‘ஜோதி’ திரைப்படத்தின் ‘ஆரிராரோ’ என்ற இரண்டாம் பாடல் வெளியீட்டின் சிறப்பு நிகழ்ச்சிக்காக ரேடியோ சிட்டி எஃப்.எம்.மில் படக்குழுவினர் கலந்துகொண்டனர்.
அப்போது அங்கு வந்திருந்த காவல்துறை டி.எஸ்.பி. அய்யா, காவல் துறைக்கே சவாலான கடலூரில் நடந்த மனதை உலுக்கும் உண்மை சம்பவமாகிய குழந்தை திருட்டை வைத்து, அதை முழுநீள திரைப்படமாக எடுத்ததற்கு படக்குழுவினரை மிகவும் பாராட்டி மேலும் இதுபோன்ற உண்மை சம்பவங்களை சமூக விழிப்புணர்வுக்காக மேலும் பலபடங்கள் எடுக்க வேண்டும் என்று ஊக்குவித்தார்.
நிகழ்ச்சியின்போது இயக்குனர் “ஏ.வி. கிருஷ்ண பரமாத்மா” கூறியதாவது, “சென்றவாரம் போவதெங்கே’ என்ற காதல் பாடல் வெளியானது அதை தொடர்ந்து ‘ஆரிராரோ’ என்ற அப்பாவுக்கும் மகளுக்குமான உறவை சொல்லும் விதமாக அமைந்துள்ள இரண்டாம் பாடலை இப்போது வெளியிடுகிறோம். இப்பாடல், ஹர்ஷவர்தன் ரமேஷ்வர் இசையாலும் கார்த்திக் நேத்தா வரிகளாலும், பல்ராம் சாரோட குரலாலும் மிகவும் அழகாக வந்திருக்கிறது. குழந்தைகளை பெற்ற அப்பாக்களும்,அப்பாக்களை போற்றும் குழந்தைகளுக்கும் இப்பாடல் திரும்ப திரும்ப கேட்க கூடியதாக அமைந்திருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. இந்த படம் ஒரு குறிப்பிட்ட சமூக பிரச்சனைக்கு தீர்வாகவும், ரொம்ப எமோஷனலாகவும், திரில்லராகவும் வந்திருக்கிறது. முன்காண் காட்சியை பார்த்தவர்கள் அனைவரும் கண்கலங்கி இப்படியொரு படம் வருவது பெரியவிசியம் என பாராட்டினர். இது எனக்கு மிகப்பெரிய நம்பிக்கையை கொடுத்திருக்கு நிச்சயம் வெற்றிபெரும்” என கூறினார்.
இசையமைப்பாளர் ஹர்ஷவர்தன் ரமேஷ்வர் கூறியதாவது “இதுவரைக்கும் நா மியூசிக் பண்ண படங்கள் எல்லாத்துக்கும் பின்னணி இசை மட்டுந்தான் பண்ணிருக்கேன். முதல்முறையா ஜோதி படத்துலதான் பின்னணி இசையோடு சேர்த்து முழு ஆல்பம் பண்ணிருக்கேன். முதலில் பாடலே இல்லாமல்தான் படம் என்னிடம் வந்தது. படத்தை பார்த்தபின் இயக்குனர் மிகவும் உணர்வுபூர்வமாக படத்தை எடுத்திருக்கிறார் என்று எண்ணினேன். அந்த உணர்வை சிலவற்றை பாடல் மூலம் கொடுத்தால் மிகவும் சிறப்பாக இருக்கும் என்று நினைத்து சொன்னேன். தயாரிப்பாளரும் செலவை பொருட்படுத்தாமல் ஒத்துக்கிட்டார். அனைத்து பாடலுக்கும் லைவ் எடுத்தோம், கிளைமேக்ஸ்ல வரும் பாடலை ஜேசுதாஸ்சார் பாடியிருக்கார்.பாடும்போது அவருக்கே கண்கலங்கிவிட்டது, பாடல் ரொம்ப நல்லா இருக்கு, நீண்ட நாள் கழிச்சி ஒரு நல்ல பாடல் பாடியிருக்கேன்னு சொன்னாரு. அவர் அப்படி சொன்னது எங்களுக்கு வரபிரசாதமாக அமைஞ்சிருக்கு. அந்த பாடலுக்கு டியூன் போடும்போது எனக்கே மனசு ஒருமாதிரி ஆயிடுச்சி.அதன் தாக்கம் அப்படியே இருந்தது, அதுல இருந்து மீண்டு வரதுக்கே ரொம்ப நாளாச்சி” என கூறினார்.
நடிகர் வெற்றி கூறியதாவது, “இந்தபடம் 8 தோட்டாக்கள் படத்தின் நீட்சி என்றே சொல்லலாம். காரணம், அந்த படத்துல என் பொருளான துப்பாக்கியை தொலைத்துவிட்டு அதை கண்டுபிடிக்க தேடி அலைவேன், இந்த படத்துல ஒரு கர்ப்பிணி பெண்ணிடமிருந்து திருடப்பட்ட குழந்தையை கண்டுபிடிக்க தேடி அலைவேன். இந்தபடத்தோட ஸ்கிரிப்ட் கேட்டவுடன் ஸ்கிரிப்ட் நல்லாருக்கு, ஆனா புது teamமா இருக்கு எப்படி பண்ணபோறாங்கனு நெனைச்சேன், சூட்டிங் ஸ்பாட்டுக்குபோய் அவுங்க மேக்கிங் ஸ்டைலை பார்த்ததும் மிரண்டுவிட்டேன். ரொம்ப எக்ஸ்பீரியன்ஸ் டீம்ன்னு தெரிஞ்சிது. டீம் மேல முழு நம்பிக்கை வந்துடுச்சி. முப்பது நாள் இரவு பகலா ஒரே செட்யூலில் எடுத்து முடித்துவிட்டனர். அதுலாம் டீமோட ஆசாத்தியமான விசயம். தயாரிப்பாளர் அனுப்பிய ஆடியன்ஸ் ரெவ்யூ வீடியோவை பார்த்தேன் . நா நெனைச்ச மாதிரியே படம் நல்லா வந்திருக்கு. இந்த படம் பட்டித்தொட்டியெங்கும் சென்று எனக்கு தாய்மார்களின் அன்பை பெற்றுத்தரும் என்று நம்புகிறேன்” என கூறினார்.
பாடலாசிரியர் கார்த்தி நேத்தா கூறியதாவது,
“முதன் முதலில் இயக்குனர் என்னிடம் கதையை சொன்னவுடனே நான் மிரண்டுவிட்டேன். அவர் சொன்ன அதே உணர்வில் எனக்கு மெட்டுகளும் வந்ததால் பத்தே நிமிடத்தில் பாடலை எழுதி முடித்துவிட்டேன். இந்த படத்துல மூனு பாடலை எழுதியிருக்கிறேன். இந்த ‘ஆரிராரோ’ பாடலில் வரும் அப்பா கதாப்பாத்திரம் போன்றுதான் நான் வாழ்ந்து கொண்டிருந்தேன். இந்த பாடலை எழுத கொடுத்த நேரத்தில் எனக்கு குழந்தை பிறந்து இரண்டு மாதமாகி இருந்தது.அந்த நேரத்தில் என் உணர்வை பிரதிபலிக்கும் விதமாக இப்பாட்டின் சூழல் இருந்ததால் என் குழந்தைக்கு எழுதுவதாகவே நினைத்து இப்பாடலை எழுதினேன்.மிகவும் அழகாகவும், ஆழமான வரிகளாகவும் வந்துள்ளது.” என கூறினார்.
தயாரிப்பாளர் SPராஜாசேதுபதி கூறியதாவது,
“எனது சொந்த ஊரான கடலூரில் நடந்த உண்மை சம்பவந்தான் இந்த படத்தின் கரு. அரசு மருத்துவமனையில் நடந்த இந்த சம்பவத்தையும், இதன் பின்னணியும் ஆராயும்போது மனசு ரொம்ப பாதிச்சிது. திரைப்படக் கல்லூரியில் படித்த ஏ.வி. கிருஷ்ண பரமாத்மா எமோஷனல் சார்ந்த ஸ்கிரிப்டை சிறப்பாக ஹேண்டில் பண்ணுவார். அவர் இயக்கிய குறும்படத்தில் அதை பாத்திருக்கேன். அதனால் இந்த சம்பவத்தை படமாக்க இவர் சரியாக என்று நம்பினேன். டி எஸ் பி சாந்தி அவர்களை சந்தித்து இதை சார்ந்த தரவுகளை ஆராய்ந்து விறுவிறுவென வேலைகள் ஆரம்பிக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் என்ன விறுவிறுப்பு இருந்ததோ அதே விறுவிறுப்பை கமர்ஷியலாக முழுநீள திரைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. முன்காண் காட்சியில் படத்தை பார்த்த பார்வையாளர்களுக்கு இந்த சம்பவத்தின் தாக்கம் அப்படியே சென்றடைந்திருக்கிறது. இதுபோன்ற படங்கள் அதிகமாக வரவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தனர். நான் படத்தொகுப்பாளராக பணியாற்றிய முதல் படம் சதுரங்க வேட்டை படத்தை சென்னை உயர்நீதி மன்றத்தில் மேற்கோள் காட்டி ஒரு வழக்கிற்கு தீர்ப்பு வழங்கப்பட்டது. அதனால் இதுபோன்று சமூக பிரச்சனை சார்ந்த படங்கள்தான் எடுக்க வேண்டும் என தீர்க்கமாக இருந்த எனக்கு பார்வையாளர்கள் இப்படி சொன்னது எனக்கு மனநிறைவளிக்கிறது. ‘ஜோதி’ படம் வரும் ஜூலையில் வெளியாக இருக்கிறது அனைவரும் குடும்பத்துடன் வந்து திரையரங்குகளில் பார்த்து எங்களுக்கு பேராதரவு கொடுக்க வேண்டும்” என கூறினார்