்டரும் ஸ்ட்ராங் எளிமையான பட்ஜெட்டில் மேக்கிங்கும் ஸ்ட்ராங்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here