‘ஆகாச வீதிலு’ (தெலுங்கு) சினிமா விமர்சனம்

ஆகாச வீதிலு‘ (Aakasa Veedhullo) சினிமா விமர்சனம்

தெலுங்கு தேசத்தின் காரசார கமர்ஷியல் அம்சங்களோடு கருத்தும் சொல்கிற ஒரு படம்!

ஹீரோ இசையைக் காதலிப்பவர். கூடவே அழகான பெண்ணையும் காதலிக்கிறார்! அந்த ஜோடி நினைத்த போதெல்லாம் இதழோடு இதழ் சேர்க்கிறார்கள்; வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் உடலோடு உடல் சேர்கிறார்கள். காமத்தைத் தாண்டி இருவருக்குள்ளும் உண்மையான காதல் இருந்தும் அவர்கள் மணவாழ்க்கையில் இணைவதில் இழுபறி நீடித்து பின்னர் பிரிகிற சூழலும் உருவாகிறது.

பிரிவதற்கான காரணம் என்ன? பிரிந்தவர்கள் சேர்ந்தார்களா? இல்லையா? தொடரும் திரைக்கதையில் பதில்கள் இருக்கிறது, காட்சிகள் பரபரப்பாகவும் விறுவிறுப்பாகவும் இருக்கிறது.

இளமையான முகவெட்டு, கம்பீர உடற்கட்டு, ரொமான்ஸ் காட்சிகளில் தென்றல், சண்டைக் காட்சிகளில் புயல் என ஹீரோவுக்காக அத்தனை அம்சங்களோடும் இருக்கிறார் கெளதம் கிருஷ்ணா. படத்தை இயக்கியிருப்பவரும் அவரே!

கெளதம் கிருஷ்ணா ஹீரோயினை வளைத்து வளைத்து உதடுகளை கவ்வுவதற்கே மனிதருக்கு நேரம் சரியாக இருக்கிறது. இடையிடையே காதல் தோல்வியில் கலங்குவதும், போதைக்கு அடிமையாகி முடங்குவதும், பின் திறமையால் உலகைத் திரும்பிப் பார்க்க வைப்பதுமாய் படம் நெடுக கவனம் ஈர்க்கிறார்.

பளபள தோற்றம், தளதள தேகம், கவர்ச்சி கால் பங்கு,
காமம் முக்கால் பங்கு என கலக்கல் காம்போவாக ஹீரோயின் பூஜிதா பொன்னாடா. லிப்லாக் சீன்களில் அம்மணியின் பாய்ச்சலும் உணர்ச்சி வசப்படும் காட்சிகளில் கண்கள் அதிர்வதும் அழகு!

இன்னபிற கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர்களும் படத்துக்கு பலம் சேர்த்திருக்கிறார்கள்.

நாயகனின் அப்பா நாயகனின் படிப்பு இன்னபிற விவரங்களை விசாரித்து நிராகரிப்பதெல்லாம் பல படங்களில் பார்த்தவை!

விஸ்வநாத் ரெட்டி ஒளிப்பதிவில் காதல் சில்மிஷக் காட்சிகள் கண்களுக்கு இதம்!

ஜுடா சாந்தியின் இசையில் சித் ஸ்ரீராம் குரல் ரசிக்க வைக்கிறது. அதிரடி இசையோடும் ஒன்றிரண்டு பாடல்கள் உற்சாகமாய் தெறிக்கின்றன!

சிலபல குறைகள் இருந்தாலும் இளைய தலைமுறை ரசிக்க ஆகாச வீதியில் அநேக சங்கதிகள் உண்டு. கூடவே ‘ஒரு காதல் போனால் இன்னொரு காதல் வரும். அதற்காக போதைக்கு அடிமையாகி வாழ்வைத் தொலைக்காதீர்கள், உங்களிடமிருக்கும் திறமையைக் கொண்டு உலகை உங்கள் பக்கம் திருப்புங்கள்‘ என்ற அறிவுரையும் உண்டு!

அப்புறமென்ன… ஆகாச வீதிலுக்கு ஆன்லைனில் டிக்கெட் போடலாமே!

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here