30 ஆண்டுகளுக்குப் பிறகு அமலா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘கணம்.’
டைம் டிராவல், தாய்ப்பாசம், அறிவியல் ஆகிய மூன்று அம்சங்களும் கலந்து உருவான இந்த படத்தில், சர்வானந்த், சதீஷ், ரமேஷ் திலக் ஆகியோர் நடித்துள்ளனர். எஸ்.ஆர்.பிரபு தயாரிப்பில் அறிமுக இயக்குனர் ஸ்ரீ கார்த்தி இயக்கியுள்ள இந்த படம் வரும் 9-ம் தேதி தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் வெளியாகிறது.
இந்த நிலையில், படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று (2.9. 2022) சென்னையில் நடந்தது.
நிகழ்வில், நடிகை அமலா ”இந்த படம் எனக்கு மிகமிக சிறப்பான படம். என்னுடைய இளமைக் காலத்தில் ஆதரித்த தமிழ் மக்களிடம் 30 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் அம்மாவாக வந்திருக்கிறேன். எங்கிருந்தாலும், எப்போது இருந்தாலும், எந்த மொழியாக இருந்தாலும், எந்த நாட்டில் இருந்தாலும், எந்த நேரமாக இருந்தாலும் இந்த படம் அனைவரையும் இணைக்கும். உங்களை சிரிக்க வைக்கும் அர்த்தமுள்ள படம். ஆழமான அன்பை உணர்வுபூர்வமாக அழகாக கொடுத்திருக்கிறார் ஸ்ரீ கார்த்திக். அம்மாவாக இருக்கும் அனைவருக்கும், போராட்டங்களோடு வாழ்ந்து கொண்டிருப்பவர்களுக்கும் இப்படம் நெருக்கமாக இருக்கும்.
இந்த படத்தில் ஒரு பகுதியாக இருப்பதில் பெருமையடைகிறேன். இந்த கதாபாத்திரம் கொடுத்ததற்கு ஸ்ரீ கார்த்திக்கு நன்றி. உங்கள் அம்மாதான் இந்த படத்திற்கு உத்வேகம் கொடுத்தார் என்று எனக்கு தெரியும். இந்தப்படத்தை அவரும் நம்முடன் பார்த்து நிச்சயம் ஆசீர்வதிப்பார் என்று நம்புகிறேன்.
நான் எந்த படம் பார்த்தாலும் பார்வையாளராக தான் பார்ப்பேன். வரும் செப்டம்பர் 9-ம் தேதியும் இப்படத்தை பார்வையாளராக பார்க்க ஆவலாக உள்ளேன்” என்றார்.
நடிகர் ஷர்வானந்த், ”எங்கேயும் எப்போதும் படத்திற்கு பிறகு ஏன் நீங்கள் தமிழில் நடிக்கவில்லை என்று கேட்டார்கள். கணம் படம் போன்று கதைக்காக தான் காத்து கொண்டிருந்தேன். நான் கதையை மட்டுமே நம்பி இருக்கிறேன். நமக்கு எப்போதும் எஸ். ஆர்.பிரபு போன்ற தயாரிப்பாளர்கள் தேவை. இப்படத்திற்கு தூண் போல் இருந்திருக்கிறார். ரவி ராகவேந்திரா போன்று அருமையான நடிகரை யாரும் பார்க்க முடியாது. நாசர் சார், ரீத்து வர்மா இயற்கையாக நடிக்க கூடியவர்கள். இப்படத்தின் மூலம் சதீசும், ரமேஷும் நண்பர்களாக கிடைத்திருக்கிறார்கள்.
அமலா மேடமை எப்போது பார்த்தாலும் அம்மாவாக தான் தோன்றும். இந்த படம் இயக்குநர் ஸ்ரீ கார்த்திக் படம். இன்னும் 5 வருடங்களுக்கு இது போன்று படம் வருவது சாத்தியமில்லை. இந்தியாவின் சிறந்த இயக்குநராக வருவார் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை” என்றார்.
நடிகர் நாசர், ”இந்தியாவில் இது போன்று படம் அதிகம் வருவதில்லை. ஸ்ரீ கார்த்திக் கதை கூறும் போது குழந்தை மாதிரி மாறி விட்டேன். நிறைய பேசினோம் இந்த விஷயங்கள் புரியாது அந்த விஷயங்கள் புரியாது, என்று பல மணி நேரம் சண்டை கூட போட்டு இருக்கிறேன். இந்தக் கதையை ஜுராசிக் பார்க் படத்தில் அந்தத் தாத்தா கூறுவதுபோல விளக்கமாக கூறினால் தான் புரியும் என்றேன். ஆனால் இப்படம் எனக்கு அற்புதமான பயணமாக இருந்தது.
அறிவியலைப் பற்றியும், எதிர்காலத்தை பற்றியும் நிறைய விஷயங்களை பேசினோம். இந்த குழுவுடன் பணியாற்றியதில் 30 வயது குறைந்தது போல உணர்ந்தேன். இந்த படத்தைப் பார்க்கும் அனைவருக்கும் இந்த தருணம் மறுபடியும் கிடைத்தால் நான் தவறு செய்யும்போது அதை செய்யாமல் இருக்க முடியாதா? என்று தோன்றும்” என்றார்.
கவிஞர் மதன் கார்க்கி, ”டைம் ட்ராவல், அறிவியல் புனை கதைகள் கொண்ட படங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். பொதுவாக டைம் ட்ராவல் படங்கள் என்றாலே உலகம் அழியப்போகிறது என்பது போன்ற பெரிய விஷயங்களை தான் பயன்படுத்துவார்கள். ஆனால், பாசத்தை மையமாக வைத்து டைம் ட்ராவல் படத்தை அழகாக நகர்த்த முடியும் என்று இயக்குநர் ஸ்ரீ கார்த்திக் திரைக்கதையில் செய்துக் காட்டியிருக்கிறார். இசையில் மெலடியை அழகாக கொடுத்திருக்கிறார். அந்தப் பாடலில் பணியாற்றும்போது, நேரத்தை கைப்பற்ற முடிந்தது. அப்படத்தில் ‘இன்னும் நேரா காயங்களை எப்படி ஆற்ற’ என்ற வரிகள் மிகவும் எனக்கு பிடிக்கும். என்ன நடந்து கொண்டிருக்கிறது என்று அவனுக்கு தெரியும். ஆனால், அந்த காயம் இன்னும் வரவில்லை. இப்படி இன்னும் நேராத காயத்தை எப்படி நான் ஆற்றப் போகிறேன்? என்று கேட்கக்கூடிய கேள்வி தான் அந்த வரி. ஒரு நபர் நீங்கள் எந்த இடத்தில் இருக்கிறீர்களோ?அவர்களும் அதே இடத்தில் தான் இருக்கிறார்கள். ஆனால், காலம் உங்களைப் பிரித்து வைத்துவிடும்.
பொதுவாக நாம் இங்கிருந்து இவ்வளவு கிலோமீட்டர் என்று புவியியல் தூரங்களை பற்றி தான் பேசுவோம். ஒரே இடத்தில் இருந்துகொண்டே நேரம் தூரமாக இருக்க முடியுமா? இருவரும் ஒரே இடத்தில் இருக்கிறார்கள் ஆனால், வெவ்வேறு காலகட்டத்தில் இருக்கிறார்கள். அப்போது அந்த நேரத்தை கைப்பற்றக் கூடிய வரிகளை ஆராய முடிந்ததற்கு ஸ்ரீக்கு நன்றி. இதுமாதிரி புது புது வகையான படங்கள் வரும்போதுதான் சவாலான வரிகளை எழுத முடியும். வித்தியாசமான விஷயங்களையும் செய்ய முடியும்” என்றார்.